The wonder of the Western Ghats 
பசுமை / சுற்றுச்சூழல்

5000 வகைக்கும் மேற்பட்ட மலர்கள் மலரும் மலைத்தொடர் எது தெரியுமா?

கோவீ.ராஜேந்திரன்

லகில் உள்ள 34 பல்லுயிரிய செழுமைமிக்க (biodiversity hotspot) பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று. இந்தியாவின் 80 சதவீத விவசாய வளத்திற்குக் காரணமே மேற்கு தொடர்ச்சி மலைதான். ஏறக்குறைய 100 கோடி ஆண்டுகளுக்கு முன் தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக உருவான புவியியல் அமைப்பே தற்போதைய மேற்குத் தொடர்ச்சி மலை என்கிறார்கள் புவியியல் வல்லுநர்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய நாட்டின் மேற்குப் புறத்தில் அரபிக் கடலுக்கு இணையாக அமைந்துள்ள ஓர் அழகிய மலைத்தொடராகும். இது மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே ஆரம்பிக்கின்றது. பின்பு மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களின் வழியாகச் செல்லும் இந்த மலைத்தொடர் கன்னியாகுமரியில் தனது பயணத்தை முடிக்கின்றது. இதன் நீளம் ஏறக்குறைய 1,600 கி.மீ. இதன் சராசரி உயரம் 900 மீ. இந்த மொத்த மலைத்தொடர்களின் பரப்பளவு ஏறக்குறைய 1,60,000 சதுர கி.மீ. ஆகும்.

இதன் மிக உயரமான சிகரம் ஆனைமுடி (2,695 மீ.). இது கேரளாவில் அமைந்துள்ளது. இதுவே தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் ஆகும். நீலகிரி மலை, ஆனை மலை, பழனி மலை, கொடைக்கானல் மலை, குற்றால மலை, மகேந்திரகிரி மலை, அகத்தியர் மலை (பொதிகை மலை), ஏலக்காய் மலை ஆகியவை மேற்கு மலைத்தொடரில் நமக்குத் தெரிந்த மலைகளின் பெயர்கள்.

உலகில் பல்லுயிர் வளம் மிக்க 8 இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்று. இங்கு ஏறக்குறைய, 139 வகை பாலூட்டிகளும், 5000 வகை பூக்கும் தாவரங்களும், 508 வகை பறவைகளும், நிலத்திலும் நீரிலும் வாழ்கின்ற 176 வகை உயிரினங்களும் உள்ளன. அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப் பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப் பொழிவையே பெறுகிறது.

பாலக்காட்டு கணவாய், செங்கோட்டைக் கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் மற்றும் அச்சன்கோவில் கணவாய் ஆகியன இத்தொடரின் முக்கிய கணவாய்களாகும். அதோடு, மருத்துவ மூலிகைகளை வழங்கும் சதுரகிரி மலை, அழகர்மலை, பாபநாசம் மலை போன்றவைகளும் இந்த மலைத் தொடரில்தான் உள்ளன. இந்தியாவின் பிரம்மாண்டமான ஜோக் நீர் வீழ்ச்சி, குற்றாலம், சிவ சமுத்திரா அருவி, கல்கட்டி அருவி, பாண தீர்த்தம் என புகழ் பெற்ற 10 பெரிய அருவிகளும் மற்றும் பல சின்னச் சின்ன அருவிகளைக் கொண்டு நீர் வளத்தை அள்ளி வழங்குகிறது.

இந்திய தவளை இனங்களில் அதிகமான இனங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளில்தான் காணப்படுகின்றன. அதிலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் 80 சதவீத தவளை இனங்கள் உலகில் வேறு எங்கும் காணப்படாதது. தென்னிந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகின்றன. இங்கு உருவாகி கிழக்கு நோக்கி தக்காண பீடபூமி வழியாகப் பாய்ந்து, வங்காள விரிகுடாவில் கலக்கும் முக்கியமான ஆறுகள் சில கோதாவரி, கிருஷ்ணா, காவிரி மற்றும் தாமிரபரணி. கோவையில் சிறுவாணி உலகின் இரண்டாம் சுவைமிகு நீர், பவானி, நொய்யல் என 28 நதிகள் இதில் பிறக்கின்றன. இவை தவிர, பல சிறு ஆறுகள் இம்மலைத்தொடரில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன.

களக்காடு, ஆனைமலை, ஆரண்யம், அகத்தியர் மலை, இரவிக்குளம் என பல புகழ் பெற்ற வன பூங்காக்கள் இந்த மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ளன. கர்நாடகா பகுதியில் உள்ள மொல்லம் வனப்பகுதி 240 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த பசுமையான காடுகளைக் கொண்டுள்ளது. இங்கு இருக்கும் ஏரியில் 286 வகையான பறவைகள் உள்ளன. இதுவரை 75 வகையான எறும்புகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 7 இனங்கள் இந்தக் காட்டில் மட்டுமே காணப்படும் அரிய வகையைச் சேர்ந்தவை. இந்த காரணங்களுக்காக யுனெஸ்கோவின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாக உள்ளது.

மூச்சரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT