ஈஸ்டர் தீவின்மோவாய் சிலைகள் 
பசுமை / சுற்றுச்சூழல்

ஈஸ்டர் தீவின் மர்மமான மோவாய் சிலைகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

தென்கிழக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது ஈஸ்டர் தீவு. ‘ராபா நுய்’ என்று அழைக்கப்படும் இது ஒரு சிறிய தீவாகும். இது சிலியின் ஒரு பகுதியாகவும், உலகில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் தீவுகளில் ஒன்றாகவும் உள்ளது. இந்தத் தீவின் சின்னமான பெரிய கல் சிலைகள் ராபா நுய் மக்களால் 13ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை.

ஈஸ்டர் தீவின் வரலாறு மர்மமாக மறைக்கப்பட்டுள்ளது. இத்தீவின் குடிமக்களான ராபா நுய் மக்கள் தனித்துவமான கலாசாரம் மற்றும் நாகரிகத்தை உருவாக்கினர். இதில் மோவாய் சிலைகளின் கட்டுமானங்களும் அடங்கும். சுமார் 1000 மோவாய் சிலைகள் இத்தீவில் உள்ளன. மிகவும் பழைமையான மனித உருவ சிலைகள், ‘ராபா நுய்’ என்றழைக்கப்படும் தீவில் காணப்படுகின்றன. இவை உலகின் மிகவும் விசித்திரமான மற்றும் பிரபலமான சிற்பங்களாகும்.

இந்தச் சிலைகளில் பெரும்பாலானவை பூமிக்குள் புதைக்கப்பட்ட உடல்கள் இருப்பதாகவும் இவை பண்டைய ஈஸ்டர் தீவு நாகரிகத்தை பறைசாற்றுவதாகவும் உள்ளன. எல்லையற்ற புல்வெளிகளுக்கு மத்தியில் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றும் இந்தத் தீவில் நிலத்திற்கு வெளியே தலை குனிந்தபடி ஏராளமான சிலைகளைக் காணலாம்.

2022 அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட காட்டு தீ விபத்தினால் இந்த சிலைகள் பல சிதைந்துள்ளன. 1995ல் ஈஸ்டர் தீவை உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ அறிவித்தது. தீவின் பெரும்பாலான புனித தளங்கள் ராபா நுய் தேசிய பூங்காவிற்குள் பாதுகாக்கப்படுகின்றன. ஈஸ்டர் தீவில் தற்பொழுது சுமார் 8,600 ராபா நுய் மக்கள் வசிக்கின்றனர்.

மோவாய் எனப்படும் எரிமலை பாறையில் செதுக்கப்பட்ட உயரமான உருவங்கள் ஆகும் இச்சிலைகள். நீண்ட சிரிக்காத முகங்கள், பருந்து போன்ற மூக்குகள் மற்றும் அடைகாக்கும் புருவங்களைக் கொண்ட இந்த உயரமான சிலைகள் நிலத்தை கண்காணிப்பது போல் இருக்கும். இந்தச் சிறிய தீவு முழுவதும் இந்த மோவாய் சிலைகளை நம்மால் காண முடியும்.

தென் பசிபிக் பகுதியில் உள்ள சிறிய நிலப்பரப்பு தொடர்ச்சியான எரிமலை வெடிப்புகளால் உருவானதாக நம்பப்படுகிறது. இங்குள்ள முதல் குடியேற்றங்கள் கிபி 4ம் நூற்றாண்டை சேர்ந்தவை. பாலினேசியர்கள் இரட்டை படகுகளில் இறங்கி இங்கு கிராமங்களை ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தீவின் தென்மேற்கு பகுதியில் ரானோ காவில் நன்னீர் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வடகிழக்கிலுள்ள ரானோ  ரராகு என்பது மோவாய் வெட்டப்பட்ட கடினமான டஃப் (சுருக்கப்பட்ட எரிமலை சாம்பல்) குவாரியாகும். ரானோ ரராகு எரிமலையின் எரிமலை குழிக்குள் அமைந்துள்ள ஏரியில் பாதி புதைந்த நிலையில் மோவாய் சிலை ஒன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

பண்டைய பாலினேசியர்கள் முதலில் தரை இறங்கியதாகக் கூறப்படும் இடம் அனகேனாவின் கரையில் அமைந்துள்ளது. இங்கு ஏழு மோவாய்களின் சிலைகள் வரிசையாகக் காணப்படுகின்றன. அவற்றில் சில மேலாடைகளை அணிந்து காணப்படுகின்றன.

மௌங்கா தெரேவகா இத்தீவின் மிக  உயரமான இடமாகும். கால்நடையாகவோ அல்லது குதிரையில் சென்றோதான் இந்த இடத்தை அடைய முடியும். இந்த உயரமான இடத்திலிருந்து பார்க்கும்பொழுது தீவு மிகவும் அழகாகக் காட்சியளிக்கும். இந்த மோவாய் சிலைகள் வரலாற்று ஆசிரியர்களுக்கும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு மர்மமாகவே உள்ளது. ராபா நுய் மக்களின் மூதாதையர்களால் கட்டப்பட்டவை என்றாலும் இதன் நோக்கம் இன்னும் தெளிவாக இல்லை. நீர்நிலைகளைச் சுற்றி ஏராளமான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் சிலைகளுக்கும் நீர்நிலைகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் யூகிக்கிறார்கள்.

சிலியின் சாண்டியாகோவிலிருந்து ராபா நுய்க்கு விமான போக்குவரத்து உள்ளது. சாண்டியாகோ உலகெங்கிலும் உள்ள முக்கிய விமான நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மூச்சரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT