healthy recipes 
உணவு / சமையல்

புதிய சுவையில் ஆரோக்கியமான சமையல் ரெசிபிகள் செய்து அசத்துங்க..!

கலைமதி சிவகுரு

ராகி இட்லி, கீரை குழம்பு சட்னி, வெந்தயக்கீரை பாசிப்பருப்பு அடை, கடலைமாவு  அவியல் மற்றும் முருங்கைக்கீரை துவையல்...

ராகி இட்லி

தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 1 கப்

உளுத்தம் பருப்பு – ½ கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை: உளுத்தம் பருப்பை நன்றாக ஊறவைத்து அரைத்து விடவும். இதில் ராகி மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து புளிக்க விடவும். பின் இட்லி பாத்திரத்தில் ஊற்றி ஆவியில் வேகவைக்கவும். சுவையான, சத்தான ராகி இட்லி தயார்.

கீரைக்குழம்பு சட்னி

தேவையான பொருட்கள்:

கீரை – 1 கட்டு (பசலை, முளைக்கீரை, மட்டைக்கீரை வகைகள் ஏதாவது)

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 1

பூண்டு – 5 பல்

சீரகம் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய கீரை, மிளகாய் தூள், சீரகம், உப்பு சேர்த்து மூடி வேகவிடவும். பின் இதை மிக்சியில் அடித்து சட்னி போல அரைத்துக் கொள்ளவும். இது சப்பாத்தி, இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும்.

வெந்தயக்கீரை பாசிப்பருப்பு அடை

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை – 1 கட்டு

பாசிப்பருப்பு – ½ கப்

சிறிய வெங்காயம் – ¼ கப்

காய்ந்த மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை: பாசிப்பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும். மிக்சியில் பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். வெந்தயக்கீரை, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து திடமான மாவு போல தயாரிக்கவும். தேவையான எண்ணெய் ஊற்றி தோசை போல ஆவியை மூடி வேகவிடவும். சுவையான வெந்தயக்கீரை பாசிப்பருப்பு அடை தயார்.

கடலை மாவு அவியல்

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கப்

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை: கடலை மாவு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து பொடியாக விரவி ஆவியை மூடி வேகவிடவும். பின்னர் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி சுண்டிய கடலை மாவை சேர்த்து கிளறவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து சூடான அவியல் தயாராகும்.

முருங்கை கீரை துவையல்

தேவையான பொருட்கள்:

முருங்கை கீரை – 1 கப்

கொத்தமல்லி இலை – சிறிது

பச்சை மிளகாய் – 2 அல்லது 3

பூண்டு – 3 பற்கள்

உப்பு – தேவைக்கு

கொத்தமல்லி விதை – ½ ஸ்பூன்

சீரகம் – ½ ஸ்பூன்

கருவேப்பிலை – சிறிதளவு

தேங்காய் துருவல் – 4 ஸ்பூன்

நல்லெண்ணெய்  – 1 ஸ்பூன்

புளி – சிறிய துண்டு

செய்முறை:

முதலில் முருங்கை கீரையை நன்கு கழுவி, தண்ணீர் வடித்து விடவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானபின், பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி விதை, சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் முருங்கை கீரையைச் சேர்த்து வதக்கவும். கீரை சிறிது வதங்கி வந்தபின், அதனை கடாயிலிருந்து எடுத்து சிறிது ஆறியப் பின் இதனுடன் தேங்காய் துருவல், புளி மற்றும் தேவையான உப்பைச் சேர்த்து, மிக்சியில் மொத்தமாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் தேவையான அளவு மட்டுமே சேர்த்து, கடினமான துவையல் பதத்துக்கு அரைக்கவும். அரைத்த துவையலை ஒரு பாத்திரத்தில் எடுத்து பரிமாறலாம். இது சாதத்தோடு அருமையான சுவையைத் தரும், ஆரோக்கியமான துவையலாக இருக்கும்.

இன்றைய தலைமுறையினரை ஆட்டிவைக்கும் ஸ்மார்ட் போன்களின் 'தாத்தா'வுக்கு வயது 30!

Heart Attack Vs. Cardiac Arrest: இரண்டிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

கடிகாரங்கள் காட்டும் 10 மணி 10 நிமிடம் - தத்துவம் என்ன?

இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் 5 பானங்கள்!

தமிழ்நாட்டைத் துருக்கியாக்கி, கேரளாவை ஈராக்காக்கி... என்னங்கடா சொல்லவறீங்க?

SCROLL FOR NEXT