Raw Jackfruit Biryani  
உணவு / சமையல்

பலாக்காய் பிரியாணி - அம்புட்டு ருசி!

பிரபு சங்கர்

பலாப்பழச் சுவையை அறிந்திருக்கும் நாம் பலாக்காய் சுவையை அறிந்திருக்கிறோமா? சந்தேகம்தான். பழம் இனிப்பு சுவையை மட்டுமே தரும். தேன், வெல்லம் போன்ற இனிப்பான பொருட்களுடன் சேர்ந்து அல்வா, பாயசம், ஜாம், சிப்ஸ் என்று பல வடிவங்களில் தயாரானாலும், அவை எல்லாமே இனிப்புச் சுவைதான். ஆனால் பலாக்காயோ புளி, காரம், உப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து பிற ருசிகளையும் தரும். 

பலாக்காயின் பலன்களை அனுபவித்து வருபவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்களும், கேரளத்தவர்களும் தான். பலாக்காயில் அதிக வைட்டமின்களும், தாதுக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன; இந்த காயை சமைத்து உண்ணும் பொழுது இறைச்சியை உண்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக அசைவப் பிரியர்கள் சொல்கிறார்கள். இந்தவகையில், பலாக்காய் நிறைய அசைவர்களை சைவர்களாக மாற்றியிருக்கிறது என்றே சொல்லலாம். 

பலாக்காய் கொண்டு தயாரித்த உணவுகளை உண்டு வந்தால், அடிக்கடி பசி ஏற்படும் உணர்வும் தவிர்க்கப்படும். பலாக்காய் பசி தாங்கும் நல்ல உணவாக செயல்படுகிறது; பசி உணர்வையும், களைப்பையும் போக்குகிறது.

சரி, இப்போது பலாக்காயால் தயாரிக்கப்படும் ஒரு உணவுவகையைப் பார்க்கலாமா?

பலாக்காய் பிரியாணி:

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி –  ஒன்றரை கப்
நறுக்கிய பலாக்காய் - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
தயிர் - அரை கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பிரியாணி மசாலா – ஒன்றரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 அல்லது 4
புதினா இலைகள் - சிறிதளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

அரைக்க:

முழு முந்திரி - 8
பட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - 2
பூண்டு - 8 பல்
இஞ்சி - ஒரு சிறு துண்டு

தாளிக்க:

எண்ணெய் அல்லது நெய் - 5 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
ஏலக்காய் - 2
சீரகம் - 2 டீஸ்பூன்

எப்படித் தயாரிப்பது?

பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். வெங்காயத்தை ஸ்லைஸ்களாக நறுக்கிக் கொள்ளுங்கள். தக்காளியை பொடியாக நறுக்கவும். அரைப்பதற்காக எடுத்து வைத்தவற்றை மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இளசான பலாக்காயாக தேர்ந்தெடுத்து, தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் காய்ப்பகுதியை நீளமாக நறுக்கி வைக்கவும். (பலாப்பழம் போல சடை மூடிக் கொண்டிருக்காது என்பதாலும், கொட்டையும் பிஞ்சாக இருக்கும் என்பதாலும், அப்படியே நறுக்கிக் கொள்ளலாம்.) பிறகு இந்த நீளத் துண்டுகளை எண்ணெயில் பொரித்தெடுத்து டிஷ்யூ பேப்பரில் வைத்து அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சப்பட்டதும், எடுத்துத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். சூடானதும் தாளிக்கக் கொடுத்தவற்றோடு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வதக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போக கிளறி, எண்ணெய் பிரிந்து வரும்வரை வேகவிடுங்கள்.

இப்போது இத்துடன் தக்காளி, உப்பு, பிரியாணி மசாலா, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி கரையும் வரை நன்கு வதக்குங்கள். பிறகு புதினா, கொத்தமல்லி இலைகள் மற்றும் தயிர் சேர்த்து இன்னும் இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். இத்துடன் பொரித்தெடுத்த பலாக்காயைச் சேர்த்து  எல்லாவற்றையும் மொத்தமாக குக்கரில் போட்டு ஸிம்மில் இரண்டு நிமிடம் வேகவிடுங்கள். பிறகு ஒன்றே முக்கால் கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போடுங்கள். இத்துடன் ஊறிய அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். தீயை ஸிம்மிலேயே வைத்து 15 நிமிடங்களுக்கு வேகவிடுங்கள். இடையில் லேசாக திறந்து அடிப்பிடிக்காதவாறு கிளறிவிட்டு பிறகு மூடிப்போட்டு வேகவிடுங்கள்.

இறுதியாக குக்கரைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிக் கொள்ளுங்கள். 

ஆனியன் ரைத்தாவுடன் சேர்த்துப் பரிமாறுங்கள், அமர்க்களமாக இருக்கும் பலாக்காய் பிரியாணி!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

உங்க பெண் குழந்தைக்கு இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!  

நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?

உலகிலேயே விலையுயர்ந்த பாஸ்போர்ட் இதுதான்! இதன் விலை எவ்வளவு தெரியுமா?

காலிஃப்ளவர் சமைக்கும் முன் இதை செய்யத் தவறாதீர்கள்! 

SCROLL FOR NEXT