நாம் தினமும் பல் துலக்க உபயோகப்படுத்தும் டூத் பிரஷ் பழசானதும், வேண்டாம் என தூக்கி எறிகிறோம் அல்லவா? ஆனால், அது எத்தனை விஷயங்களுக்குப் பயன்படும் என்று தெரிந்தால் தூக்கி ஏறிய மாட்டீர்கள். பழைய டூத் பிரஷ்ஷின் கலக்கல் பயன்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. தலை வாரும் சீப்பு, எண்ணெய்யும் அழுக்குமாக நிறைந்து இருக்கும். அதை அப்படியே தொடர்ந்து உபயோகித்தால், தலையில் பொடுகும், அழுக்கும் சேர்ந்து விடும். வாரம் ஒருமுறை அதை சுத்தப்படுத்த வேண்டும். பழைய டூத் பிரஷ்ஷைக் கொண்டு சீப்பை சுத்தப்படுத்தினால் அதில் உள்ள அழுக்குகள் எளிதாக வந்துவிடும். பின்பு, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் ஷாம்பு போட்டு சீப்பை ஊற வைத்து கழுவி காய வைக்கலாம்.
2. கேஸ் அடுப்பின் மீதும் ஓரங்களிலும் சிறிதளவு பேக்கிங் சோடா தூவி, டூத் பிரஷ் கொண்டு தேய்த்தால் பளிச்சென்று சுத்தமாகும். அதேபோல பர்னர்களையும் சுத்தம் செய்யலாம்.
3. சமையலறை மேடையில் இருக்கும் டைல்ஸ்களுக்கு இடையே படிந்திருக்கும் அழுக்கை டூத் பிரஸ் கொண்டு சுத்தம் செய்தால் பளிச்சென்று ஆகிவிடும். அடுப்பின் பின்புறமிருக்கும் டைல்ஸ்களில் உள்ள எண்ணெய்க் கறையை நீக்க, சிறிதளவு வினிகரும், பேக்கிங் சோடாவும் தூவி, டூத் பிரஷ்ஷால் தேய்த்தால் சுத்தமாகி விடும்.
4. நம் வீடுகளில் எண்ணற்ற சுவிட்சுகள் எல்லா அறைகளிலும் உண்டு. அவற்றை துணி வைத்து துடைத்தால் அழுக்கு போகாது. அதேசமயம் டூத் பிரஷ்ஷில் மென்மையாக ஸ்விட்ச் போர்டிலும் சுவிட்சுகளிலும் லேசாக தேய்த்தாலே பளிச்சென்று வெள்ளையாக மாறிவிடும்.
5. சமையலறை சிங்கின் பக்கவாட்டு சுவர்கள், நீர் வெளியேறும் பாதையை சுத்தம் செய்ய உதவும் டூத் பிரஷ், வாஷ்பேஷனை சுத்தம் செய்வதற்கும் நல்ல சாய்ஸ். சிறிதளவு வினிகரை ஊற்றித் தேய்த்தால் அழுக்கு போய்விடும்.
6. ஜன்னல் கம்பிகளில் ஒட்டி இருக்கும் தூசுகளையும், ஜன்னல் கதவுகளின் ஓரங்களில் படிந்திருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய உதவுகிறது.
7. தலைக்கு டை அடிப்பதற்கும் மருதாணி அரைத்து பூசுபவர்களுக்கும் நல்ல சாய்ஸ். கைகளில் படாமல் அருமையாகப் போடலாம்.
8. கம்ப்யூட்டர் கீ போர்டில் தூசியும் அழுக்கும் படிந்திருக்கும். கம்ப்யூட்டரை ஆப் செய்து விட்டு கீபோர்டை தனியாக கழட்டி எடுத்து அதன் எழுத்துக்களின் வரிசை மீது டூத் பிரஷ்ஷை விட்டு எடுத்தால் தூசு போய்விடும்.
9. குழந்தைகள் இருக்கும் வீடுகளில் சுவர் முழுதும் கிரேயான் கொண்டு கிறுக்கி (வரைந்து?) இருப்பார்கள். சிறிதளவு டூத் பேஸ்ட்டை பிரஷில் தடவிக்கொண்டு கிரேயான் கறைகளின் மேல் தடவி லேசாகத் தேய்த்தால், கறை நீங்கி சுவர் சுத்தமாகும்.
10. குழந்தைகளுக்கு டூத் பிரஷை கொடுத்தால் தமது டிராயிங் புக்கில் உள்ள ஓவியங்களுக்கு வாட்டர் கலரை உபயோகித்து அழகாக வண்ணம் தீட்டி மகிழ்வார்கள்.
11. டைனிங் டேபிள் மர நாற்காலிகளின் டிசைன்களில் படிந்திருக்கும் அழுக்கை மிக சுலபமாக டூத் பிரஷ் எடுத்து விடும்.
12. மிக்ஸியின் உடல் பாகத்தை துணி கொண்டு துடைத்து விடலாம். ஆனால், அரைக்கும் பகுதியில் உள்ள அழுக்கை டூத் பிரஷ் கொண்டுதான் சுத்தம் செய்ய முடியும். மிக்ஸியின் அடிப்பகுதியில் உள்ள மென்மையான பாகங்களை டூத் பிரஷ் கொண்டு எளிதாக சுத்தம் செய்யலாம். மிக்ஸி ஜாரின் வெளிப்புறத்தையும் அழகாக சுத்தம் செய்யலாம்.