கடவுள் மனிதர்களுக்கு மட்டும்தான் பேசும் சக்தியை அளித்திருக்கிறார். பேச்சு என்பது மனிதர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். மேடையில் பேச்சாளர், பார்வையாளர்கள் தன்னுடைய பேச்சை ரசித்து கேட்டு கைதட்டி ஆரவாரம் செய்தால் மிகவும் மகிழ்வார். அதுபோலத்தான் சாதாரண மனிதனும், தான் பேசுவதை பிறர் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று விரும்புவார்.
நிறைய பேர் தாங்கள் பேசுவதை மட்டுமே விரும்புகிறார்கள். பிறர் பேசுவதை காது கொடுத்துக் கேட்பதே இல்லை. பிறர் பேச ஆரம்பிக்கும்போது இடையில் குறுக்கிட்டு தொந்தரவு செய்வார்கள். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கேட்கும் பொறுமை இருப்பதே இல்லை. இதனால் அவர்கள் மனதில் நினைக்கும் எண்ணங்கள், அவர்களுடைய கருத்துக்கள் எதையும் அறிந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது. மேலும், 'இவர் நாம் என்ன பேசினாலும் காதுலயே போட்டுக்க மாட்டார்' என்கிற தவறான கருத்தும் பிறர் மனதில் பதியும். இதைத் தவிர்க்க பிறர் பேசுவதை பொறுமையாகக் கேட்பது மிகவும் அவசியம்.
பொதுவாக, மனிதர்கள் தங்கள் மனதில் உள்ளவற்றை பிறரிடம் வெளிப்படுத்த துடிப்பார்கள். மிகச் சிலர் மட்டுமே மிகவும் அழுத்தமாக தனது மனதில் இருப்பதை வெளிப்படுத்த தயங்குவார்கள். ஒருவர் பேசும்போது அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அமைதியாக கவனித்துக் கேட்க வேண்டும். நாம் பேசுவது மிக குறைவாக இருக்க வேண்டும்.
பிறர் பேசுவதை அதிகமாகக் கேட்பதாலும், நாம் குறைவாகப் பேசுவதாலும் என்ன பயன்?
1. நம்முடைய கவனம் சிதறாமல் மனதை ஒருமுகத் தன்மையுடன் வைத்து பிறர் பேசுவதைக் கேட்க முடிகிறது. அவர்களின் எண்ணங்களை சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். இது சமூக திறன்களை மேம்படுத்தும்.
2. இவர் நல்ல மனிதர், நாம் சொல்வதை பொறுமையாகக் கேட்கிறார் என்று பிறர் நம் மீது நல்ல மதிப்பு வைப்பார்கள். அவர்களுடைய உணர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதற்கேற்றவாறு நடந்து கொள்ளவும் முடியும். அதனால் அந்த உறவு மேம்படும். உறவு சிக்கல்கள் வர வாய்ப்பில்லாமல் போகும்.
3. அதிகமாகக் கேட்பதன் மூலம் மற்றவர்களின் அனுபவம் மற்றும் அறிவையும் நாம் பெற்றுக்கொள்ளலாம். அது சிறந்த பாடமாக அமையும். மேலும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.
4. பொறுமையாகக் கேட்பதன் மூலம் பிறர் நம் மீது மரியாதையும் மதிப்பும் வைப்பது மட்டுமல்ல, நம்மை நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் அவர்கள் நினைப்பார்கள். மேலும், தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்துகொள்ள விரும்புவார்கள்.
5. நாம் குறைவாகப் பேசும்போது நமது சக்தி பாதுகாக்கப்படுகிறது. கூர்ந்து கவனித்து கேட்கும் ஆற்றல் அதிகரிக்கிறது. பிறருடைய அனுபவங்கள் நமக்கு நல்ல பாடமாக அமைகிறது. அவற்றிலிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்.
6. குறைவாகப் பேசி, நிறைய கேட்பதன் மூலம் அறிவாற்றல் அதிகரிக்கும். பிறருக்கும் பிடித்த மனிதர்களாக மாறுவோம். எனவே, நிறைய கேட்டு, குறைவாகப் பேசுவோம்.