நச்சுத்தன்மையுள்ள வெங்காயம் 
வீடு / குடும்பம்

சமையலுக்கு நறுக்கும் வெங்காயத்தில் கருப்புப் புள்ளிகளா? ஜாக்கிரதை!

பொ.பாலாஜிகணேஷ்

வீடு தோறும் சமையல் அறையில் இருக்கும் முக்கியமான பொருள் வெங்காயம். வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வெங்காயம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அந்த வெங்காயத்தில் இருக்கும் சின்னச் சின்ன குறைகள் நம் ஆரோக்கியத்திற்கே வேட்டுவைத்து விடும் என்பது உங்களுக்கு தெரியுமா? வெங்காயத்தில் காணப்படும் கருப்புப் புள்ளி மற்றும் கருப்பு கோடுகளால் நமக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

வெங்காயத்தை உரித்து நறுக்கும்போது அதன் உட்புறத்தின் சில பகுதிகளில் கரும்புள்ளிகள் இருப்பதை சில சமயம் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். சிலர் அதை வெட்டி அகற்றி விடுவார்கள். சிலரோ, அதை தண்ணீரில் நன்கு கழுவி விட்டு சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால், பலருக்கும் வெங்காயத்தில் காணப்படும் இந்தக் கரும்புள்ளிகள் என்னவென்று தெரியாது. அதேபோல அதை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பலருக்கும் தெரியாது.

உண்மையில் கரும்புள்ளிகள் காணப்படும் வெங்காயத்தைக் கண்டால் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இது உடல் நலத்திற்கு நல்லதல்ல. இதுபோன்ற வெங்காயத்தை சாப்பிடுவது மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது ஒரு வகையான பூஞ்சை தொற்று ஆகும்.

வெங்காயத்தை சுற்றி அப்படி கருப்பாக இருப்பது ஒருவகை பூஞ்சை ஆகும். வெங்காயத்தில் காணப்படும் இந்தக் கருப்பு பூஞ்சை ஆஸ்பெர்கிலஸ் நைகர் (Aspergillus niger) என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை பூஞ்சை மண்ணில் காணப்படுகிறது. இந்த கருப்பு பூஞ்சை மியூகோர்மைகோசிஸ் அல்ல. ஆனால், இது ஒருவகை நச்சுத் தன்மையை வெளியிடுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

எனவே, இந்தக் கருப்பு பூஞ்சை உள்ள பகுதியை முழுவதுமாக அகற்றிவிட்டு வெங்காயத்தை பயன்படுத்தினால் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், இது அலர்ஜி ஏற்படும் நபர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த வகை வெங்காயத்தை சாப்பிடுவது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக கருப்பு பூஞ்சையோடு இருக்கும் வெங்காயம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனென்றால், இந்த பூஞ்சை காற்றில் பரவும்போது, ​​ஏற்கெனவே பிரச்னை உள்ளவர்கள் அதை சுவாசிக்க வாய்ப்புள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஓரிரு வெங்காயம் இதுபோன்று கரும்புள்ளிகள் கொஞ்சம் அழுகலுடன் இருந்தால் உடனே நீக்கிவிடுவது நல்லது. அதே நேரம் வெங்காயத்தை வாங்குவதற்கு முன்பே கருப்பு பூஞ்சை இல்லாமல் இருக்கிறதா என்ற பார்த்து வாங்குவது இன்னும் பாதுகாப்பானது. வெங்காயத்தில் அடிக்கடி காணப்படும் கருப்பு பூஞ்சை விஷமானது என்று சில ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. அதனால் இனிமேல் நறுக்கும் பொழுது கருப்பு கலரில் இருந்தால் அதை எடுத்து குப்பைத் தொட்டியில் வீசி விடுங்கள்.

கடிகாரங்கள் காட்டும் 10 மணி 10 நிமிடம் - தத்துவம் என்ன?

இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் 5 பானங்கள்!

தமிழ்நாட்டைத் துருக்கியாக்கி, கேரளாவை ஈராக்காக்கி... என்னங்கடா சொல்லவறீங்க?

ஒரே கனவு இருவருக்கு வேறு வேறு பலன்களைத் தருவது ஏன்?

வீழ்ச்சியடைந்து வரும் ஆந்திரப் பிரதேச மாநில கொண்டபள்ளி பொம்மைகள்... கலை காப்பாற்றப்படுமா?

SCROLL FOR NEXT