ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் விஜயவாடாவுக்கு அருகில் அமைந்துள்ள கொண்டபள்ளி என்னும் ஊரில் மரத்தினால் செய்யப்படும் விளையாட்டுப் பொம்மைகளை, அந்த ஊரின் பெயரை முதன்மையாகக் கொண்டு, கொண்டபள்ளி பொம்மைகள் (Kondapalli Toys) என்கின்றனர். சங்கராந்தி, நவராத்திரி போன்ற விழாக் காலங்களில் வீடுகளில் பல வகைப் பொம்மைகளை அடுக்கி உருவாக்கப்படும் பொம்மைக் கொலுவின் ஒரு பகுதியாக கொண்டபள்ளி பொம்மைகளும் இடம் பெறுகின்றன. இப்பொம்மைகள் சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களாகவும் இருக்கின்றன.
இந்தப் பொம்மைகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சமூகத்தினர், தங்களைப் பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரிய சத்திரியர்கள் என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள், நாகார்சாலு என்றும் அழைக்கப்படுகின்றனர். தாங்கள் இந்துக் கடவுளான சிவபெருமானின் அருளால் கலையிலும், கைப்பணியிலும் திறமை பெற்றதாக நம்பப்படும் முக்தரிஷியின் வழி வந்தவர்கள் என்றும் தங்களைக் குறிப்பிடுகின்றனர்.
16 ஆம் நூற்றாண்டில் இராசஸ்தானில் இருந்து கொண்டபள்ளிக்குப் புலம் பெயர்ந்ததாகச் சொல்கின்றனர். இவர்கள் பொம்மைகளை உருவாக்கும் பணியைக் கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். தற்போது, ஆரிய சத்திரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, மரபுகள், மதங்கள் போன்றவற்றையும் தாண்டிப் பல்வேறு சமூகத்தினரும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
கொண்டபள்ளிக் குன்றுகளின் அயற் பகுதிகளில் இருக்கும் தெல்லா போனிக்கி என்னும் மென் மரத்தால் கொண்டபள்ளி பொம்மைகள் செய்யப்படுகின்றன. மரத்தை முதலில் செதுக்கிய பின்னர் அதன் விளிம்புகளை செம்மைப்படுத்துகின்றனர். கடைசியாகச் சொல்லப்பட்ட படிமுறையில் எண்ணெய் வண்ணம், நீர் வண்ணம் அல்லது தாவரச் சாயங்களைப் பயன்படுத்தி நிறம் பூசுகின்றனர். பொம்மை வகைகளைப் பொறுத்து, எனாமல் நிறப் பூச்சுக்களைப் பூசும் இவர்கள், தொன்மங்களோடு தொடர்புடைய உருவங்களையும், விலங்குகள், பறவைகள், மாட்டு வண்டிகள், நாட்டுப்புற வாழ்க்கை போன்றவை சார்ந்த உருவங்களையும் கொண்ட பொம்மைகளை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றனர். இவற்றுள் திருமாலின் பத்து அவதாரங்கள், நடனப் பெண்கள் போன்ற பொம்மைகள் குறிப்பிடத் தக்கவைகளாக இருக்கின்றன.
பெரும்பாலும் வீட்டில் செய்யப்படும் கைத்தொழிலான இதில் குடும்பத்திலுள்ள பலரும் ஈடுபடுகின்றனர். ஆண்கள் மரத்தைச் செதுக்கும் வேலைகளையும், பெண்கள் அதற்கு நிறம் பூசும் வேலைகளையும் செய்கின்றனர். பொதுவாக, குடும்பங்கள் தனித்தனியாக இத்தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், பெரும் எண்ணிக்கையில் பொம்மைகள் தேவைப்படும் போது பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து தயாரிப்புப் பணியை மேற்கொள்கின்றனர்.
முந்தையக் காலத்தில் அரசர்களின் ஆதரவைப் பெற்றிருந்த இக்கலை வடிவம், தற்போது போதிய வருமானம் இல்லாததால் வீழ்ச்சியடைந்து வருகின்றது. பொம்மைகளை உருவாக்குவதற்கு எடுக்கும் நேரம், மேற்கத்தியக் கலைகளின் செல்வாக்கு, இளம் வயதினர் இக்கலையில் ஈடுபட ஊக்குவிக்கப்படாமை என்பன போன்றவை இக்கலை வீழ்ச்சியடைவதற்கான காரணங்களாக இருக்கின்றன.
லெப்பாக்சி, பொது மனிதாபிமான நம்பிக்கை, நிதிய லான்கோ நிறுவனம் போன்றவை, பொம்மை செய்யும் கலையை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான பலவிதமான முன்னெடுப்புக்களைச் செய்து வருகின்றன. ஆந்திராவிலுள்ள அரசு நிறுவனங்களும், அதிகமான மக்களை இப்பொம்மை உற்பத்தியில் ஈடுபடுத்தி, இக்கலையை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கான வழி வகைகளைக் கண்டறிவதற்கும், கைப்பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குமான பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றன. இப்பொம்மைத் தயாரிப்புப் பணிகள், கைகளால் செய்யும் பணிகளுக்கான புவியியல் குறியீட்டினைப் பெற்றுள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.