நீண்ட காலம் பணியில் இருந்துவிட்டு ஓய்வு பெற்ற சிலர், அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிறு குழந்தைகள் போல் நடந்துகொள்வர். அவர்கள் நடவடிக்கைகள் விந்தையாக, வேடிக்கையாக இருக்கும். ஆனால், அதில் எந்த உள்நோக்கமோ, தவறோ இல்லை என்பது நாளை நமக்கும் இதே நிலை வரும்போதுதான் புரியும். மனரீதியாக பாதிப்புக்கு உள்ளான அவர்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவது நம் கையில்தான் உள்ளது. அதற்கு சில மிக எளிமையான, எளிதில் பின்பற்றக்கூடிய ஆறு ஐடியாக்கள்:
* பேரன், பேத்திகளை அவர்களுடன் ஜாலியாக விளையாட விடலாம். எந்த ஒரு தேர்வுக்கோ அல்லது விளையாட்டுப் போட்டிகளுக்கோ குழந்தைகள் செல்லும் முன் அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கச் செய்து அவர்களை சந்தோஷக் கடலில் மூழ்கச் செய்யலாம்.
* அரசியல், சினிமா, விளையாட்டு என்று அனைத்து விஷயங்களிலும் அவர்களுடன் கலந்து பேசலாம், விவாதிக்கலாம்.
* வீட்டில் நடக்கும் எந்த ஒரு காரியத்திற்கும் அவர்களது ஆலோசனைகளைக் கேட்டு செய்தால், அவர்கள் சந்தோஷத்தின் உச்சிக்கு செல்வது உறுதி.
* 'சும்மாதானே உட்காந்து இருக்கீங்க. போய் கரண்ட் பில் கட்டிட்டு வாங்களேன்', 'வயசாயிட்டாலே இப்படித்தான்' என்பது போன்ற வார்த்தைகளை தவறிகூட உபயோகிக்கக் கூடாது.
* வாரத்துக்கு ஒரு முறையாவது அவர்களுக்குப் பிடித்த இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று குஷிப்படுத்தலாம்.
* அவர்களை ஒரேயடியாக ஒதுக்கவும் வேண்டாம், விழுந்து விழுந்து உபசரிக்கவும் வேண்டாம். இயல்பாக அவர்களை நம்மில் ஒருவராக ஏற்றுக்கொண்டாலே போதும். அவர்கள் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே!