Thayalini Indrakularasa
Thayalini Indrakularasa
வீடு / குடும்பம்

இனிய இல்லத்தரசியே! இதுதானா நீ?

எஸ்.விஜயலட்சுமி

ல்லத்தரசி! இந்தப் பெயரே, சற்று முரணானதுதான். அரசி என்றால் கண்கவர் ஆபரணங்கள் அணிந்து கொண்டு, பணிப்பெண்கள் சாமரம் வீச, ஹாயாக அரியணையில் அமர்ந்து கொண்டு பொழுதுபோக்குபவர்தான் அரசி. ஆனால், இல்லத்தரசி? விடியலில் அலாரம் அடித்து கண் விழித்து, பரபரவென இயங்கி, சமையல் அறையே கதியாக, பாத்திரங்களோடும், துணிகளோடும் மல்லுக்கட்டி, அழுக்கு நைட்டியை அணிந்து கொண்டு, எந்நேரமும் வீட்டை சுத்தம் செய்வதிலேயே முனைந்து, பத்து மணிக்கு காலை சாப்பாடு, மூன்று மணிக்கு லஞ்ச், மாலை முழுக்க பிள்ளைகளின் வீட்டுப்பாடம், கணவனுக்கு என்ன காய் பிடிக்கும்? பிள்ளைகளுக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து வாங்கி, அவர்களுக்குப் பிடித்ததை சமைத்து, நன்றாக இல்லை என்று சொன்னாலும் அதையும் பொறுமையாக ஏற்றுக்கொண்டு, அங்கீகாரமும் இல்லாமல் சம்பளமும் இல்லாமல் வேலை பார்க்கும் ஒரு அற்புத, அரிதான, அபூர்வமான ஜீவன்தான் இல்லத்தரசி.

சமையல்காரி, பணியாள், நிதியமைச்சர், அன்பான மனைவி பொறுப்பான தாய் என்று எத்தனை அவதாரங்கள் உனக்கு? பிள்ளைகள், கணவர், உறவினர், இவர்களைச் சுற்றியே உனது உலகம். பொழுதுபோக்க டிவி சீரியல், யூ ட்யூப் ஷார்ட்ஸ், முகநூலில் லைக், இன்ஸ்டாவில் இளைப்பாறல்... பட்டுப்புடைவையிலும், தங்க நகையிலும் மகிழும் மனது, இதுதானா நீ? என் இனிய இல்லத்தரசியே?

உனக்கு என்ன பிடிக்கிறது? உன் மனதைக் கேள். சொல்லும். அதற்கேற்றபடி நீ நடந்துகொள். உன்னுடைய முதல் சினேகிதி நீதான். வீடு, குடும்பம், கணவர் எல்லாம் இருக்கட்டும். ஆனால், உனக்கு நீ முக்கியம்.

நீ  எப்படி இருந்தால் உன்னை உனக்குப் பிடிக்கும்? உன் சிறுவயது ஆசைகள் என்ன? திருமணத்திற்கு முன் உனது லட்சியம் என்னவாக இருந்தது? உனக்கு என்ன திறமை இருந்தது? என்று நினைவுகளை சற்றே தூசி தட்டிப் பார். தையல் வேலை, எம்பிராய்டரி போடப் பிடிக்குமா? தோட்ட வேலை பிடிக்குமா? எழுதப் பிடிக்குமா? பாடப் பிடிக்குமா? நடனமாடப் பிடிக்குமா? அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றை கற்றுக்கொள்ள விருப்பமா?

தினமும் அரை மணி நேரமாவது உனக்கே உனக்கென்று ஒதுக்கு. அந்தப் பொழுது முழுக்க முழுக்க உனக்கு மட்டும்தான். பிடித்த பாடலை சத்தமாகப் பாடு, உன் சமையல் அறை சுவர் முழுக்க எதிரொலிக்கட்டும். ஸ்பீக்கரில் பாட்டுப் போட்டுவிட்டு நடனமாடு. எண்ணங்களை எழுத்தில் வடி. வீணை வகுப்போ, ஓவிய வகுப்போ, ஜூம்பா கிளாசோ, கார் ட்ரைவிங்கோ, எது உன் விருப்பமோ சேர்ந்து புதிதாக ஒன்றை கற்றுக்கொள். உன் மன ராஜ்யத்தை ஆளும் அரசியாக நீ இருக்கலாம்.

அழகாக டிரஸ் செய்துகொள். உன் உள்ளத்து கம்பீரம் முகத்தில் தெரியட்டும். புன்னகையால் உலகை வசீகரிக்கலாம். வாழ்க்கையை துளித்துளியாய் ரசிக்கத் தொடங்கு. உன்னை உனக்கேப் பிடிக்கும்.

இப்படி இருந்தால்தான் வயதான காலத்தில், எதன் மீதும் புகாரோ, புலம்பலோ இருக்காது. யார் மீது வருத்தமும் இருக்காது. என் இனிய இல்லத்தரசியே, நீ உனக்காகவும் வாழத் தொடங்கு.

உனக்காக காத்திருக்கும் தபால் பெட்டி!

விமர்சனம்: தலைமை செயலகம் - ஓடிடி தளத்தில் மாறுபட்ட திரில்லர்!

லேடி கெட்டப்பில் கலக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்... வைரலாகும் போட்டோ!

விமர்சனங்களுக்கு இளையராஜா கொடுத்த நச் பதில்... வைரலாகும் வீடியோ!

நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனம் (Nehru Institute of Mountaineering) வழங்கும் மலையேற்றப் பயிற்சிகள்!

SCROLL FOR NEXT