வரவுக்கேற்ற செலவு செய்வதே வாழ்க்கையை பிரச்னைகளின்றி நடத்த உதவும் மிகச் சிறந்த வழியாகும். வரவுக்கு அதிகமாக செலவு செய்யும்போதே மேற்படி செலவுக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கடன் வாங்கி கஷ்டப்படுவது வாழ்க்கையில் பெரும் துன்பமாகும். கடன் வாங்காமல் வாழ்க்கையை சமாளிக்க உதவும் எட்டு வழிகளை இந்தப் பதிவில் காண்போம்.
1. உங்கள் வருமானத்துக்குக் குறைவாக செலவழிக்க வேண்டும். வருமானத்திற்கு ஏற்றாற்போல் ஒரு மாத பட்ஜெட் தயாரித்து, அதை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செலவுகளையும் எழுதி வைக்க வேண்டும். உங்கள் வருமானத்தில் இருந்து 1 ரூபாய் வெளியில் சென்றாலும் அதை பட்ஜெட் நோட்டில் எழுதி வைக்க பழகவும். இவ்வாறு செய்வதன் மூலம் மாத இறுதியில் நாம் செய்த செலுவுகளை எடுத்து பார்த்தால் நாம் செய்துள்ள தேவையற்ற செலவு என்ன என்பது தெளிவாகத் தெரிந்து விடும். இதன் மூலம் அடுத்த முறை இதே தவறை செய்யாமல் இருப்போம். இதன் காரணமாக பணம் சேமிக்கப்பட்டு கடன் வாங்குவதில் இருந்து தப்பித்து விடலாம்.
2. உங்கள் வருமானத்தைப் பெருக்க வேண்டும். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லலாம். நீங்கள் பகுதி நேர வேலை செய்யலாம். ஏற்கெனவே வேலை பார்க்கும் இடத்தில் ஓவர் டைம் வேலை செய்யலாம். ஏதேனும் ஒரு சிறு தொழில் செய்யலாம்.
3. EMI முறையில் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இப்படி வாங்கி பழகி விட்டால் இதே வாடிக்கையாகி விடும். இதனால் நாம் எப்பொழுதுமே கடனாளிகளாக இருப்போமே தவிர, சேமிப்பு என்ற ஒன்று வாழ்வில் இருக்காது.
4. கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்க வேண்டும். காரணம், கிரெடிட் கார்டு இருந்தால் தேவை இல்லாத பொருட்களை வாங்கி குவிக்க ஆரம்பித்து விடுவோம். இதனால் எளிதில் கடனில் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகிவிடும்.
5. தேவையற்ற ஆடம்பர செலவுகள் செய்வதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஆடம்பர செலவுகளுக்கு நாம் இடம் கொடுக்கும்பொழுது, நமக்குத் தேவையான செலவுகள் செய்ய பணம் இல்லாமல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.
6. மிகக் குறைவான வருமானம் இருக்கும்பொழுது நமது பிள்ளைகளை அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் படிக்க வைப்பதினால் கடன் ஏற்படுகிறது. அதனால் வருமானத்திற்கு ஏற்ற கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைப்பது நல்லது.
7. மருத்துவக் காப்பீடு எடுத்து வைப்பது நல்லது. அவசர மருத்துவத் தேவை ஏற்படும் பொழுது மருத்துவக் காப்பீடு நமக்கு கடன் வாங்காமல் இருக்க உதவுகிறது.
8. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை அவசரத் தேவைக்காக எடுத்து வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளவும். அவசரத் தேவை ஏற்படும்பொழுது கடன் வாங்காமல் சேமித்த பணத்தை எடுத்து செலவுகளை நிர்வகிக்க முடியும்.