
தற்போதுள்ள இயந்திரத்தனமான வாழ்வில் கணவனும், மனைவியும் ஆற அமர உட்கார்ந்து பேச நேரம் இருப்பதில்லை. அதனால் சில, பல மனச்சங்கடங்கள் ஏற்படுகின்றன. திருப்தியில்லாத மணவாழ்க்கை நீடிக்கிறது. மனதில் இருக்கும் அன்பை வெளியில் காட்டக் கூட சிலருக்குத் தெரிவதில்லை. கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பது என்ன, அதேபோல மனைவியின் எதிர்பார்ப்புகள் என்ன, அவற்றை எப்படி நிறைவேற்றுவது, அதன் மூலம் இருவருக்குள்ளும் அன்பும் அந்நியோன்யமும் பெருக என்ன செய்வது என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கணவன், மனைவிக்கு செய்ய வேண்டியது:
1. நேர்மறை வார்த்தைகளால் மனைவியைப் பாராட்டுவது: நீ அழகா இருக்க, இந்த டிரஸ் உனக்கு ரொம்ப சூட்டபிளா இருக்கு, இன்னைக்கு உன் சமையல் ரொம்ப டேஸ்ட் போன்றவை.
2. வீட்டு வேலைகளில் உதவுவது: கணவன், மனைவிக்கு வீட்டில் சின்ன சின்ன வேலைகளில் உதவிகள் செய்தால் அவள் மனம் மிகவும் மகிழும். உதாரணத்திற்கு காய்கறி வாங்கி வருவது, அவற்றை நறுக்கித் தருவது, வீடு சுத்தம் செய்வதில் உதவுவது, காபி போட்டு கொடுப்பது போன்ற சின்ன விஷயங்கள் கூட மனைவியின் மனதை மிகவும் சந்தோஷப்படுத்தும்.
3. மனைவிக்கென்று குவாலிட்டி டைம்: தினமும் சிறிது நேரமாவது அவளுக்கென்று குவாலிட்டியான டைம் கொடுக்க வேண்டும். முக்கியமாக கையில் செல்போனை வைத்து நோண்டிக் கொண்டிருக்காமல், அவள் கண்களைப் பார்த்து சில வார்த்தைகள் பேச வேண்டும். சிறிது நேரம் வீட்டில் சும்மா அமர்ந்திருந்தால் கூட போதும். அதுவே அவளுக்கு மிகுந்த திருப்தியை தரும். போனை விட தனக்கு முக்கியத்துவம் தருகிறார் என்று நினைத்தது மகிழ்வாள்.
4. சின்னச் சின்ன தொடுதல்கள்: கன்னம் கிள்ளுவது, முதுகில் தட்டித் தருவது, கைகளை பிடித்துக்கொள்வது, தோளோடு அணைத்துக் கொள்வது போன்ற சின்ன சின்ன காதல் உடல் மொழிகள் அவசியம்.
5. சர்ப்ரைஸ் கிப்ட்: சின்ன சின்ன சர்ப்ரைஸ் கிப்ட்டுகள் தருவது, திடீரென்று லாங் டிரைவ் கூட்டிச் செல்வது, மாதம் ஒரு முறை வெளியூர் பயணம் அழைத்துச் செல்வது என்று செய்து மனைவியை அசத்தலாம். அவளுடன் சில சமயம் சேர்ந்து சமைப்பதும் சந்தோஷத்தை கொடுக்கும்.
இனி, மனைவி எப்படி கணவனிடம் காதல் மொழி பேசுவது என்று பார்ப்போம்:
1. நிறைய பெண்கள் செய்யும் தவறு தனக்காக மணிக்கணக்கில் நாள்கணக்கில் தேடி புடவையும் சுடிதார்களும் வாங்கி நேர்த்தியாக தைத்துக் கொள்வார்கள். ஆனால், கணவருடைய உடையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். நிறைய ஆண்களுக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் மிகவும் குறைவு. எனவே, அவருடன் கூடச் சென்று அருமையாய் அழகா டிரஸ் செலக்ட் செய்து கொடுத்து, அதை அணியும்போது, ‘செம்மையா ஸ்மார்ட்டா இருக்கீங்க’ என்று அவரை மனதார புகழ வேண்டும்.
2. வீட்டு வேலைகளில் கணவன் உதவுவது போல, வெளி வேலைகளை மனைவி பகிர்ந்து கொள்ளலாம். மின்கட்டணம் கட்டுவது, பொருட்கள் வாங்கி வருவது போன்றவை.
3. எப்போதும் டிவி சீரியலில் மூழ்கிக்கிடக்காமல் கணவருடன், நாட்டு நடப்பு, அரசியல், பங்குச்சந்தை என்று பொது விஷயங்கள் பற்றிப் பேச வேண்டும். அறிவான பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும்.
4. எப்போதும் அழுது வடிந்து கொண்டு நிற்காமல், பளிச்சென்று உடை அணிந்து கொள்வது, கணவன் அலுவலகம் கிளம்பும்போது, ‘ஹேவ் எ நைஸ் டே’ சொல்லி மெலிதாக ஹக் செய்து அனுப்புவது, மாலையில் மலர்ந்த முகத்துடன் வரவேற்பது அவசியம்.
5. ‘என் கணவர்தான் எனக்கு ஹீரோ’ என்ற எண்ணத்தில், அவரிடமுள்ள நல்ல குணங்களை பாராட்டிப் பேசினாலே போதும்.
இவற்றைக் கடைபிடித்தால் எழுபது, எண்பது வயதிலும் காதலும் அன்பும் தம்பதியருள் பெருகும்.