Do you know the rules to follow when arguing? https://www.psychologytoday.com
வீடு / குடும்பம்

வாக்குவாதம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் எவை தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய வாக்குவாதத்தினால் தான் சொல்ல வருவதை பிறர் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று நிறைய நேரம் செலவழிக்கிறார்கள். ஆனால் அது பெரும்பாலும் நடப்பதில்லை. சிலருக்கு சில சமயங்களில் வாக்குவாதம் செய்வதில் விருப்பம் இருப்பதில்லை. ஆனால் அது பிரச்னைக்கு தீர்வாகாது. மனதுக்கு பிடித்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள், உடன் வேலை செய்பவர்கள், நண்பர்களிடம் விவாதம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.

1. தயாராகுதல்: எந்த இடத்தில், எந்த நேரத்தில் விவாதம் செய்ய வேண்டும் என்பதை சரியாக தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஒருவரிடம் விவாதம் செய்யும் முன் நீங்கள் சொல்ல வேண்டிய கருத்துக்கள் பற்றி ஒரு தீர்மானம் வைத்துக்கொள்ள வேண்டும் உங்களுடைய எதிராளியை சமாளிக்கும் அல்லது சமாதானப்படுத்தும் விஷயங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். நீங்கள் சொல்வதை எதிராளி ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் சொல்லப்போகும் விஷயம் சரியானதுதானா என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு நல்ல உறவில் விரிசல் விழ நேரலாம்.

2. விவாதத்தை மரியாதையுடன் தொடங்க வேண்டும்: நீங்கள் யாருடன் விவாதம் செய்ய தொடங்கினாலும் அதை ஒரு மரியாதையுடன்தான் தொடங்க வேண்டும். எடுத்த எடுப்பில் அவரை பெயர் சொல்லிக் கூப்பிடுவது மோசமான வார்த்தைகளை சொல்லி கூப்பிடுவது கூடாது.

3. திறந்த மனத்துடன் ஒரு விவாதத்தை தொடங்க வேண்டும்: விவாதம் செய்வதற்கு முன்பே எந்த தீர்மானத்திற்கும் வரக்கூடாது. நான் சொல்லப்போவது மட்டும்தான் சரியாக இருக்கும் என்ற ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு உங்களுடன் வாதம் செய்யப் போகும் நபர் சொல்வதை கவனித்துக் கேட்க வேண்டும். விவாதம் செய்யப்போகும் விஷயத்தைப் பற்றி முன்பே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய உடல் மொழி சொல்லப்போகும் வார்த்தைகள், பேசும் விதம் எல்லாவற்றையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

4. உங்கள் உணர்வுகளை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்: குற்றம் சாட்டும் தொனியில் பேசக்கூடாது. உதாரணமாக, வீட்டில் மனைவி பாத்திரம் தேய்க்கவில்லை என்றால், ’நீ பாத்திரங்களை தேய்க்கவில்லை’ என்று நேரடியாக குற்றம் சாட்டுவது விட ‘சிங்கில் அழுக்குப் பாத்திரங்கள் கிடக்கின்றன. நீ கவனிக்கவில்லையா? சிறிது நேரம் கழித்து அவற்றைத் துலக்கி விடுவாய் என்று நம்புகிறேன்’ என்று சொல்லலாம். அவர் மீது அதிக அன்பு வைத்திருந்தால், ’நான் உனக்கு எந்த விதத்தில் உதவட்டும்?’ என்று கேளுங்கள் உருகிப் போய்விடுவார்.

5. அதிக கவனத்துடன் கேளுங்கள்: நீங்கள் யாருடன் விவாதம் செய்யப்போகிறீர்களோ, அவர் என்ன சொல்கிறார் என்பதை மிகுந்த கவனத்துடன் கேட்க வேண்டும். உங்களுக்கு அவர்கள் சொல்வது புரியவில்லை என்றால் சிறு சிறு கேள்விகள் மூலம் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம். அவர்களுடைய உடல் மொழி சொல்லும் வார்த்தைகளின் அர்த்தம் இவற்றை நன்றாக உற்றுநோக்க வேண்டும். 75 சதவிகிதம் கவனித்தலும் 25 சதவீதம் மட்டுமே உங்களுடைய விவாதமும் இருந்தால் வெற்றி உங்களுக்குத்தான்.

6. நீங்களும் அதே அணியை சேர்ந்தவர்தான் என்பதை மறக்கவே வேண்டாம்: குடும்பத்தில் இருப்பவருடன் அல்லது அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நபருடன் விவாதம் செய்யும் போது உங்கள் குடும்பத்தில்தான் நீங்கள் தொடர்ந்து இருக்கப் போகிறீர்கள் என்பதையும், இதே நபருடன்தான் வேலை செய்யப்போகிறோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு நிதானமாகப் பேச வேண்டும். அதேசமயம் அவற்றை மறுத்துப் பேசும்போது வார்த்தைகளை கவனமாக உபயோகித்து முகத்தில் எந்தவிதமான வெறுப்புணர்ச்சியும் காட்டாமல் பேச வேண்டும்.

7. தேவையான இடத்தில் பாஸ் போட வேண்டும்: விவாதம் செய்து கொண்டிருக்கும்போது விவாதம் சூடாகி காரசாரமான சொற்கள் வந்து விழும்போது அந்த இடத்தில் அதை நிறுத்தி விட்டு எழுந்து விட வேண்டும். பின்னர் இதைப் பற்றி பேசலாம் என்று சொல்லலாம். இரவு தூங்கப்போகும் பத்து நிமிடங்களுக்கு முன்பு விவாதத்தை ஆரம்பிப்பது சரியல்ல. அலுவலகத்துக்கு கிளம்புவதற்கு முன்னால் விவாதம் செய்யக் கிளம்புவதும் சரியல்ல. எனவே, அதற்கான சரியான கால நேரம் பார்த்துதான் ஆரம்பிக்க வேண்டும். பின்பு நேரம் அமையும்போது அந்த விவாதத்தை பேசி முடித்து விட வேண்டும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT