வீடு / குடும்பம்

என் இனிய வானரமும், எளிய சாரதியும்!

ஹ்ரிஷிகேஷ்

லது காலை எடுத்து வைத்து கோவிலில் நுழைந்தவுடன், எதோ ஒரு புதுவித இன்ப அதிர்வை உணர்ந்ததுண்டா? இதுவரை அப்படியேதும் உணரவில்லை என்றால், மறுபடியும் கோவிலுக்கு சென்று உணர முயற்சிக்கவும். நில்லுங்கள்! இப்பொழுதே செல்ல வேண்டிய அவசிய மில்லை. இக்கட்டுரையை படித்த பின்பு பொறுமையாக செல்லலாம். ஏனெனில், அத்தனை அவசரமாக அவ்வுணர்வை கண்டறிந்து இஸ்ரோவிற்கோ அல்லது நாசாவிற்கோ தகவல் தெரிவிக்க போவதில்லை.

அந்த இன்ப அதிர்வை உணர்ந்தவுடன், கண்களை மூடி மெய்சிலிர்த்து, பல விந்தையான உணர்ச்சிகளை கோவில் வாசலிலே நின்றுகொண்டு வெளிப்படுத்தியது போதும். சற்று என்னுடன் உள்ளே வாருங்கள். அங்கே மெய்சிலிர்ப்பதற்கு இன்னும் பல விஷயங்கள் உள்ளன. நீங்கள் நுழைந்திருப்பது உங்கள் ஊரிலே மிகவும் பிரசித்திபெற்ற சிவபெருமான் கோவில் என்று வைத்துக்கொள்ளவும். விஷ்ணு பக்தர்கள் அதை வைணவ கோவிலாக மாற்றிகொள்வதில் ஆட்சேபனையேது மில்லை.

கொடிமரத்தை வணங்கிகொள்ளவும். சற்று தொலைவில் சரியாக பெருமானின் கருவறை அமைந்திருக்கும் மண்டபத்தின் மேல் புறத்தில் அதென்ன ஓவியம்? அக்னியின் சாட்சியாக, பார்வதி தேவியின் கரத்தை தன் கரத்தில் ஐக்கியமாக்கியபடி சிவபெருமானும், தேவியின் அருகில் மகாவிஷ்ணுவும், மேலும் பிரம்மரும், நாரதரும், அகத்திய முனிவரும்... ஓ, புரிந்து விட்டது, சிவ-பார்வதி திருமணம் நடக்கும் வைபோகத்தை படமாக வரைந்திருக்கின்றனர். ஆனால், இதை வரைந்த ஓவியருக்கு இத்திருமணத்தின் விவரங்கள் எப்படி தெரிய வந்திருக்கும்? நிச்சயமாக அவர் அத்திருமணத்தில் கலந்துக்கொண்டிருந்திருக்க மாட்டார். பின், இதிகாசங்கள் மூலமாகவா?

இந்த இதிகாச கதைகளுக்கு, நம் நாட்டில் தான் பஞ்சம் இல்லையே. நாம் சிறு வயதிலிருந்து கேட்டு கேட்டு நம்முடன் சேர்ந்து வளர்ந்தவை அவை. அக்கதைக ளெல்லாம் உண்மையா இல்லையா என்று நிரரூபணமாவதற்கு முன்பே, நாம் நம்பிக்கொண்டு வருபவை. ஆனால் ஏன்? நம் நாட்டின் பாரம்பரிய பொக்கிஷத்தையும் கலாசாரத்தையும் கட்டிக்காக்கவா? இவையெல்லாம் எங்கிருந்து தோன்றியவை? ஏன் தோன்றின? யாரால் தோற்றுவிக்கப்பட்டன? இக்கேள்விகளுக்கான விடைகளை பின்னர் காண்போம். அதற்கு முன், இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை சந்திக்கலாம், வாருங்கள்.

வீரமும் விவேகமும் மெத்த பொருந்திய கதாபாத்திரம், ஆஞ்சநேயர். வானர இனத்தை சேர்ந்தாலும், குணத்திலும், பண்பிலும், பக்தியிலும் பல மனிதர்களை விட சிறந்து விளங்கியவர். இன்றும் அவரது குண நலன்களின் காரணத்தினால், மக்களால் போற்றி  வணங்கப்படுபவர். இப்பேற்பட்ட ஒருவர், வனவாசத்தின் போது தன் மனைவியைவிட்டு  பிரிந்து, மரம் செடிகளிடம் வழிகேட்டு கொண்டிருந்த மற்றொருவருக்கு பக்தனாகி பணிவிடை செய்ததேன்? இத்தனைக்கும் ராமர் ஒருபோதும் ஆஞ்சநேயரை தனக்கு பக்தனாக வேண்டுமென்று ஒரு முறை கூட கட்டளையிட்டதில்லை. முழுக்க முழுக்க தன் சுய விருப்பதினால் உண்டானது அவரது அன்பும், பக்தியும்.

இன்பமும் நான், துன்பமும் நான், ஹரியும் நான், சிவனும் நான், உன் விதியும் நான், உன் நண்பனும் நான், உன் எதிரியின் ரூபத்தில் நிற்பதும் நான் என்று சொன்னவரும், எங்கிருந்தோ அபயம் வேண்டி தன்னை அழைத்த பேதையின் மானத்தை காப்பாற்றிவரும், தன்னலமின்றி போர்களத்தில் தன் மகாஞானத்தை அளித்தவருமான, தேவகி புத்திரன், சாதாரண சாரதியாக போர்களத்தில் பிரவேசித்ததேன்? அதுமட்டுமின்றி, ஒரு சாரதியின் வாழ்க்கை எத்தனை எளிமையானதோ, அத்தனை எளிமையுடன் போர் முடியும்வரை வாழ்ந்ததும் தான் ஏன்? அவர் நினைத்திருந்தால் குருக்ஷேத்திரதில் தனக்கென இன்னொரு துவாரகையை எழுப்பியிருக்கலாம்.

எல்லாம் இருந்தும் இந்த கனிவும் எளிமையும் கடைசி வரை ஏன் இருந்தன இவர்களிடம்? இவர்கள் இருவரும் சிறு உதாரங்ககளே. கடவுளின் அவதாரமே என்றாலும் இத்தனை நல்ல பண்புகள் பூலோகத்தில் வசிப்பதற்கு தேவையோ? இந்த நற்குணங்களை நம்மில் விதைக்கத்தானா இத்தனை கோவில்களும், கதைகளும், புராணங்களும்? இவ்வுலகில் எந்தவொரு உயிரினத்திற்கும் எப்படி வாழவேண்டும் என்று பயிற்சியளிக்க தேவையில்லை, மனிதர்களை தவிர. அதனால்தான் என்னவோ மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று கடவுள்களே பல முறை அவதரித்து முன் மாதிரியாக வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

சமூக வலைத்தளைங்களில் ஏதேனும் பரபரப்பான செய்தியோ படமோ அல்லது வீடியோவோ பார்த்து விட்டால், அது எந்த அளவிற்கு உண்மை என்று ஆராய்வதற்கு முன்பே பல நபர்களுக்கு அனுப்பி விடுகிறோம், உண்மை என்று நம்பிக்கொண்டு. அப்படியிருக்கையில், ஆயிரம் வருடங்களுக்கு மேலாகியும் கம்பீரமாக நிற்கும் கோவில்களையும், நம்முடன் உலாவி வந்து நம்மை நல்வழி படுத்தும் புராண கதைகளையும் பின்பற்றி வாழ்வதில் என்ன தயக்கம்? தப்பித்தவறி உண்மையின் பாதையை தேர்ந்தெடுத்து விடுவோமோ என்ற பயமோ என்னவோ.

சில பத்திகளுக்கு முன்பு கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடை இதோ. ஒரே ஒரு விடை தான். “மனிதனை மனிதாக வாழ வைப்பதற்காக தோன்றியவை அல்லது தோற்றுவிக்கப்பட்டவை, இதிகாச புரணாங்கள்”. அவை உண்மையில் நிகழ்ந்தனவா இல்லையா என்று ஆராய்வதற்கு பதிலாக, நாம் உண்மையின் நல்ல மனிதனாக அல்லது குடிமகனாக இருக்கின்றோமா என்று சரி பார்ப்பது அவசியம். கடவுள், இதிகாசங்கள், போதனைகள், பிரார்த்தனைகள் மற்றும் கீதை போன்றவைகளிலெல்லாம் உண்மை இருகின்றனவா இல்லையா என்ற கேள்விக்கு பதில்: மனித இனம் பூமியின் இருக்கும்வரை, இவையனைத்தும் கட்டாயம் தேவை.

இப்பொழுது அந்த கோவிலை விட்டு வெளியேறி, சில இனிய வானரங்களையும், எளிய சாரதிகளையும் சந்திக்கவும், உருவாக்கவும் முயற்சியுங்கள். சிலசமயம், அவர்கள் உங்கள் வீட்டு முகம் பார்க்கும் கண்ணாடியிலும் கூட தென்படலாம்!

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT