குளிர்காலத்தில் படுக்கையறையை வெப்பமாக வைத்திருக்கவும், நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகை செய்யவும் சில எளிதான மாற்றங்களை செய்தாலே போதும். அது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
* குளிர் காலத்தில் பகல் பொழுதில் நன்றாக வெய்யில் வரும்பொழுது, சூரிய வெளிச்சம் தங்கும்படி அறை கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டியது அவசியம். இதனால் அறையில் வெப்பம் தங்கும். பிறகு மாலை நான்கு மணி அளவில் கதவுகளை சாத்திவிட்டால், அறை நல்ல கதகதப்பா இருக்கும். இரவில் நல்ல தூக்கம் வரும்.
* ஸ்டீல் கட்டில்களை விடுத்து, மரக்கட்டில்களில் படுப்பது குளிர்ச்சியைத் தவிர்க்க உதவும்.
* வீட்டில் இரண்டு அடுக்கு கொண்ட உயரமான மெத்தைகள் இருந்தால் அதை கோடையில் உபயோகப்படுத்த மாட்டோம். காரணம், அது அதிக வெப்பமாக இருக்கும். ஆனால், குளிர்காலத்தில் பயன்படுத்தலாம்.
* தேங்காய் நார்களைக் கொண்டு செய்யப்படும் மெத்தை மற்றும் சோபா செட்டுகள் நல்ல கதகதப்பு கொடுக்கும். அதனால் அவற்றை குளிர் காலத்தில் பயன்படுத்தலாம்.
* பாலியஸ்டர் போன்ற செயற்கை இழை பொருட்களையும் குளிர்காலத்தில் பயன்படுத்த வேண்டும். அவை வெப்பத்தைத் தக்க வைத்து உடலை சூடாக உணர வைக்கும்.
* குளிர் காலத்தில் மின் விசிறி மற்றும் ஏசி பயன்பாடு தேவை இருக்காது. ஆதலால் குளிர் காலத்தில் சற்று இழுத்துப் போர்த்திக்கொண்டு நிம்மதியாக தூங்க முடியும். அதற்கு திக்கான போர்வைகள் மற்றும் ஜமுக்காளங்களை பயன்படுத்துவது நல்லது. இது குளிரை குறைப்பதுடன், சளி பிடிப்பதையும் தவிர்க்கும்.
* அடர் நிறம் கொண்ட படுக்கை விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது. இது வெப்பத்தை உறிஞ்சி படுக்கையறையை சூடாக உணர வைக்கும். பகலில் அறையை சூடாக வைத்திருக்க உதவும். இரவிலும் நல்ல கதகதப்பைத் தரும்.
* படுக்கையறைக்குள் சூரிய ஒளி படர்வது அறையின் வெப்ப நிலையை விரைவாக உயர்த்தும். அறை வெப்பமடைவதை உயர்த்தும் வகையிலான திரைச்சீலைகளை ஜன்னலில் தொங்கவிட வேண்டும். பகல் பொழுதில் சூரிய வெளிச்சம் அறைக்குள் வரும்படி திரைச்சீலைகளைப் பயன்படுத்துவது நல்லது.