உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) கொண்டாடப்பட்டு வருகிறது. 1995 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையில், மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குப் பின்பு, மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும், சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும், உலக சகிப்புத் தன்மை நாள் கடைப்பிடிப்பது என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. யுனெஸ்கோ அமைப்பும் சகிப்புத்தன்மை, அகிம்சை ஆகியவற்றைப் பரப்புவதுடன், யுனெஸ்கோ மதன்ஜீத் சிங் பரிசு எனும் பெயரில் பரிசு ஒன்றையும அறிவித்தது.
சகிப்பு தன்மை என்பது மனதால் முதிர்ச்சி அடைந்த ஒரு மனிதனின் குணமாக இருக்கிறது. எத்தகையச் சூழலையும், மனிதர்களையும் மனதில் ஒரு சிறு நெருடல் இன்றி, தன்னையோ பிறரையோ மனதிலோ வெளிப்படையாகவோ கடிந்து எரிந்து சலித்து கொள்ளாமல் இருப்பதை, ஒரு துளி சலனமும் இன்றி அப்படியே ஏற்று கொள்ளும் பக்குவமே சகிப்புத்தன்மை. இதன் நன்மைகள் பல. பல வேளைகளில், இது பெரும் சண்டைகளைத் தவிர்க்கிறது. இந்தக் குணம் மனதில் எவ்விதக் குழப்பத்தையும் விளைவிக்காமல், அமைதியை எப்பொழுதும் நிலவச் செய்கிறது. அது தீவிரமான அமைதியாய் இருக்கும் பட்சத்தில் அருகில் இருப்பவரையும் அது மாற்றக் கூடும். பொதுவாக, சகிப்புத்தன்மையால் நமக்கு நிறைய நன்மைகள் உண்டு.
இருப்பினும், எதிராளிக்கு அதை விட நன்மைகள் அதிகம் என்கிற கருத்தும் இருக்கத்தான் செய்கிறது. அளவுக்கு அதிகமாகச் சகித்துக் கொள்ளும் போது, நம்மை அவர்களுக்குக் கீழானவர்கள் என்று நினைத்து, அடிமை போன்று நடத்தக்கூடிய வாய்ப்புமிருக்கிறது என்று சிலர் சொல்கின்றனர். சகிப்புத் தன்மை நம்மைக் கோழைகளாக்கி விடும் என்கிற கருத்தும் உண்டு.
பொதுவாழ்வில் சகிப்புத்தன்மை குறித்துச் சொல்லும் போது, நன்மை, தீமை என்று இருவிதமான கருத்துகள் இருக்கத்தான் செய்கின்றன. குடும்ப வாழ்வில், சகிப்புத்தன்மை மிகவும் தேவையான ஒன்று மட்டுமல்ல, இன்றியமையாததும் கூட. குடும்பத்தில் கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தைகள், குடும்பம் - உறவினர்கள் எனும் போது, சகிப்புத்தன்மை அவசியமானது. சகிப்புத்தன்மையே உறவுகளை நீடித்திருக்கச் செய்கிறது.