மருத்துவர்கள்... நம் கண் எதிரே நடமாடும் தெய்வப் பிறவிகள். நமது உடல் நலத்துக்காக பல நேரங்களில் தங்கள் உடல்நலத்தைத் தியாகம் செய்பவர்கள். இந்த வரிகளில் உங்களுக்கெல்லாம் கோபம் வரலாம்… இதோ விளக்கம் -
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு எமது மகள் குழந்தை. அவளின் வழக்கமான குழந்தைகள் நல மருத்துவர் மிகவும் பிரசித்தி பெற்றவர். அவரை சந்திக்கும் பொழுதெல்லாம் நினைத்துக் கொள்வேன் 'மிகவும் கொடுத்து வைத்தவர்'. அதன் பின்னால் சில காலகட்டத்தில் எனது கணவரின் ஒரு பகிர்தல் “சுசிலா நம்ம பாப்பாவுக்கு பாக்குற டாக்டர் காவேரி பாலத்தில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்கிறார். ஒரே சிகரெட் புகை மயம். அவருக்கு என்ன பிரச்சனையோ?” இது என்னை அதிகம் யோசிக்க வைத்தது. அவருக்கு என்ன? நல்ல குடும்பம், குழந்தைகள், பதவி, அந்தஸ்து …பின் ஏன் இப்படி? குழப்பத்துடன் அவ்விடயத்தைக் கடந்து விட்டேன்.அதன் பின் மறந்தும் விட்டேன்.
அதன் பிறகு நமது வீட்டில் இரண்டு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் உருவாக ஆரம்பித்தார்கள். அவர்களின் காலவரையற்ற ஓய்வில்லாத உழைப்பு எங்களை மிகவும் வருத்தமடையச் செய்யும். பண்டிகை நாட்களிலும் டியூட்டி - சாப்பிட உட்கார்ந்தவுடன் எமர்ஜென்சி - கிடைத்த கொஞ்ச நேரத்தில் இடுப்பை சாயப் போடலாம் என நினைக்கும் தருணம் இன்பேஷண்ட் விசிட்டர் ஒரு சந்தேகத்துடன் வாசலில் நிற்பார்… அவர்களின் நேரத்தைக் கூட அவர்களுக்கு தருவது பொதுமக்களாகிய நாம்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. மருத்துவர் அதிலும் முதுநிலைக் கல்வி மருத்துவர் எனும் நிலைக்கு ஒருவர் வர அவர்கள் செய்யும் தியாகங்கள் சொல்லி மாளாது. சரி விஷயத்துக்கு வருவோம்…
சமீப காலங்களாக மருத்துவர்கள் மீது நடத்தப்படும் அநீதி மிகவும் கண்டிக்கத்தக்கது. கேரள மாநிலத்தில் பயிற்சி மருத்துவர் குத்தி கொலை செய்யப்பட்டதும், கொல்கத்தாவில் மருத்துவ மாணவி மேல் நடந்த மிருகத்தனமும், இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் மூத்த மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதும், இன்னும் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் தாக்கப்படுவதும்… எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது நமது மனித சமுதாயம்? எல்லாவற்றையும் தாண்டி சக மனிதர் மேல் எதற்கு இந்த காழ்ப்புணர்ச்சி. வெகு சில இடங்களில் சில மருத்துவர்கள் சில தவறுகள் செய்யலாம். அதை எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டுதலாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது அல்லவா?
கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு மிக மிக இயல்பாக நடந்து சென்ற ஒரு இளைஞரை சமூக வலைத்தளங்களில் பார்க்க நேர்ந்தது. அதற்கு அவர்கள் தரும் விளக்கம் 'தாய்ப்பாசம்'. அந்தச் செய்தி, வரிந்து கட்டிக்கொண்டு வலைத்தளங்களில் பதிவிடப்படும் பொழுது தவறான எண்ணப்பதிவுகள் நமது சமுதாயத்தை குறிப்பாக இளைய சமுதாயத்தையே வேறொரு பார்வைக்கு - பாதைக்கு கொண்டு சென்று விடும். அதை உணர்த்தவும் தெளிவுபடுத்தவும்தான் இந்த பதிவும் கூட. நம் சமுதாயத்தை, வாழ்வியலை மேம்படுத்துவதே ஊடகங்களின் தர்மம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இங்கு மருத்துவத் துறையையும் தராசில் வைத்துப் பார்க்கத் தவறக் கூடாது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சில மருத்துவர்கள் தெரியாமல் அல்லது கவனக்குறைவால் சில தவறுகள் செய்து விடுவதும் சில இடங்களில் தெரிந்தே தவறிழைக்கப்படுவதும் பார்த்தும் கேட்டும் வருகிறோம் என்பதையும் உற்று நோக்க வேண்டியுள்ளது. மனித உயிர் விலைமதிப்பற்றது. மருத்துவர்களும் தங்களின் தார்மீக பொறுப்புணர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதே இங்கு பதியப்பட வேண்டிய மற்றோர் செய்தி.
I WILL NOT PERMIT considerations of age, disease or disability, creed, ethnic origin, gender, nationality, political affiliation, race, sexual orientation, social standing or any other factor to intervene between my duty and my patient.
மருத்துவ பாதையின் ஒளி விளக்கு இந்த உறுதிமொழியின் வார்த்தைகள் அல்லவா.
ஏற்கனவே நிறைய இழந்துவிட்டோம். இனியும் வேண்டாம். கேள்விப்படவோ பார்க்கவோ கடந்து செல்லவோ மனதில் தெம்பில்லை. சறுக்கி விட்டோம். சரி இனி என்ன? என குப்புறப் படுத்துக்கொண்டு மற்றவர்களையும் தவறான பாதையில் நடத்துவதா நமது குருதியில் பதிக்கப்பட்ட பாடம்? இல்லையே! அதன்பின் வீறுகொண்டு எழுந்து நிற்கத்தானே சொல்லிக் கொடுத்திருக்கிறான் நமது ஆதித்தமிழன். தவறு எந்தப்பக்கம் நடந்தாலும் தட்டி கேட்பதுதான் நமது இயல்பு.
When someone is in pain
When someone is sick
When someone is hurt
Who is there to help you…
We are there to serve you
Who is there to cure you
We are there to save you
Please don't hurt us
Please don't hurt us
We are people like you…
'Harshamitra know cancer no cancer' வலையொளியில் ஒலிக்கும் மருத்துவர்கள்கான பாடல் கேட்டு பாருங்களேன்.
நம்மைச் சார்ந்த நோயாளிகள் எப்படி நமக்கு அப்பா அம்மா அண்ணன் தங்கை மாமன் மச்சானோ அதேபோலத்தானே மருத்துவரும் அவரின் குடும்பத்துக்கு - மறந்துவிட்டோம். மருத்துவர்கள் உறுதிமொழிகளை பார்வையாளர்களாக இருந்து படித்துப் பார்த்திருப்போம் - மறந்து விட்டோம். நமக்கு தாயாய் தன் தோள் தந்து நம்மைத் தேற்றி நம் நோயிலிருந்து வெளியே கொண்டு வந்த மருத்துவரின் பணிகள் - மறந்து விட்டோம்.இவ்வளவு ஏன் கொரோனா கால கட்டங்களில் நாமெல்லாம் மனித முகங்களைக் காணக் கூட அஞ்சி வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த வேளையில் தங்களின் இன்னுயிரையும் மதிக்காது களப்பணியில் இருந்தவர்கள் தான் அந்த தெய்வப் பிறவிகள். நமக்காக எத்தனையோ மருத்துவர்களும் செவிலியர்களும் உயிர்த்தியாகம் செய்தார்கள் - மறந்து விட்டோம்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.