ஒவ்வொரு வருடமும், செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் என்று நம் நாட்டில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், நம் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வபள்ளி இராதகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்.
1888ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திருத்தணியில் பிறந்த டாக்டர். இராதகிருஷ்ணன், மெட்ராஸ் கிறித்துவ கல்லூரியில் பி.ஏ. எம்.ஏ. படித்தார். பன்முகத் தன்மை கொண்ட அவர் பேராசிரியர், இந்திய மற்றும் அயல்நாடு பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர், இந்தியாவின் தூதர், துணை குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவர் என பல பதவிகளை வகித்தவர். தத்துவவாதி, பல புத்தகங்கள் எழுதியவர், சிறந்த பேச்சாளர் என்று பல பணிகளைச் செய்தாலும், தன்னை ஆசிரியர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொண்டார்.
அவருடைய பெயர் 16 முறை இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கும், 11 முறை சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
1962ஆம் வருடம் டாக்டர். இராதகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக பதவியேற்றப் பிறகு, அவருடைய நெருங்கிய நண்பர்களும், அவரிடம் படித்த மாணவர்களும், அவருடைய பிறந்த நாளைக் கொண்டாட அவரிடம் அனுமதி வேண்டினார்கள். ஆனால், தன்னுடைய பிறந்த நாளுக்குப் பதிலாக அந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடலாம் என்று அறிவுறுத்தினார். ஆகவே, இந்தியாவில் முதல் ஆசிரியர் தினக் கொண்டாட்டம், செப்டம்பர் 5, 1962, அவரின் 77வது பிறந்த நாள் அன்று அனுசரிக்கப்பட்டது.
ஆசிரியர்களும், மாணவர்களும் ஆவலோடு எதிர்பார்க்கின்ற நாள் ஆசிரியர் தினம். தன்னுடைய முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் ஆசிரியர்கள் என்னென்ன முயற்சி மேற்கொள்கிறார் என்று அறிவதற்கு மாணவனுக்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஆசிரியர்கள் கௌரவிக்கப்படுவதன் மூலம், “நாம் செய்கின்ற முயற்சிகளுக்கு, மாணவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது” என்று அந்த ஆசிரியர் பணி மேலும் சிறக்கிறது. ஆசிரியர், மாணவர்களுக்கிடையே நல்லதோர் இணைப்பை ஏற்படுத்த ஆசிரியர் தினம் உதவுகிறது.
ஆசிரியர் தினத்தன்று, குடியரசுத் தலைவர் சிறந்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கிறார். இந்தப் பரிசு இளநிலை, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர் தினத்தன்று, சிறந்த ஆசிரியர்கள் என்று தேர்வு செய்யப்பட்டவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.
நம்முடைய வளர்ச்சிக்கு மூல காரணம், சிறு வயது முதல், பற்பல நிலைகளில் நமக்கு கற்பித்து வழி நடத்திய ஆசிரியர்கள், என்பதை உணர்ந்து அவர்களுக்கு மனதார நன்றி செலுத்துவோம்.
“சர்வதேச ஆசிரியர்கள் தினம்” அக்டோபர் மாதம் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. யுனஸ்கோ பரிந்துரையின் படி 1994ஆம் வருடம் முதல் இது அனுசரிக்கப்படுகிறது.
“ஞானம் என்னும் மைதீட்டும் தூரிகையால், அறியாமை இருளால் ஒளியிழந்தவனுடைய அகக் கண்ணைத் திறந்து வைத்த குருவுக்கு வணக்கம். – சமஸ்கிருத ஸ்லோகம்.”