வீடு / குடும்பம்

என்ன படிக்கலாம்…எங்கு படிக்கலாம்?

Jessica

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முடிந்த மகிழ்ச்சியை கொண்டாட ஆரம்பிக்கும் முன், அவர்களை முழுவதும் ஆட்கொண்டுள்ளது உயர்கல்வி குறித்த பல்வேறு சந்தேகங்கள். 

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மட்டும் உயர்வாக நினைத்து வந்த நிலைமாறி, நாம் ஆச்சரியப்படும் வகையில் இன்று பல்வேறு புதிய படிப்புகள் மாணவர்களின் கனவாக மாறி வருகின்றது. குறிப்பாக அனிமேஷன், ரொபோடிக் சயின்ஸ், பெர்ஃப்யூஷன் டெக்னாலஜி என அடுக்கிக்கொண்டே போகலாம். புதுமையை விரும்பும் மாணவர்களுக்கென பல்வேறு சவால்கள் நிறைந்த படிப்புகளும் காத்திருக்கின்றன.

வேலை வாய்ப்பே பிரதான இலக்கு என்பதால் எதிர்காலத்தை தீர்மானிக்கும் படிப்பை சரியாக தேர்வு செய்வதென்பது சவாலாகவே பார்க்கப்படுகின்றது. மனித வளம் தேவைக்கு மிகுதியா உள்ள துறைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மனித வளத்தின் தேவையை அதிக அளவில் எதிர்நோக்கி காத்திருக்கும் துறைகள் பலரின் கண்களுக்கு புலப்படுவதில்லை.

மதிப்பெண் அதிகம் எடுத்தவர்களுக்கு மட்டுமே உயர்கல்வி, அவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்ற காலம் மலையேறிவிட்டது. அனைத்து பிரிவு மாணவர்களும் தங்களுக்கு உரிய உயர்கல்வியை தேர்வு செய்யவும், அந்த துறையிலையே சாதிக்கும் வாய்ப்பு விரிந்து கிடக்கிறது.

மதிப்பெண் குறைந்தால் என்ன செய்வது, சிறந்த கல்லூரியை எப்படி தேர்வு செய்வது, கல்விக்கடனை பெருவதில் உள்ள சிக்கல்கள், படிக்கும் போதே வேலைவாய்ப்புக்கான திறன்களை வளர்த்துக்கொள்வது எப்படி என மாணவர்களை சுற்றியுள்ள அடுக்கடுக்கான கேள்விகள் ஒரு புறம், படிக்கும் படிப்பிற்கு வேலை கிடைக்குமா, தலை சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என சிக்கலான கட்டத்தில் இருக்கும் மாணவர்களின் பொற்றோர்கள் பதற்றப்பட வேண்டாம். வேலைவாய்ப்பு என்பதையும் தாண்டி தங்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் சாமர்த்தியம் மாணவர்களுக்கு உண்டு. அவர்கள் விரும்பும் துறையை சிறந்த கல்லூரியில் படிக்கவைக்கும் பொற்றோர்கள் துணை நிற்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் அறிவுறுத்தலாக உள்ளது. 

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, பொறியியல் படிப்பு என்பது அடைய முடியாத பெருங்கனவு. இன்றோ, நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகள் தோறும் பொறியாளர்கள் நிறைந்திருக்கின்றனர். நம் ஊரில், தெருவில், குடும்பத்தில் என எங்கு பார்த்தாலும் பொறியாளர்கள் தான்.  ஆனால், அவர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்த பொன்னுலகம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டதா? பொறியியல் படித்து விட்டால் போதும்.  கை நிறையச் சம்பாதிக்கலாம். வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம் என்ற எண்ணம் ஈடேறியதா? இது விடை தெரியாத கேள்வி அல்ல. பல லட்சங்கள் செலவழித்து பொறியியல்  படித்துவிட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்கூட வேலை கிடைக்காமல் திண்டாடும் எத்தனையோ பொறியாளர்கள் உள்ளனர். ஃபைனான்ஸ் நிறுவனத்தில்  பணம் கட்டி ஏமாந்தவர்களைப் போல, அவர்களின் முகங்களில் எதிர்காலம் குறித்த அச்சம் உறைந்திருக்கிறது. எப்படியாவது, ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிடத் துடிக்கிறார்கள். யதார்த்தம், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறதா? ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்கா மற்றும் சீனாவில் எவ்வளவு பொறியாளர்கள் உருவாகிறார்களோ, அதைவிட அதிகமான எண்ணிக்கையில் இந்தியாவில் பொறியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர். 

ஜனவரி – 2011 நிலவரப்படி 98 லட்சமாக இருந்த இந்திய வேலையில்லா பொறியாளர்களின் எண்ணிக்கை, 2015-ல் 2 கோடியை தாண்டியுள்ளது. இதனால் பொறியியல், மருத்துவம் படித்தால் தான் வேலைவாய்ப்பு என்ற எண்ணத்தை மாணவர்கள் மாற்றி கொள்ள வேண்டும். பொறியியல், மருத்துவம் படிப்பிற்கு இணையாக ஏராளமான தொழில் படிப்புகள் உள்ளன. நல்ல‌ வேலை வாய்ப்புகள் தரும் படிப்புகள் நூற்றுக் கணக்கில் இன்று உள்ளன. பள்ளிக் கல்வியை முடித்த ஒருவர் அதற்கு மேல் என்னென்ன படிப்புகளை மேற்கொண்டு வேலைவாய்ப்பினைப் பெறலாம் என்பது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.

தகவல் தொழில்நுட்பத்துறை ( (Department of Information Technology) 

தற்போது உலகையே தன் கைக்குள் வைத்திருக்கும் துறை. பல நாடுகளின் பொருளாதார ஏற்றத்துக்குக் காரணமான துறை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை விரும்பும் டிஜிட்டல் ஆச்சர்யங்களைத் தரும் இத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகம். 

விண்ணப்பம்: 

பன்னிரண்டாம் வகுப்பில் பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகளில் படித்துத் தேர்வானவர்கள், இளங்கலை தகவல் தொழில்நுட்பப் படிப்பான பி.எஸ்ஸி., ஐ.டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளிலும் பரவலாக வழங்கப்படும் இந்தப் படிப்புக்கு, கடந்த பத்தாண்டுகளில் வரவேற்பு அதிகரித்தவண்ணம் இருக்கிறது. பி.எஸ்ஸி., ஐ.டி மட்டுமல்லாது, இளங்கலையில் பி.பி.ஏ, பி.சி.ஏ துறைகளில் பட்டம் பெற்றவர்களும், எம்.எஸ்ஸி., தகவல் தொழில்நுட்பவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பி.எஸ்ஸி., ஐ.டி மற்றும் பி.எஸ்ஸி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்றவர்கள், எம்.சி.ஏ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

சிலபஸ்: 

கணினியின் செயல் முறையில் இருந்து, புரோகி ராமிங் லாங்குவேஜ், கணினி பயன்படும் துறைகள், தகவல் தொழில்நுட்பத்தில் கணினியின் பங்கு என கணினி உலகின் செயல்பாடுகளுக்கான பரந்த அறிவு புகட்டப்படும். 

பொறியியல் முக்கியமான துறைகள்:

உலகம் பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதற்கான சான்றாக பல்வேறு புதிய பொறியியல் [படிப்புகள் கால நிலைக்கு ஏற்ப அதிகரித்துள்ளது. இந்த துறையில் பொறியியல் படிப்பா என நம்மை வியப்பூட்டும் வகையில் உள்ள சில பொறியியல் 

படிப்புகள்

பொறியியல் படிப்புகள் என்றாலே மெகானிகல் , எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் @ கம்யூனிகேசன் என ஒருசில படிப்புகள் மட்டுமே அனைவராலும் அறியப்பட்டுள்ளது. இதில் தேவைக்கு அதிகமாக மாணவர்கள் படிப்பதால், வேலைவாய்ப்புகள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இன்றைய தேவைக்கேற்பவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்க்கேற்பவும் புதுமையான பல பொறியியல் படிப்புகள் பலராலும் அறியப்படாமல் உள்ளது. 

நேவல் ஆர்க்கிடெக்ட்சர் மற்றும் ஓசியன் என்ஜினியரிங் (Naval Architecture and Ocean Engineering.) 

உலக பொருளாதாரத்தில் கடல் சார்ந்த போக்குவரத்து முக்கியத்துவம் வகிக்கின்றது. திறமையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை கையாள்வது கடல்சார் நிபுணர்களுக்கு ஒரு சவாலாகவே உள்ளது. இந்த துறையில் பொறியியல் படிப்பை படிப்பதன் மூலம் நிச்சயம் எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

விண்வெளி தொழில்நுட்பம்

பல மாணவர்களின் கனவாகவே இந்த துறை பார்க்கப்படுகின்றது. அசாத்திய திறமையும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே போதும். 

நானோ டெக்னாலஜி 

சத்தமில்லாமல் வளர்ந்து வரும் இந்த நானோ டெக்னாலஜி தற்போது பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. 

அணுப் பொறியியல்

ஒரு நாட்டின் அடிப்படையையே அசைக்கும் சக்தி கொண்டது இந்த நியூக்ளியர். இதனை படிப்பதன் மூலம் ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கலாம்.

போக்குவரத்து தொழில்நுட்பம்,உற்பத்திப் பொறியியல், நெசவுத்தொழில்நுட்பம்,ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம், இண்டஸ்டிரியல் பயோ டெக்னாலஜி, உணவுத் தொழில்நுட்பம் போன்ற புதுமையான பல தொழில்நுட்பங்கள், தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றது. பொறியியல் என்றாலே வெறும் மெகானிக்கும், எலக்ட்ரிக்கல்லும் அல்ல அதையும் தாண்டி நம் அன்றாட வாழ்விற்கு பயன்படும் பல விஷ்யங்கள் இருக்கின்றன. மாணவர்கள் தங்களின் ஆர்வம் எதில் உள்ளது என்பதை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றால் போல துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் அறிவுரையாக உள்ளது.

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT