Motivation article Image credit - pixabay
Motivation

ஆசையின் விளைவு என்னவாகும் தெரியுமா?

கல்கி டெஸ்க்

-ம.வசந்தி

சையே துன்பத்திற்கு காரணம். ஆசை இல்லாவிட்டால் துன்பமின்றி வாழலாம். அந்த ஆசை அளவோடும் அடுத்தவருக்கு கெடுதல் தராத வண்ணமும் இருத்தல் வேண்டும். மேலும் ஆசை அவரவர் தகுதிக்கு ஏற்ப இருந்தால் சிறப்பு. கல்வியின் மேல் மட்டுமே எவர் வேண்டுமானாலும் தகுதி தராதரம் இன்றி ஆசை கொள்ளலாம் . மற்றவர் பொருளின் மீது ஆசை வைத்தால் மனிதன் துன்பத்தில் துவள்கிறான். கல்வியின் மேல் ஆசை வைக்க  அவனும் அகிலத்தில் சிறக்கிறான். கல்வியாசை மட்டுமே மனிதனை மட்டுமல்ல மிருகம் மனம் கொண்டவனை கூட மாணவனாகவும், மாணவனைச் சிறந்த மனிதனாகவும் மனிதனை உலகம் போற்றும். மகானாகவும் மாற்றி அமைக்கின்றது.

மாறாக மன்னாசை, பெண்ணாசை, பொருளாசை, பதவியாசை இப்படி பல ஆசைகள் மனிதனை மிருகமாக்கி வாழ்வைச் சிறையிலே அடகுவைத்து சீரழிக்கின்றது. இதற்கு உதாரணமாக சிறையில் உள்ள கைதிகளிடம் கேட்டுப் பார்த்தால் ஒரு நிமிட சுகத்திற்காக என் வாழ்க்கையை அழித்துக் கொண்டேன் என்றோ, அற்ப சுகத்திற்காக ஆயுள் கைதியானேன் என்பவரும், ஒரு நொடி யோசித்து இருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது என்பவரும், கொஞ்சம் விட்டுக் கொடுத்து இருந்தால் நிச்சயம் நல்ல முடிவு கிடைத்திருக்கும் என்போரும், வாழ்வினை அழித்து சொர்க்க பூமியில் பிறந்து சிறை என்னும் சோக பூமியில் வாழ்வோரும் ஏராளம்.

நாம் தினம் தினம் எத்தனையோ சோக நிகழ்ச்சிகளை ஆசையால் விளைந்தவைகளை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் பார்க்கின்றோம். பார்த்தாலும் சிலருடைய மனம் மாறாமல் இருப்பது வேதனைக்குரியது. அடுத்தவன் அழகிய வண்ணப்பெட்டி வைத்துள்ளான். வேண்டுமானால் அவனிடத்தில் வாங்கி வரைந்து விட்டு கொடுத்துவிடலாம். அதை விடுத்து அதை நமக்கே சொந்தமாக்கலாம் என்று ஆசை வைத்தால் மிஞ்சுவது திருட்டுப் பட்டம் மட்டுமே. இப்படி அடுத்தவன் பொருளின் மேல் வரும் சின்ன சின்ன ஆசை தொடக்கத்தில் தோட்டத்தில் தானாக வரும் முள்ளாக இருந்தாலும் அது முடிவினில் அந்த ஆசை கொண்ட மனிதனை அழித்துவிடும்.

மனிதனின் சிறிய ஆசை என்பது சிறிய தீப்பொறி போன்றது. அதை பயன்படுத்தும் விதத்திலே பயனடைகின்றோம். ஆகவே ஆசை என்பது அளவாக இருந்தால் வாழ்க்கை அழகாகும். எவ்வளவுதான் மழை பொழிந்தாலும் பாத்திரத்தில் உள்ள நீர் மட்டுமே தாகம் தீர்க்கும். அதுபோல மனதில் உள்ள ஆசைகளை ஒழுக்கம் என்னும் பாத்திரத்தில் ஒருமுகப்படுத்தி வாழ்க்கை தாகத்தினை தீர்க்க முயற்சி மேற்கொண்டால் வாழ்க்கை சிறக்கும். ஆசையை அழிக்கச் சொல்லவில்லை. அளவோடு நிறுத்த சொல்கிறேன்  ஆசை ஒன்றே துன்பத்திற்கு காரணம் என்பதை புத்தர் உணர்ந்ததால் மக்களை அழிவில் இருந்து காக்கும் மந்திரத்தை கூறினார்  இன்று மக்களிடம் மண்டி கிடக்கும் மட்டற்ற எண்ணங்களை ஒழிக்க ஆயிரம் புத்தர்கள் வந்தாலும் முடியாது.

எந்த ஒரு மனிதனின் ஆசை நியாயம் அற்றதோ அன்றே அவன் நிராயுதபாணி ஆகின்றான். ராமனின் ஆசை இலங்கைக்கு அழிவானது: துரியோதனின் ஆசை கௌரவர்களின் அழிவிற்கு பாதை போட்டது: இரணியனின் ஆசை மகனால் முடிந்தது: கோவலனின் பெண் ஆசையால் மதுரை சாம்பலானது: இப்படி வரலாறு எவ்வளவோ கூறினாலும் மனிதர்கள் மாறவில்லை மீண்டும் துன்பத்தில் உழள்கின்றனர் .மாற வேண்டும் புதிய பாதை வகுக்க வேண்டும். புத்துணர்வு பெற வேண்டும்.

ஆசையை ஒழித்து மனதை தெளிவாகி வாழ்க்கை சிறக்க வழி காணுங்கள்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT