ஆளுமை தருமே நமக்கு அடையாளம்!

motivation articles
motivation articlesImage credit - pixabay
Published on

நாம் நம்மிடையே காண்பது சுயதோற்றம். பிறர் நம்மிடையே பார்ப்பதுதான் ஆளுமை. பெர்சனாலிட்டி (personality) என்ற ஆங்கிலச் சொல்லை அடிக்கடி இன்று கேட்கின்றோம். இந்தச் சொல் ‘பெர்சனா’ என்ற இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதாகும்.

பெர்சனாலிட்டி என்ற ஆங்கிலச் சொல்லின் மொழியாக்கம்தான் ‘ஆளுமை’ என்ற இந்தச்சொல். ஆளுமை என்பது ஒருவரது மனப்பான்மையைப் பொறுத்து அமையும். ஒரு தனிமனிதனின் அகம், புறம் ஆகியவற்றின் வெளிப்பாடே ஆளுமையாகும்.

அகத்தின் வெளிப்பாடாக உணரப்படும் ஆளுமை என்பது உள்ளத்து அக உயர்வு எண்ணங்கள், ஆசை, மனதின் எழுச்சி, சிந்தனை, கற்பனைத்திறன், அன்பு, கோபம், மகிழ்ச்சி, சோகம், கனவு, இரக்கம், ஏக்கம், பொறாமை போன்றவையாகும். புறத்தின் வெளிப்பாடாக உணரப்படும் ஆளுமையாவது பிறருடன் பழகும் முறை, அன்பு செலுத்துதல், உண்ணுதல், ஆடை அணிதல், பிறருக்கு உதவும் மனப்பான்மை போன்றவையாகும்.

இவ்வாளுமைப் பண்புகளே ஒருவரின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதாகும். ஆளுமை என்பது ஒருவருடைய சிறப்பு, மேன்மை, மதிப்பு, புகழ், வெற்றி ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்பாகும். சிறப்பு என்பது ஒருவருடைய நற்பண்பாகும். மேன்மை என்பது இந்த நற்பண்புகளால் கிடைக்கும் உயர்வாகும்.

மதிப்பு என்பது இவ்வுயர்வால் சமூகத்தில் கிடைக்கப்பெறும் அங்கீகாரமாகும். அங்கீகாரத்தில் கிடைக்கப் பெறுவது வெற்றியாகும். இத்தகைய கூறுகள் அனைத்தும் ஆளுமையின் வெளிப்பாட்டுக் கூறுகளாகும். ஆற்றல் மிக்க இளைஞர்களே ! இப்படி உங்களது ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பண்புகள்தான் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். ஆளுமை பற்றிய அடையாளங்கள் இன்னும் நிரம்ப இருக்கின்றன. உடல் தோற்றம், முகத்தோற்றம், நடை, உடை, பாவனை இவை போன்ற ஒட்டு மொத்த வடிவமாகும். ஆளுமை ஒருவர் மற்றொருவருக்கு எப்படித் தோற்றமளிக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

ஆளுமை என்பது ஒரு செயல். சமூகக் காரணிகளாலும் உருவாகிறது. பழக்க வழக்கங்கள், அறநெறிப் பண்புகள் மற்றும் சமூக நிறுவனத்திடம் மனிதன் கொண்டிருக்கும் ஈடுபாடு, பங்களிப்பிற்கேற்ப ஆளுமை அமையும்.

இனிய இளைஞர்களே! உங்களுக்குள் இருக்கும் படைப்பின் ஆளுமை வெளிப்படுகின்ற பருவம் இந்தப் பருவம்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் நேரம் தவறாமையை கடைபிடிக்கிறீர்களா?
motivation articles

எந்த ஓர் உழைப்புக்கும் ஒரு கருவி தேவைப்படுகிறது. கரும்பை வெட்ட ஒரு கத்தி, களையெடுக்க ஒரு களைக்குச்சி, கதிர் அறுக்க ஒரு பண்ணரிவாள், அப்படித்தான், எழுத ஒரு பேனா. சொற்களை கருவியாகக் கொண்டு உழைக்கிற உழைப்பு படைப்பு.

சொல்லின் ததும்பல் நேயத்தை வளர்க்கும். நேயம் பிறரது நெஞ்சை நெகிழச்செய்யும். நந்தவனத்தில் மெல்ல நடக்கும்போது நம் மீது பரவும் பூமணமும் புன்னகைக்கும் பூக்களும் தரும் நலனை நல்ல படைப்புகள் தருகின்றன. உங்கள் மனதை இதில் உலவ விடுங்கள்.

இப்படி எந்தக் கருவியை எப்படி எப்படிக் கையாளுவது என்பதில்தான் ஆளுமை அடங்கியிருக்கின்றது. உங்களிடம் வெளிப்படும் சிந்தனை, செயல், எண்ணம், மொழி, மனம், ஒழுக்கம், சமூக உறவு போன்றவைதான் உங்களுடைய ஆளுமைப் பண்புகளையும் வெளிப்படுத்தும். பிறருக்கு உங்களை அடையாளப்படுத்தும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com