நம்முடன் பணிபுரிபவர்கள் அல்லது நமக்குப் பணியாளர்களாக இருப்பவர்கள் தங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால், அதற்காக அவர்களைத் திட்டி வசைபாடுவது வேலைக்கு ஆகாது. ஒருவரைப் பாராட்டுவதால் ஒரு செயலை எப்படி ஊக்கமுடன் செய்வார்கள் என்பதைப் பற்றி இதில் பார்ப்போம்.
நண்பர்கள் இருவர் சிறு வயதிலிருந்து ஒன்றாகச் சேர்ந்து வளர்ந்து வந்தவர்கள். வளர்ந்த பிறகு இருவரும் தனித்தனியே ஆளுக்கு ஒரு கடையைத் தொடங்கி வியாபாரத்தைத் துவங்கினர். அதில் ஒரு நண்பரின் கடை வியாபாரம் நன்கு ஓடியது. மற்றொரு நபரின் கடையானது, அங்குள்ள பணியாளர்கள் வரும் வாடிக்கையாளரிடம் எடுத்தெரிந்து பேசுவதால் யாரும் வராமல் வியாபாரம் நலிவடைந்திருந்தது.
இதை பார்த்த அவருக்கு மிக மனவருத்தமாக இருந்தது. இதை தன் நண்பனிடமே கூறி எப்படி தீர்வு காண்பது என கேட்டுவிடலாம் என்று கிளம்பி விட்டார்.
அந்த நண்பரும் இவரை வரவேற்க இவரும் நடந்தவற்றையெல்லாம் அவரிடம் கூறினார்.
அதற்கு அந்த நண்பர் " நீ மற்றவர்களைப் பாராட்டு எல்லாம் சரியாகிவிடும். அவர்கள் வேலையை ஒழுங்காகப் பார்ப்பார்கள்".
மற்றொரு நண்பர் "அவர்கள் ஏதாவது வேலையை ஒழுங்காகப் பார்த்தால் தானே நான் பாராட்ட, அவர்கள் எந்த வேலையுமே சரியாகப் பார்ப்பதில்லை" என்றார்.
இதைக் கேட்ட நண்பர் சரி வா நாம் உணவருந்தலாம் என்று ஒரு உணவகத்திற்கு தன் நண்பரை அழைத்துச் சென்றார். அவர் சென்றது மதிய நேரம் என்பதால் அந்த உணவகம் மிகவும் பரபரப்பாக இருக்கும். அங்குள்ள பணியாளர்களும் களைப்புடன் பயங்கரமாக வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். இதைத் தெரிந்து அந்த நண்பர் இவரை அங்கு அழைத்துச் சென்றார்.
உணவகத்தில் சென்று தங்களுக்காக ஒதுக்கப்பட்ட மேசையில் இருவரும் அமர்ந்தனர். நீண்ட நேரமாகியும் யாரும் இவர்களை வந்து கவனிக்கவில்லை. பிறகு ஒரு பணியாளர் மட்டும் வந்து தண்ணீர் மட்டும் ஊற்றினார். அவர் தண்ணீர் ஊற்றும்போது இந்த நண்பர் அவருக்கு மதிய வணக்கம் சொன்னார். இருந்த பரபரப்பில் அந்தப் பணியாளர் இவரைக் கவனிக்கவில்லை.
உணவு வருவதற்கு நீண்ட நேரம் ஆவதால் அந்தப் பணியாளர் இவர்களைத் தேடி வந்து "உணவு வர சற்று தாமதமாகும்" என்று கூறி மன்னிப்பு கேட்டார்.
அதற்கு அந்த நண்பர் "இது மதிய வேலை மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். அதனால், உணவு தாமதமாக வரும் என்பதும் எங்களுக்கு தெரியும். அதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டாம்" என்றார்.
இதைக் கேட்டுப் புன்னகையுடன் சென்ற பணியாளர் இவர்களை நன்கு கவனித்து மற்ற மேசைகளுக்குப் பரிமாற சென்றார். இந்த இருவரும் உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் புறப்பட தயாரானார்கள். அந்தப் பணியாளரை அழைத்து சாப்பாட்டுக்குரிய பணத்தைக் கொடுத்து அவருக்கும் கூடுதலாகக் கொஞ்சம் அன்பளிப்புக் கொடுத்துவிட்டு இன்று எங்கள் நாளை அருமையாக மாற்றியதற்கு நன்றி என்று கூறிவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
அந்தப் பணியாளர் அடுத்த மேசையில் பரிமாறும்போது புன்னகையுடனும் மன மகிழ்ச்சியுடனும் பரிமாறினார்.
இதைப் பார்த்து புரிந்து கொண்ட அந்த மற்றொரு நண்பர் நம் கூட இருப்பவர்கள் சரியாக வேலை செய்கிறார்களோ இல்லையோ அவர்களுக்குச் சரியான முறையில் பாராட்டினை அளிக்க வேண்டும். அது அவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் வேலையை ஒழுங்காகச் செய்ய வைக்கும் என்பதைப் புரிந்துகொண்டார்.