mind power 
Motivation

மனதை கட்டுக்குள் வைத்தால்தான் உங்கள் முழு திறமையும் வெளிப்படுத்த முடியும்!

இந்திரா கோபாலன்

பெரும்பாலானவர்களை கவனித்தால்  அவர்கள் 8 மணிநேரம வேலை செய்தால்  அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கான திறமைதான் வெளிப்படுவது தெரிய வருகிறது.  இதற்குக் காரணம் குழப்பம். நம் சக்தியை ஆக்கபூர்வமாக செலவழித்தால்  பெரும் மாற்றங்கள் நிகழும். எந்த வேலையும் கடினமாகத் தோன்றாது.  அந்தப்பணி வழக்கத்தைவிட பாதி நேரத்திலேயே முடிந்து விடக்கூடும்

சரி. மனம் எதனால் தெளிவற்று இருக்கிறது. பெரும்பாலும் உங்கள் உணர்ச்சிகள் வெளிச்சூழ்நிலைகளால் தான் தூண்டப்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் அலைக்கழிக்கப்படுகிறீர்கள். பதவி உயர உயர வெளிச்சூழல்களை அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஒரு குருவிடம் பல சீடர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஆச்ரமத்தில் புகைக்க முடியாததால் தியானத்தில் மனம் செலுத்தாமல் தவித்தார்கள். இப்படி கஷ்டப்படுவதைவிட இங்கேயே நாங்கள் புகை பிடிக்கலாமா என்று கேட்க யோசித்தார்கள். மறுநாள் ஒருவன் முகத்தை தூக்கி வைத்தபடி தோட்டத்தில் உட்கார்ந்திருந்தான்.

அடுத்தவன் புகைபிடித்தபடி வந்தான். அவனைப் பார்த்ததும் இவன் பதறி அதெப்படி உன்னை மட்டும் குரு அனுமதித்தார் எனக் கேட்டான். அதற்கு அவன் நீ குருவிடம் என்ன கேட்டாய் என்றான். அதற்கு இவன் தியானம் செய்யும்போது சிகரெட் பிடிக்கலாமா என்று கேட்டேன்.

கூடாது என்றாரே என்றான் இவன்.

அதற்கு அவன் நான் "புகைபிடிக்கும்போது தியானம் செய்யலாமா" என்று கேட்டேன். தாராளமாக என்று அனுமதித்துவிட்டார். என்றான். 

மனம் அமைதியாக இருந்தால் எதுவுமே பிரச்னையாக தெரியாது. எப்போதெல்லாம் அமைதியை உணருவீர்கள்? வயிறு நிரம்ப  உண்டு முடித்தவர் களைப்பில் படுத்திருப்பான். நிம்மதிக்காக குடிக்கிறேன் என்று சிலர் நினைவில்லாமல் கிடப்பார்கள். இந்தமாதிரி இருப்பதல்ல அமைதி. உள்ளே அமைதியாக இருந்தால், மனம் முழுவதும் விழிப்புணர்வுடன் எதையும் சந்திக்கத் தயாராக இருக்கும்.

பச்சை பசேலென்று மலையைப் பார்க்கிறீர்கள். மனம் அமைதியாக இருக்கும். திடீரென்று மரங்களின் மறைவிலிருந்து ஒரு யானை வெளிப்பட்டால் அமைதி போய் படபடப்பு ஏற்படும்.  ஆனால் உள்ளே நீங்கள் அமைதியாக இருந்தால் யானையை பார்த்ததும் ஸ்தம்பிக்காமல் உங்களைக் காப்பாற்றிக்கொள்ள செயல்படுவீர்கள். 

பொதுவாக எப்போதெல்லாம் நம் அமைதி கலைக்கப்படும் தெரியுமா?.  நாம் எதிர்பார்த்தபடி மற்றவர்கள் நடந்து கொள்ளாத போது  கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது. எங்கே மனிதர்கள் எதிர்த்துக் கேள்வி கேட்காமல், உங்களுக்குப் பணிந்து உங்கள் செய்கையை சகித்துக் கொள்கிறார்களோ அங்கே அமைதியை உணர்கிறீர்கள். நீங்கள் அமைதியாக இருக்க உங்கள் அகங்காரத்திற்கே தீனி போட வேண்டியிருக்கிறது.

நீங்கள் ஒன்று  புரிந்து கொள்ளுங்கள். உங்கள் அகங்காரத்தையும், ஆர்வத்தையும் ஆதரிப்பவர்கள் உண்மையில் உங்கள் நண்பர்கள் அல்ல. உங்கள் வளர்ச்சிக்குத் தடைபோடும் மோசமான எதிரிகள்.

உங்களுக்குள் இருக்கும் சக்தியை  கட்டுப்படுத்தி உங்கள் விருப்பப்படி செயல்படுத்த கற்றுக்கொள்ளாததால்தான் எல்லா அவதிகளும் வருகின்றன. நீங்கள் உள்ளே முழு அமைதியாக இருந்தால் வெளியே வெகு சுறுசுறுப்பாக இருக்க முடியும். மனதை ஒரு கட்டுக்கோப்பில் வைத்திருந்தால்தான் உங்கள் திறமை முழுமையாக வெளிப்படும்.

எங்கும் ஒலிக்கத் தொடங்கி விட்டது சுவாமி ஐயப்பனின் சரண கோஷம்!

டேஸ்டியான ராகி சப்பாத்தி - பிரட் தோசை செய்யலாம் வாங்க!

சமூக ஒருங்கிணைப்புக்கு அவசியமாகும் சகிப்புத்தன்மை!

குளிருக்கு இதமாக, ப்ரோட்டீன் நிறைந்த பச்சைப் பட்டாணி-பசலைக் கீரை சூப் செய்யலாமா?

சைபர் கிரைம்: திரைக்குப் பின் அதிகரிக்கும் குற்றங்கள்; சிக்கித் தவிக்கும் மக்கள்! தப்பிக்க என்ன வழி?

SCROLL FOR NEXT