"இல்லாதவன் இல்லை என்று கேட்கும்போது, இல்லை என்று சொன்னால் நீயும் இல்லாதவன் தானே"
யாரோ சொன்ன இந்த வாசகங்கள் ஹரியின் நினைவில் வந்து அவ்வப்போது நின்றதன் பலன் இன்று ஹரி இல்லாதவருக்கு உதவிடும் பெரும் ஈகை குணத்துடன் வாழ்ந்து வருகிறார்.
ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன். நல்ல கல்வி அறிவு கொண்ட ஹரி சிறு வயதிலிருந்து அடுத்தவருக்கு உதவும் குணமும் சமூகத்தின் மேல் கொண்ட அக்கறையுடன் வளர்ந்தவர். காரணம் ஹரியின் அம்மா.
சக மனிதர்களின் மனங்களை படித்தவராக அந்த பெண்மணி தன் வீட்டிலிருந்து சேவைகளை செய்து வருவதில் மிகுந்த விருப்பம் உடையவராக இருந்தார். உதாரணமாக தன் வீட்டில் மிகுதியாகிக் போகும் உணவுகளை கூட வீணாக்காமல் அதை சரியான முறையில் பகிர்ந்து வெளியில் தேவைப்படுபவர்களுக்கு பகிர்ந்து தருவார். கல்வி உதவியோ அல்லது மருத்துவ உதவியோ எதுவாக இருந்தாலும் தனக்கு தெரிந்தவர்களிடம் உதவிகேட்டு செய்வதில் சிறந்தவர்.
படித்து முடித்து மனிதவள மேம்பாட்டு துறையில் பணி கிடைத்த நிலையில் பல கல்லூரிகளில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சிகளை அளித்து வருகிறார் ஹரி. ஒருமுறை ஹரி பேருந்து நிலையத்தில் நின்றபோது ஒரு சிறுவன் கையேந்தி வர அப்போது உண்மையிலேயே ஹரியிடம் பத்து ரூபாய் நோட்டோ அல்லது சில்லறை எதுவும் தட்டுப்படவில்லை. எப்போதும் இல்லை என்று சொல்லாத ஹரி அன்று இல்லை தம்பி என்று சொல்ல அப்போது ஹரியை கடந்து சென்ற யாரோ ஒருவர் கூறிய இந்த வசனம் ஹரியின் மனதில் ஆழமாக பதிந்தது.
'இல்லாதவர் இல்லை என்று கேட்கும்போது இல்லை என்று சொல்லும் நீயும் இல்லாதவனே' எனும் வார்த்தைகள் ஹரிக்குள் எதுவோ செய்தது.
இதற்கும் வெற்றிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்கிறீர்களா? நிச்சயம் உண்டு. தன்னம்பிக்கை வகுப்புகளை பேசி ஹரி சம்பாதிக்கும் பணம் மாதத்தில் ஒரு நாள் இல்லாதவர்களின் பசி தீர்க்கவும் முதியோர்களின் தேவைகளை நிறைவேற்றவும் உதவுகிறது. இதனால் ஹரிக்கு கிடைக்கும் மனநிம்மதியும் ஆத்ம திருப்தியும் ஹரியை அவரது லட்சியத்தில் மேலும் முன்னேற வைக்கிறது எனலாம்.
ஆம். ஹரியின் சேவை மூலம் கிடைத்த தொடர்புகள் அவரது பணிக்கு உறுதுணையாக உள்ளதுதான் உண்மை. தேடிப் போகாமலேயே ஹரியை அழைத்து பேசவைக்கும் அளவுக்கு ஹரியின் புகழ் கல்லூரிகளில் பரவுகிறது. காரணம் ஹரியின் ஈகை குணம் வெற்றிக்கு கல்வியும் திறமையை மட்டும் காரணமாகி விட முடியாது.
ஒருவருக்கொருவர் இயலாமையின்போது தந்து உதவும் ஈகை குணமும் வெற்றியை தேடித்தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது எனலாம். ஆம் மனிதநேயம் என்பது வெற்றியை விடவும் உயர்ந்தது அல்லவா?
குழந்தை பருவத்திலே இருந்தே சக குழந்தைகளுடன் பகிர்ந்து உண்ணவோ அல்லது பகிர்ந்து விளையாடவோ கற்றுக்கொடுக்க வேண்டும். இப்படி ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் மனப்பக்குவத்துடன் வளரும் குழந்தைகள் எந்த சூழ்நிலையிலும் வெற்றிபெற தயங்க மாட்டார்கள். ஈகையுடன் கனிவான அறிவும் திறமையும் இருந்து விட்டால் நிச்சயம் நீங்கள் மற்றவரால் கவனிக்கப்பட்டு உயர்ந்த நிலைக்குச் செல்வது உறுதி.