ஒரு முறை மட்டுமே பயணிக்க முடிந்த அற்புதமான பயணம்தான் வாழ்க்கை! எப்போது தொடங்கினோம் என்று தெரிந்தும் எப்போது முடியும் என்று தெரியாமலும் பயணம் செய்கிறோம்.
இந்த பயணத்தில் எதிர்வரும் அனுபவங்களை ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நிர்ணயிக்கிறது. அது மகிழ்ச்சிகரமானதாகவோ அல்லது கவலைக் குரியதாகவோ மாற்றுகிறது. ஆனால் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கான ரகசியத்தையும் நம்மிடம் தந்தே படைத்திருக்கிறார் இறைவன்.
ஆம்.. சிரிப்பு தான் அந்த ரகசியம். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உள்ள ஒரே உணர்வு வேறுபாடு இந்த சிரிப்பு மட்டுமே. காதல், பசி, உறக்கம், சினம் போன்ற உணர்வுகள் இந்த பூமியில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை.. சிரிப்பைத் தவிர்த்து.
காலை நேரம்... அந்த சாலை ஓரத்தில் இரு வேறு கடைகள். ஒன்று மருந்துக்கடை. மற்றொன்று பூக் கடை. இரண்டிலுமே நடுத்தர வயதுப் பெண்கள் இருந்தனர். மருந்துக்கடைக்கு அவசரமாக சென்று வந்த ஒருவர் "இனிமே அந்தக் கடைக்கு போகவே கூடாது..முகத்தைக் கடுப்பா வெச்சிக்கிட்டு ரூல்ஸ் பேசுது அந்தம்மா. நமக்குத் தேவையானதைத்தானே வாங்க முடியும். சிரிக்கவே சிரிக்காது போல. இவங்க கிட்ட மருந்து வாங்கினா உடம்பு சரியாகுமா? " பேசியபடி கடந்தார்.
அப்போது பூக்கடைக்கு சென்று வந்த தோழி ஒருவர் " பூ விக்கற அந்தம்மா எப்பவும் சிரிச்சிக்கிட்டேதான் பழகுவாங்க. கறாரான வார்த்தையெல்லாம் கிடையாது. . இத்தனைக்கும் கணவரில்லாம கஷ்டப்பட்டு புள்ளைய வளக்கறாங்க. ஆனா அந்த சோகம் எல்லாம் முகத்துல காட்டவே மாட்டாங்க. கலகலன்னு சிரிக்கிறதால நமக்கும் உற்சாகம் வரும் . அதான் எப்பவுமே நான் இவங்க கிட்ட வந்து பூ வாங்கறேன்." என்றார்.
இரண்டு மனிதர்கள். இரு வேறு உணர்வுகள். ஒன்று கறார். மற்றொன்று கருணை. இவ்வளவுதான். ஆனால் வெற்றி யாருக்கு ?
பூ வாங்குவதற்காகவே எங்கிருந்தோ வரும் தோழி போன்றவர்களை கவர்ந்து வெற்றி பெறுகிறார் சிரித்த முகமாக பூ விற்கும் அந்தப்பெண். மருந்துக்கடைக்கு கறார் பெண்மணியோ தேடிவரும் வாடிக்கையாளரையும் விலக வைக்கிறார் தனது கடுகடு முகத்தைக் காட்டி.
வெற்றிக்குத் தடையான பொறாமை, கோபம், வன்மம் இவற்றை தவிர்த்து அன்பு, நேசம் ,பாசம் இவற்றை பகிர்ந்து கொள்வோம். கூடவே முகம் நிறைய சிரிப்புடன்... சிரித்தால் நிச்சயம் வெற்றி சிறகுகள் விரியும். சிறகுகள் விரிந்தால் வானம் நம் வசம்.