சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் மண் தலமாகத் திகழ்வது காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில். இத்திருக்கோயிலில் மூலவர் ஏகாம்பரநாதர் மணல் லிங்கமாகக் காட்சியளிக்கிறார். இதனால் இத்தலத்து லிங்கத்தை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். இத்தலத்தில் புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி ஈசனை வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடைபெறுகின்றன.
உலகப் புகழ் பெற்ற பிரம்மாண்டமான இத்தலத்தின் தல விருட்சமாக மாமரம் உள்ளது. இந்த மாமரமானது 3,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கருவறைக்கு பின்புற பிராகாரத்தில் அமைந்துள்ளது இந்த மாமரம். இந்த அபூர்வமான மாமரத்தின் அடியில் சிவபெருமான் அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். அம்பாள் தவம் செய்தபோது ஈசன் இந்த மாமரத்தின் கீழ் காட்சி தந்து மணம் முடித்தார் என்பது ஐதீகம்.
சிவபெருமானின் பல அற்புதத் திருக்கோலங்களில் சோமாஸ்கந்தர் வடிவம் மிகவும் சிறப்பானது. சிவபெருமானும் பார்வதி தேவியும் முருகப்பெருமானுடன் இணைந்து காட்சி அளிக்கும் திருக்கோலமே சோமாஸ்கந்தர் வடிவமாகும். சிவபெருமான் அமர்ந்த நிலையில் காட்சி தர சிவபெருமானுக்கு இடது புறத்தில் பார்வதி தேவி அமைந்திருக்க இடையில் முருகப்பெருமான் காட்சி தருவார். இதைப்போலவே, காஞ்சியில் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் சிவபெருமானும் நடுவில் குமரகோட்டம் திருக்கோயிலில் முருகப்பெருமானும், அடுத்ததாக ஸ்ரீகாமாட்சி அம்பாள் திருக்கோயிலில் காமாட்சி அம்பாளும் என மூன்று திருத்தலங்களும் சோமாஸ்கந்த வடிவத்தில் அமைந்துள்ளது ஆச்சரியமாக விசேஷமாகும்.
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் அமைந்துள்ள அபூர்வமான இந்த மாமரத்தின் நான்கு கிளைகள் ரிக், யஜூர், சாம, அதர்வண என்று நான்கு வேதங்களைக் குறிப்பதாக ஐதீகம். இதனால் இந்த மாமரம் தெய்வீகமான மாமரமாக கருதப்படுகிறது. பழைமை வாய்ந்த அபூர்வமான இந்த ஒரே மாமரத்தில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய நான்கு வெவ்வேறு சுவைகளை கொண்ட கனிகள் காய்ப்பது அதிசயம். புத்திரப் பேறு இல்லாதவர்கள் இந்த மாமரத்தின் கனியை உட்கொண்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மாமரம் பட்டுப்போனது, இதை மீண்டும் உயிர்ப்பிக்க உயிரியல் துறை நிபுணர்கள் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சென்ற ஆண்டு முதல் இந்த மாதத்தில் மீண்டும் மாங்கனிகள் காய்க்கத் தொடங்கி உள்ளன. காஞ்சிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சென்று, இறைவன், இறைவியோடு சேர்த்து இந்த அபூர்வமான தலவிருட்சத்தை தரிசித்து வாருங்கள்.