கொடுப்பதில் உள்ள கோடி நன்மைகள்!

Koduppathil Ulla Kodi Nanmaigal
Koduppathil Ulla Kodi Nanmaigalhttps://www.vikatakavi.in
Published on

னிதர்கள் அடிப்படையில் அன்பும் கருணையும் மிக்கவர்கள். தனது குடும்பம், தனது உறவுகள் என்று முக்கியத்துவம் தந்தாலும் தமது வாழ்நாளில் பிறருக்கும் உதவ வேண்டும் என்கிற கோட்பாட்டை மனிதர்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம். பிறருக்குத் தருவதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. கொடுப்பது பெறுபவர்க்கும், தருபவருக்கும் சேர்த்து இன்பம் தரும்.

கஷ்டப்படும் ஒரு மனிதருக்கு பணமாகவோ பொருளாகவோ தந்து உதவும்போது அது கொடுப்பவருக்கு மிகப்பெரிய மனநிறைவைத் தருகிறது. தங்கள் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உணர்கிறார்கள். தம்மிடம் உதவி பெற்றோர் மகிழ்ச்சி அடையும்போது அதைப் பார்த்து கொடுத்தவருக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகும்.

பிறருக்குக் கொடுப்பதன் மூலம் ஒருவருடைய மனதும் உடலும் மேம்படும். கருணை மற்றும் இரக்கம் சுரக்கும் மனதிற்கு சொந்தக்காரருக்கு மன அழுத்தமும் மனச்சோர்வும் உண்டாவதில்லை. அப்படியே இருந்தாலும் மன அழுத்தத்தை அது குறைக்கிறது. அவர்களது இரத்த அழுத்தம் குறைந்து உடல் நலம் சீராக பாதுகாக்கப்படுகிறது.

உறவினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ பொருளாதார ரீதியாக உதவி செய்யும்போது அது உறவுகளையும் நட்புகளையும் பலப்படுத்தும். அவர்களுடைய ஆதரவு எப்போதும் கொடுத்தவருக்குக் கிடைக்கும். அவர்களுக்குக் கொடுத்த பணமோ, பொருளோ அளவில் சிறியதாக இருந்தாலும் பெற்றவருக்கு அது பெரியதாகத்தான் தெரியும். அவர்களுக்கு சரியான நேரத்தில் கிடைத்த அந்த உதவி அவர்களுடைய அந்தச் சமயத்து இக்கட்டையோ அல்லது சிக்கலையோ தீர்த்திருக்கும். அந்த வகையில் கொடுத்தவர் அவருக்கு மிகப்பெரிய உதவி செய்தார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறருக்குக் கொடுப்பதன் மூலம் அனுதாபமும் பச்சாதாபமும் இரக்கமும் ஒருவருடைய இயல்பாகிவிடும். அவரால் மிக எளிதாக பிறருடைய கஷ்டங்களையும் துன்பங்களையும் போராட்டங்களையும் புரிந்து கொள்ளவும் அனுதாபப்படவும் தேவையான நேரத்தில் உதவி புரியவும் வைக்கிறது.

ஒருவர் பிறருக்கு உதவுவதைப் பார்த்து அவருடைய நண்பரோ அல்லது உறவினரோ அதனால் ஈர்க்கப்பட்டு தானும் பிறருக்கு பொருள் அல்லது பணம் கொடுத்து உதவ நேரலாம். இது சமுதாயத்தில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நல்ல மனிதர்களின் எண்ணிக்கை கூடுகிறது. மக்களிடையே இரக்கம், கருணை பச்சாதாபம் போன்ற உணர்வுகள் மேலோங்குகின்றன. இதனால் ஒட்டுமொத்த சமுதாயமே நிம்மதியான, அமைதியான, திருப்தியான வாழ்வை வாழ்வதற்கு ஒரு வழி பிறக்கிறது.

சமுதாயப் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கவும் இந்த உதவி செய்யும் குணம் உதவுகிறது. சமத்துவத்தை மேம்படுத்துவதிலும் இது முன் நிற்கிறது. மனிதர்கள் அக்கறையுள்ள ஆதரவான மனிதர்களாக மாறுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமைகின்றது.

இதையும் படியுங்கள்:
இதையெல்லாம் செய்தால் வாக்கிங் போறது வேஸ்ட்!
Koduppathil Ulla Kodi Nanmaigal

பிறருக்குத் தருவதன் மூலம் ஒரு தனிநபரும் வளர்ச்சி அடைகிறார். மன ஆறுதல் அடைகிறார். புதிய திறன்களை வளர்த்துக் கொண்டு பிறருக்குத் தர வேண்டுமே என்பதற்காக தன்னுடைய வருவாயை உயர்த்திக் கொள்ளவும் கூடும்.

கடவுள் தங்களுக்குத் தந்த பொருளை, பணத்தை பிறருக்குத் தர வேண்டும் என்கிற உணர்வு அவர்களிடம் எழும்போது, அது அவர்களுக்குக் கடவுளுக்கு செலுத்தக்கூடிய நன்றி உணர்வாக அமைகிறது. மேலும், தாங்கள் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் காண்கிறார்கள். எல்லா மதங்களும் வற்புறுத்துகின்ற மனிதர்களிடத்தில் அன்பு காட்ட வேண்டும் என்கிற சித்தாந்தத்தை அவர்கள் புரிந்து கொண்டு நடக்கிறார்கள்.

பணமாக, பொருளாகக் கொடுத்து உதவ முடியாவிட்டாலும் உடல் உழைப்பாகக் கூட பலரால் உதவ முடியும். சிலருக்கு அதுவும் முடியாவிட்டாலும் நல்ல வார்த்தைகள், ஆறுதல் தரும் அறிவுரைகள் போன்றவற்றை பிறருக்குத் தாராளமாக வழங்க வேண்டும். அதற்குத் தேவை சிறிது நேரமும் நல்ல மனமும் மட்டுமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com