பாவை நோன்பினை கடைபிடித்த ஆண்டாள் ஒரு சமயம் கள்ளழகர் பெருமாளிடம் தனக்கும் அரங்கநாதருக்கும் திருமணம் செய்து வைத்தால் 100 தடா அக்கார வடிசிலும் 100 தடா வெண்ணெயும் நைவேத்தியம் செய்து படைப்பதாக வேண்டிக் கொள்கிறாள்.
‘நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ’
நாச்சியார் திருமொழி
ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்கமன்னாருடன் ஐக்கியமான பிறகு கள்ளழகருக்கு அக்கார வடிசிலும் வெண்ணெயும் சமர்ப்பிக்க முடியாமல் போனது. எம்பெருமானாராகிய ஸ்ரீராமானுஜர் பின்னாட்களில் இதுபற்றி அறிந்து ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்தார். ஆண்டாள் வேண்டிக்கொண்டபடியே ஆண்டாளுக்காக ஒரு கூடாரைவல்லித் திருநாளில் கள்ளழகருக்கு 100 தடா அக்காரவடிசிலும் 100 தடா வெண்ணெயும் சமர்ப்பித்து ஆண்டாளின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.
ஆண்டாளின் நேர்த்திக்கடனை முடித்த உடையவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று ஆண்டாளை வணங்கி நின்ற போது இராமானுஜரின் செயலால் மகிழ்ந்த ஆண்டாள் அசரீரியாக, “வாரும் என் அண்ணலே” என்று அழைத்தார்.
ஆண்டாளின் சார்பில் அவருடைய அண்ணா அக்கார வடிசில் சமர்ப்பிக்கும் சம்பிரதாயம் தற்போதும் திருமாலிருஞ்சோலை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்பூதூர் தலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.
இனி, அக்கார வடிசில் செய்யத் தேவையான பொருட்களைப் பார்ப்போம். பச்சரிசி – 200 கிராம், பயத்தம் பருப்பு 50 கிராம், பால் – 2 லிட்டர், நெய் 100 மில்லி லிட்டர், வெல்லம் 500 கிராம், ஏலக்காய் ஒரு சிட்டிகை, பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம்.
ஒரு அகலமான வெண்கலப் பாத்திரத்தில் நெய்யினை ஊற்றி அதில் பச்சரிசி மற்றும் பயத்தம் பருப்பினை வாசனை வரும்வரை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் பாலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவேண்டும். பாலில் பச்சரிசி நன்கு வெந்ததும் வெல்லத்தை தூளாக்கிப் போட்டு அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். வெல்லம், அரிசி, பாசிப்பருப்பு மூன்றும் ஒன்றாகக் கலந்து பச்சை வாசனை போனதும் நன்றாக மசித்து பின்னர் இறக்கி வைக்க வேண்டும். ஒரு கடாயில் மீதமுள்ள நெய்யை விட்டு அதில் முந்திரி, திராட்சையை இட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அக்கார வடிசிலில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலப்பொடி, பச்சைக்கற்பூரம் முதலானவற்றை இட்டு நன்கு கிளற வேண்டும். இப்போது அக்கார வடிசில் தயாராகிவிட்டது.