ஆன்மிகம்

‘அப்பா வந்துட்டேன்!’

எம்.ஏ.நிவேதா

விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் ரயில் வண்டி திருவண்ணாமலை ஸ்டேஷனில் வந்து நின்றது. வேகமாக அதிலிருந்து இறங்கினார் அந்த ஞானச் சிறுவன். அந்த ஞானத் தபோதனரை. ‘வா’வென்று அழைத்தது நெருப்பு மலை. அண்ணாமலையை தரிசித்தவாறே ஓட்டமும் நடையுமாக விரைந்தார். அண்ணாமலையார் ஆலயத்தின் ராஜகோபுரம் கண்ணில் பட்டது. உடல் பூரித்தது; உள்ளம் பரவசப்பட்டது. ஆலயத்துள் விரைந்தார். எப்போதும் கூட்டமாக இருக்கும் கோயில் அன்று தனிமையில் ஆழ்ந்திருந்தது.

வல்லாள கோபுரம், கிளி கோபுரம் கடந்து அண்ணாமலையார் சன்னிதி நோக்கி விரைந்தார். அதிசயமாய் அன்று கருவறையில் குருக்கள் இல்லை. ஆலயத்தில் பராமரிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால் குருக்கள் வேறெங்கோ சென்றிருந்தார். அந்தத் தனிமையின் இனிமையில் அம்மைக்கொரு பாகம் தந்த அப்பனை ஆசை தீரப் பருகினார் அந்தத் தபோதனர்.

‘அப்பா, வந்தாயா?’ என்று அப்பன் கேட்பது போல இருந்தது. ‘அப்பா வந்துட்டேன்’ என்று சொல்லி, ஆசை தீர அருணாசல லிங்கத்தைக் கட்டிக் கொண்டார். அதுவரை மேனியில் ஒருவித எரிச்சலும் அரிப்பும் அவருக்கு இருந்தது. அது அன்றோடு நீங்கியது. கண்களில் பெருகிய நீரால் அப்பனை அபிஷேகித்தார். தன்னுள் தன்னைக் கண்டவர், அன்று தன்னுள் அவனையும், அவனுள் தன்னையும் கண்டார். அவனருளாலே அவன் தாள் வணங்கி, தன்னையே அவனுக்களித்து வெளியே வந்தார்.

ஐயன் குளத்தை நோக்கி நடந்தார். அங்கே அன்பர் ஒருவர், ‘சாமி, முடியெடுக்கணுமா?’ என்று கேட்க, ‘அப்பனின் கட்டளையே இது!’ என எண்ணித் தலையசைத்தார் அவர். நாவிதரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அன்னை பாராட்டிச் சீராட்டி, தலை வாரிப் பூச்சூட்டி, உச்சி மோர்ந்து வளர்த்த சிகை கழிந்தது. பிறப்பை வென்றவனுக்கு பூணூல் எதற்கு? தந்தையால் அதி ரகசியமாய் ஓதி அணிவிக்கப்பெற்ற பூணூலைக் கழற்றி குளத்து நீரில் எறிந்தார். முற்றும் துறந்தவனுக்கு மறுவேளை உணவு தேவையா என்ன? கையில் இருந்த தின்பண்ட மூட்டையையும், வேஷ்டியில் முடிந்து வைத்திருந்த மீதிப் பணத்தையும் குளத்தில் விட்டெறிந்தார். மானத்தை மறைக்க ஓராடை போதாதா? மேலே போர்த்தியிருந்த துண்டைக் குளத்தில் எறிந்தார். கட்டியிருந்த வேஷ்டியைக் கிழித்தார். சிறிய கௌபீணமாக்கி அதை உடுத்திக் கொண்டார். மீதித் துணியை அங்கேயே போட்டுவிட்டு குளக்கரையை விட்டு வெளியேறினார்.

எல்லாம் துறந்தவரை தானும் வாழ்த்தும் பொருட்டு வருணன் கண்களைத் திறந்தான். மாமழையாய்ப் பொழிந்தான். அண்ணலை நனைத்துத் தானும் நனைந்தான். உடலும், உள்ளமும் மாமழையால் நனைந்தவாறே அந்த ஞானத்தபோதனர், அண்ணாமலை ஆலயத்துள் இருக்கும் ஆயிரம் கால் மண்டபத்துள் சென்றார். தனித்த ஓரிடத்தில் அமர்ந்தார். தன்னுள் தான் ஆழ்ந்தார்.

வேங்கடராமன் என்னும் இயற்பெயர் கொண்ட பகவான் ரமண மகரிஷி, பால ரமணராய் அண்ணாமலையுள் கால் பதித்த தினம் இன்று. ஆம். இன்றைக்குச் சரியாக 126 ஆண்டுகளுக்கு முன்னால் (01.09.1896) இதே நாளில்தான் பகவான் ரமணர் அண்ணாமலை தலத்தில் கால் பதித்தார். அதன் பின் அவரது கால்கள் அண்ணாமலையை வீட்டு நீங்கவேயில்லை.

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

SCROLL FOR NEXT