ருத்ராட்ச மாலை, ஸ்படிக மாலை, துளசி மாலை என பல மாலைகள் குறித்துக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கருங்காலி மாலை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கருங்காலி மரம்: மதுரைக்கு அருகில் இருக்கும் பழைமையான வீடுகளில் தூணாக, உலக்கையாக, கதவாக இருந்த ஆற்றல் மிக்க கருங்காலி மரத்தில் இருந்து சுத்தி செய்யப்பட்டு, மந்திர உரு ஏற்றப்பட்ட கருங்காலி மாலை, கருங்காலி பிரேஸ்லெட் போன்றவை ஒருவரது ராசி மற்றும் நட்சத்திரத்துக்கு ஏற்ப பூஜை செய்யப்பட்டு தற்போது கிடைக்கிறது.
கருங்காலி ஒரு பழைமையான மர வகையைச் சார்ந்தது. பல ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மரத்தின் நடுப்பகுதி மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருமையாக இருக்கும். அப்படி கருமை படர்ந்த நடுப்பகுதியை வெட்டி நமது தேவைக்கேற்ப சுவாமி சிலைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யப்படுகிறது. குறிப்பாக, பழைய காலத்தில் உலக்கைகளை கருங்காலி மரத்தில்தான் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது இம்மரம் விலை உயர்ந்து காணப்படுவதால், உலக்கைகள் வேறு சில மரங்களினால் செய்யப்படுகிறது. அந்தக் காலத்தில் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் எல்லாம் கருங்காலி மரத்தில்தான் செய்யப்பட்டவை. குழந்தைகள் அவற்றைக் கடித்து விளையாடினால் கூட உடலுக்கு எந்தத் தீங்கு விளைவிக்காது.
தோஷங்கள் நீக்கும்: கருங்காலி மாலையை ஆண், பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலையை அணிந்தால் தோஷம் நீங்கி திருமணத் தடைகள் அகலும். நவக்கிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது. இவர் கொடுக்கும் அனைத்துப் பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நமக்குக் கிடைக்கும். கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. இதனால் இதன் நிழலில் அமர்ந்தால் கூட உடல் நோய் நீக்கும் தன்மை கொண்டது. இதனால் தேகம் வலுவடைந்து, ஆன்மா பலம் பெற்று ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத் தொழுவோம்.
கருங்காலி மாலை பயன்கள்: கருங்காலி மாலை அணியும்போது, அது உடல் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. ஜீரணக் கோளாறு நீங்கும் பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் சீராகும். ஆண்,பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப் பேறுக்கு வழி வகுக்கும். உடல் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பு உண்டாகும். மேலும், இது மாங்கல்ய பலத்தைக் கூட்டும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். உடல் உறுதியடையச் செய்யும். கோபங்கள் சிறிது சிறிதாகக் குறையும்.
பாஸிட்டிவ் எனர்ஜி தரும் கருங்காலி: கருங்காலி மாலையை அணிவதால், உடலில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் ஒருவரது எண்ணங்கள் நேர்மறையானதாக இருக்கும்.
கருங்காலி யாருக்கு சிறந்தது: கருங்காலி மரம் மேஷம் மற்றும் விருச்சிக ராசி, அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமைகளில் பிறந்தவர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல மருந்தாகவும் செயல்படுகிறது.