Vishwarupa Darshan 
ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம் என்றால் என்ன தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

விஸ்வரூப தரிசனம் என்றால் அதிகாலையில் இறைவனைக் காணும் முதல் தரிசனம் என்று பொருள். அதாவது, இறைவனை திருமஞ்சனத்திற்கு முன்பே அவரது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பதே விஸ்வரூப தரிசனம். திருமஞ்சனம் என்னும் சொல் இறை உருவங்களுக்கு நடைபெறும் நீராட்டுதலை குறிக்கும். மற்ற தரிசனத்திற்கும் விஸ்வரூப தரிசனத்திற்கும் என்ன வித்தியாசம் என்கிறீர்களா? நாம் இறைவனைக் காண்பது தரிசனம். ஆனால், இறைவன் நம்மைப் பார்ப்பது விஸ்வரூப தரிசனம். காலையில் முதல் முறையாக தனக்கு முன் யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார். அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது படும். அதுதான் விஸ்வரூப தரிசனத்தின் சிறப்பு.

ஒரு கோயிலில் விஸ்வரூப தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்தபோது வந்திருந்தவர்களில் கண் பார்வையற்றவர்களும் இருந்தார்கள். அந்தக் காலை நேரத்தில் அவர்கள் விசுவரூப தரிசனத்திற்கு வந்திருந்தது வியக்க வைத்தது. இந்த விஸ்வரூப தரிசனத்தின் சிறப்பை அறிந்துதான் அந்தக் கண் பார்வை அற்றவர்களும் வந்திருக்கிறார்கள். இறைவனை அவர்களால் பார்க்க முடியாவிட்டாலும் இறைவனின் அருட்பார்வை அவர்களுக்குக் கிடைக்கும் என்பது உறுதி என்பது அவர்களின் நம்பிக்கை.

திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரின் விஸ்வரூப தரிசனம் எப்படி இருக்கும் தெரியுமா? குழந்தையாக இருந்த முருகன் தேவர்களுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்த செய்தி கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. போர்க்களத்தில் சூரபத்மனுக்கும் விஸ்வரூப தரிசனம் தந்த பின்னரே அவனை ஆட்கொண்டு அருள் புரிந்தார். இந்த தரிசனத்தின்போது முருகனின் சேனைத்தலைவர் வீரபாகு முருகனின் உடலில் பதினான்கு உலகங்களையும் தரிசிக்கும் பேறு பெற்றார். இதன் அடிப்படையில் தினமும் காலை 5 மணிக்கு திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் விஸ்வரூப தரிசனம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

இந்த தரிசனத்தின்போது வள்ளியம்மன் கோயிலில் செந்திலாதிபன் சுப்ரபாதம் பாடப்படும். அதன் பின் கொடிமரத்தடியில் பள்ளியறையில் வைத்த பாலும் கற்கண்டும் பக்தர்களுக்கு வழங்கப்படும். விஸ்வரூப தரிசனம் கண்டவர்களுக்கு வாழ்வில் எல்லாத் தடைகளும் நீங்கி சுபயோகம் உண்டாகும். அதிகாலை விஸ்வரூப தரிசனத்தின்போது இக்கோயிலில் பன்னீர் இலை விபூதி பிரசாதம் கொடுப்பது வழக்கமாகும். அதற்காகவே விஸ்வரூப தரிசன நேரத்தில் அதிக அளவிலான பக்தர்கள் சுப்பிரமணியன் சன்னிதி முன்பாகக் காத்திருப்பார்கள். பன்னீர் இலை விபூதி நோய் தீர்க்கும் அரும்பருந்தாகப் பயன்படுவதால் அதற்காகவே நிறைய பக்தர்கள் காத்திருப்பார்கள்.

பழநியில் அதிகாலை விஸ்வரூப தரிசனத்தின்போது முருகன் மீது வியர்வை துளிகள் இருப்பதைக் காண முடியும். காலையில் மூலவர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் முழுவதும் களையப்பட்டு சிறு சிறு வில்லையாக பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகிறார்கள். சந்தனம் களையப்பட்ட பிறகு நடத்தப்படும் தரிசனத்திற்கு விஸ்வரூப தரிசனம் என்று பெயர்.

ஸ்ரீரங்கம் தலத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெருமாளை விசுவரூப தரிசனம் செய்தால் உங்களுக்கு பணம் வந்து குவியும். இந்த நேரத்தில் ஸ்ரீரங்கநாதரை மனமுருகி வழிபட்டால் நினைத்தது அனைத்தும் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு சுக்கிர தோஷம் விலகி, உடனே திருமணம் கைகூடும். சிறப்புகள் பல பெற்ற எந்தக் கோயிலிலும் காலையில் விஸ்வரூப தரிசனத்தை தரிசித்தால் எண்ணற்ற பலன்களைப் பெற்று வாழ்வில் சிறக்கலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை மூன்று மணிக்குத் திறக்கப்பட்டு, 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு இரண்டு அர்ச்சகர்கள், இரண்டு ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என ஆறு பேர் சன்னிதி முன்னால் உள்ள தங்கவாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னிதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னிதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்த நேரத்தில் ‘கௌசல்யா சுப்ரஜா ராம…’ என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.

சன்னிதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க வேங்கடாஜலபதி அருகே போக சீனிவாச மூர்த்தி எனும் மூர்த்தத்தைக் கொண்டுவந்து அமர்த்துவார்கள். அவரை முதல் நாள் இரவு ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்தத் தொட்டிலில் இருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமர வைப்பார்கள். சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னிதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணையும் படைத்து நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும். இதைத்தான் விஸ்வரூப தரிசனம் என்றும் சொல்வார்கள்.

நாம் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பெரிய கோயில்களில் காலையில் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டு களித்து இறைவனின் நேர்பார்வையைப் பெறுவோம்.

பந்தா எதுக்குடா… கொஞ்சம் அடக்குடா.. நேத்துவர நாயர் கடை பன்னு தானே! 

இந்த பேய் படத்தைப் பார்க்க உங்களுக்கு தைரியம் இருக்கா? 

மக்கானாவில் அடங்கியுள்ள மகத்தான மருத்துவப் பலன்கள்!

இந்த சிற்றுண்டியில் இவ்வளவு நன்மைகளா?

நட்சத்திரங்கள்: பிரபஞ்சத்தின் பொக்கிஷம்! 

SCROLL FOR NEXT