Kedarnath Temple
Kedarnath Temple naveen0301
ஆன்மிகம்

வருடத்தில் பாதி நாட்கள் மூடப்பட்டு பாதி நாட்கள் திறக்கப்படும் ஆலயம் எங்கு உள்ளது தெரியுமா?

லதானந்த்

ருத்ரபிரயாக் மாவட்டம், ருத்ரபிரயாகையில் இருந்து 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கேதார்நாத் புனிதத் தலம். 3,583 மீட்டர்கள் கடல் மட்டத்தில் இருந்து உயரமுள்ள பகுதி இது. மந்தாகினி ஆறு உற்பத்தி ஆகும் சோராபரி பனிப் பகுதியின் அருகே உள்ளது. கைக்கெட்டும் தொலைவில் கார்வால் இமயத்தின் பனி மலைகள் சூழ்ந்திருக்கின்றன. ரிஷிகேஷில் இருந்து 223 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கட்டடங்கள் மந்தாகினி ஆற்றின் கரை ஓரமாகவே கட்டப்பட்டிருக்கின்றன. கோயிலுக்குப் பின்புறம் 6,940 மீட்டர் கடல் மட்டத்துக்கு மேல் கேதார்நாத் சிகரம் தென்படுகிறது.

கௌரி குண்ட் என்ற இடம் வரை மட்டுமே வாகனங்கள் செல்ல முடியும். அங்கிருந்து 14 கி.மீ. தொலைவில் கேதார்நாத் இருகிறது. மேல்நோக்கிச் சரிவான பாதை பள்ளத்தாக்கை ஒட்டிச் செல்கிறது. ஒரு புறம் மலைகள், மறுபுறம் அதலபாதாளம். அங்கே பொங்கிப் பிரவகித்து ஓடும் மந்தாகினி ஆறு... என அச்சமூட்டும் பயணம் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். கௌரிகுண்டில் இருந்து குதிரை மூலமும், நடைப் பயணமாகவும், டோலி மூலமும், ஹெலிகாப்டர் மூலமும் அவரவர்கள் வசதிக்குத் தகுந்தபடி பக்தர்கள் கேதார்நாத்துக்கு பயணிக்கின்றனர்.

Kedarnath Temple

சிவபெருமான் பார்வதியை மணந்த இடமான திரிஜுகி நாராயண், உஹிமத், ஜுவாலாமுகி, காளிமத் போன்ற பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்கள் இந்த வழி நெடுகிலும் இருக்கின்றன.

சத்ய யுகத்தில் அரசாண்ட மன்னர் கேதாரை சிறப்பிக்கும் விதமாக இந்தப் பகுதி  ‘கேதார்நாத்’ என அழைக்கப்படுகிறது. இன்னும் சிலர், புராண காலத்தில் இந்தப் பகுதி ‘கேதார் கண்டம்’ என அழைக்கப்பட்டதாகவும், இங்கு எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் ‘கேதார்நாத்’  என அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

Kedarnath Temple

பாண்டவர்கள் குருக்ஷேத்ரப் போரில் தங்களது பல உறவினர்களையும் கொல்ல நேரிட்டது அல்லவா? அந்தப் பாவங்களைப் போக்கிக்கொள்ள சிவனை நோக்கி வழிபட்ட இடம் இது என மஹாபாரதம் சொல்கிறது. இந்த ஆலயம் பாண்டவர்களால் கட்டப்பட்டது என்றும், ஆதி சங்கராச்சாரியாரால் புனரமைக்கப்பட்டது எனவும் தல புராணம் சொல்கிறது. இங்கே இருக்கும் சிவலிங்கம் ஹிந்துக்களின் புனித ஜோதிர்லிங்கங்கள் பன்னிரண்டில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் அக்ஷய திருதியை அன்று (ஏப்ரல் கடைசி அல்லது மே மாத துவக்கத்தில்) கேதார்நாத் ஆலயம் பக்தர்களின் தரிசனத்துக்காகத் திறக்கப்படுகிறது. கிருத்திகை பௌர்ணமியின்போது (அக்டோபர் மாதக் கடைசி அல்லது நவம்பர் மாத துவக்கத்தில்) மூடப்படுகிறது. பனிப் பொழிவு மற்றும் கடுங்குளிரே மூடப்படுவதற்குக் காரணம்.

குளிர் காலம் மிகவும் கடுமையானதாகவும் பனிப் பொழிவு மிக்கதாகவும் இருப்பதால் கேதார்நாத்தில் யாரும் அப்போது அங்கு வசிப்பதில்லை. அந்தச் சமயத்தில் கேதார்நாத் ஆலயத்தின் உத்ஸவமூர்த்தி, குப்தகாசி என்னும் இடத்துக்கு அருகே இருக்கும் உஹிமத் என்ற பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். மக்களும் அண்டை கிராமங்களுக்கு இடம் பெயர்ந்துவிடுகின்றனர். கேதார்நாத்தின் கிழக்குப் பகுதியில் பைரவர் ஆலயம் ஒன்று இருக்கிறது. குளிர் காலத்தில் கேதார்நாத் கிராமத்தை பைரவர் பாதுகாப்பதாக ஐதீகம்.

Kedarnath Temple

கர்ப்பகிருஹமும், மண்டபமும் கொண்ட கேதார்நாத் ஆலயம் பனி மலைகளும், பனியாறுகளும் சூழ்ந்த நிலப்பரப்பில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. கற்பாறையில் செதுக்கப்பட்ட நந்தியும் இருக்கிறது. கோயிலுக்குள் இருக்கும் மண்டபத்தில் பஞ்ச பாண்டவர்களின் சிலைகள்,  திரௌபதி, கிருஷ்ணர், நந்தி  உருவங்கள் இருக்கின்றன. கர்ப்பக்கிருஹத்தில் முக்கோண வடிவில் சிரசு வடிவில் உள்ள சிலையே மூலவராக வணங்கப்படுகிறது. கோயிலுக்கு அருகிலேயே ஆதிசங்கரரின் மஹாசமாதி இருக்கிறது.

ஜூன் 2013ல் ஏற்பட்ட பெரும் வெள்ளச் சேதத்தில் கேதார்நாத் கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. கேதார்நாத் கிராமமே பெரும் சேதத்துக்கு ஆளானாலும் ஆலயம் மட்டும் அதிக சேதம் அடையாமல் இருக்கிறது.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT