நமது இல்லங்களில் உரிமையோடு வாசம் செய்யும் உயிரினங்களில் பல்லிக்கு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. வீட்டுச்சுவர்களில் தனது நான்கு கால்களில் பிடிப்பு இல்லாமல் ஓடி அடுத்த உயிரைப் பிடித்து உண்ணும் சார்ந்துண்ணி இது.
கிராமப்புறங்களில், ‘கவுளி அடிக்கிறது நல்ல சகுனம்’ என்பார்கள் பெரியவர்கள். ஒரு செயலைச் செய்யும்போது வடக்கில் மற்றும் கிழக்கில் பல்லி கத்தினால் நல்ல சகுனம் என்று தங்கள் விருப்பத்திற்கு தாங்களே சாதகமாகப் பலன் சொல்லிக்கொள்வார்கள். எந்த நிகழ்வையும் பாசிடிவ் ஆக எடுத்துக்கொள்ளும் மனநிலை நமக்கு வர வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை மகிழ்ச்சியாக நகரும்.
பல்லி விழும் பலன்கள்:
நம்மால் தலைகீழாக பிடிப்பு இல்லாமல் நிற்க முடியாது. ஆனால், சுவற்றின் மேல் பல்லி சிறு பூச்சிகளைப் பிடிக்கக் காத்திருக்கும்போதும் உயிர் பிழைக்க ஓடும்போது சில சமயங்களில் தனது பிடிப்பை விட்டு கீழே விழுந்துவிடும். அதே நேரம், கீழே நாம் நின்றால் நமது உடல் பாகங்கள் ஒன்றில் விழுந்துவிட்டால் அதற்கு பஞ்சாங்கத்தில் உடனே பலன் காணத் துடிப்போம்.
தலையில் விழுந்தால் கலகம் உண்டாகும், முகத்தில் விழுந்தால் உறவினர்கள் வீடு தேடி வருவார்கள், நெற்றியில் விழுந்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும், புருவ மத்தியில் விழுந்தால் பிள்ளைகளால் அவப்பெயர் உண்டாகும், அரசாங்கத்திலிருந்து நல்ல செய்தி வரும், வலது கண் - நல்ல செய்திகள் வந்து சேரும், இடது கண் - பிறர் வயப்படுதல், மூக்கு - நோய் உண்டாகும். வலது காது - தீர்க்கமான ஆயுள் உண்டு. இடது காது - வியாபாரத்தில் அபிவிருத்தி, மார்பு - பொருள் வரவு கூடும். கணுக்கால் - யாத்திரை செல்லும் யோகம். உடலில் விழுந்து ஓடினால் தீர்க்கமான ஆயுள் உண்டாகும். நாபியில் விழுந்தால் - நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும் போன்ற பலன்களை அறியலாம்.
பல்லி நமது வாயில் விழும்போது, அதன் விரல்கள் உள்ளே போய் இருக்குமோ என்ற மனச்சஞ்சலத்துடன் அடிக்கடி வாயைக் கழுவும் நிலை உண்டாகும்.
நமக்கு யோகங்கள், அவயோகங்களைச் சொல்லும் பல்லி உணவில் விழுந்துவிட்டால் உயிருக்கே ஆபத்து. கடவுளாக மதிக்கப்படும் அது, நம்முடிய ஜீவனையே போக்கிவிடும் விஷத்தன்மை அதில் உண்டு என அறிந்து மிகவும் பயந்து அலறுகிறோம்.
சகுனத்தைக் கூறும் பல்லியை சீனர்கள் லிசர்ட் என்று சுவர்களில் வண்ணமயமாகப் பதித்து அதைக் கண்டால் அதிர்ஷ்ட வாழ்க்கை மலரும் என்று நம்புகின்றனர். பூனையை கடவுளாக மதிக்கும் ஜப்பானியர்கள், அதற்குச் சிலை வைத்து வழிபடுகின்றனர். அதன் உடல் பாகங்களைச் சுற்றி பல்லி தைரியமாக ஓடிக்கொண்டிருக்கும்.
பல்லி உயிரோடிருக்கும் பூனை மேல் தவழ முடியுமா? பூனை பல்லியைப் பிடித்து உண்கிறபோது, அதன் விஷத்தன்மையை மாற்றி விடும் சக்தி பூனையின் இரத்தத்தில் இருக்கிறது. அதேபோல், பல்லிக்கு வெளியிலிருந்து வரும் தீயசக்திகளைக் கண்டறிந்து விலக்கும் ஆற்றல் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் அதன் மண்டபத்தின் மேற்பகுதியில் உள்ள தங்க நிறப் பல்லியை வணங்கி தொட்டு தரிசனம் செய்து வருவது வழக்கம். பல்லியை திருமகளின் அம்சம் என்று வர்ணிக்கின்ற வைணவர்களின் புராணங்கள், ‘சகுன ஜீவன்’ என்று இதை அழைக்கின்றனர்.
ஆலயங்களில் அர்ச்சகரிடம் ஒருவர் பிரார்த்தனை அர்ச்சனை கொடுக்கும்போது, ‘எனது செயல் வெற்றி அடைய வேண்டு’ம் என்று வேண்டினால், அப்போது பல்லி சத்தமிட்டால் அது வெற்றி அடையும் எனப் பொருள் கொள்வார்கள்.
சித்திரை மாதம் அமாவாசைக்கும் பிறகு நான்காம் நாள் வருவது அட்சய திருதியை என்னும் சுபநாள். இன்று பல்வகை தானங்களைச் செய்தால் புண்ணியம் சேரும் என்பது புராணச் செய்தி. இந்த நாளில் பல்லியைப் பார்த்துவிட்டால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று மக்கள் மனதில் ஒரு நம்பிக்கையும் உண்டாக்கப்பட்டது. அதற்கு முதல் நாளே வாஸ்து பகவான், ‘பல்லிகளே, நீங்கள் எல்லோரும் வேறு எங்காவது போய் ஒளிந்துகொள்ளுங்கள். மக்கள் கண்களில் படாதீர்கள்’ என்று உத்தரவு இடுவார் என்பது நம்பிக்கைக் கதை.
ஐரோப்பிய காடுகளில் பல்லி இனத்தைச் சேர்ந்த கருமையான விலங்கு கொமோடோ. இது ஊர்வதைப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதன் அருகே நிற்கும் எப்படிப்பட்ட விலங்கையும் ஒரே வாய்க்குள் அடைத்து விழுங்கும் பலம் உடையது. ‘தொலைவில் இருக்கும் பச்சையே கண்ணுக்கு அழகு’ என்பதுபோல பல்லியின் குரல், அது விழும் இடம், அங்க பாகங்களைக் கண்டு பலன் கண்டு மகிழ வேண்டும். ஆனால், அதுஅருகில் வந்து விடாமல் பார்த்து வணங்க வேண்டும்.