Prathyangira Devi
Prathyangira Devi  
ஆன்மிகம்

பயத்தை அகற்றிக் காத்தருளும் அன்னை பிரத்யங்கிரா தேவி!

ஆர்.வி.பதி

ன்னை பிரத்யங்கிரா தேவி ஸ்ரீ சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர். சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் அன்னை பிரத்யங்கிரா தேவியும் சூலினியும். இருவரும் சரபேஸ்வரருக்கு இரண்டு இறக்கைகளாக விளங்குகின்றனர். விஷ்ணு, காளி மற்றும் துர்கை ஆகியோரின் வடிவமாகக் கருதப்படுபவர்.

சிம்ம முகமும் பெண் உடலும் கொண்டு காட்சி தருபவள் பிரத்யங்கிரா தேவி. நான்கு சிங்கங்கள் பூட்டிய இரதத்தில் சிம்ம முகத்தோடு எட்டு திருக்கரங்களோடு மிக உக்கிரமாகக் காட்சி தருபவள். பிரத்யங்கிரா தேவியின் உக்கிரமான தோற்றத்தின் காரணமாக, ‘உக்ரா’ என்றும் அழைக்கப்படுகிறாள். பிரத்யங்கிரா தேவி பார்ப்பதற்கு உக்கிரமாகக் காட்சி அளித்தாலும் தனது பக்தர்கள் மீது அன்பைப் பொழிந்து அவர்களைக் காப்பவள். குழந்தை உள்ளம் படைத்தவள். காலகண்டி, பைரவ மஹிஷி எனவும் பிரத்யங்கிரா தேவி அழைக்கப்படுகிறாள்.

பிரத்யங்கிரா காயத்ரி மந்திரம்:

‘ஓம் அபராஜிதாயை வித்மஹே

சத்ரு நிஷூதின்யை தீமஹி

தன்னோ ப்ரத்யங்கிர பிரச்சோதயாத்’

‘நான் வெல்ல முடியாத அன்னையை தியானிக்கிறேன்.  எதிரிகளை அழிப்பவரைத் தியானிக்கிறேன். அன்னை பிரத்யங்கிரா தேவி என் புத்தியை ஒளிரச் செய்யட்டும்’ என்பதே இதன் பொருளாகும்.

ஒரு சமயம் பஞ்சபாண்டவர்கள் காட்டுப்பகுதியில் பிரத்யங்கிரா தேவி சிலையைக் கண்டனர். சிம்ம முகம் கொண்ட பிரத்யங்கிரா தேவிக்கு பூஜை செய்ய பூக்கள் கிடைக்காமல் அவர்கள் தவிக்க, அப்போது ஆலமரத்தின் இலைகளைப் பூக்களாகக் கருதித் தூவி பிரத்யங்கிரா தேவியை வழிபட்டனர். இதன்பின்னர் அவர்களுக்கு பல வெற்றிகள் கிடைத்தன. பாண்டவர்கள் தூய அன்புடன் பூஜித்த ஆலமர இலைகளை பூக்களாகக் கருதி பிரத்யங்கிரா தேவி ஏற்றுக்கொண்டதாக ஐதீகம்.

பயத்தைப் போக்கி அருளுபவள் பிரத்யங்கிரா தேவி. எப்போது நம் மனதில் பயம் தோன்றினாலும் அன்னையின் திருநாமத்தை உச்சரித்தால் உடனே பயம் விலகிவிடும். நம் எதிரிகளை பலமிழக்கச் செய்யும் ஆற்றல்மிக்க அன்னை பிரத்யங்கிரா தேவி. அன்னை பிரத்யங்கிரா தேவியை வணங்குபவர்கள் பதினாறு செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்வர் என்பது ஐதீகம்.

சென்னை, சோழிங்கநல்லூரில் தனி கோயிலில் பிரத்யங்கிரா தேவி அருள்பாலிக்கிறார். அதுபோலவே, கும்பகோணத்தில் அய்யாவாடி என்ற கிராமத்தில் பிரத்யங்கிரா தேவி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். சீர்காழியை அடுத்து அமைந்துள்ள வரிசைபத்து என்ற கிராமத்திலும் ஸ்ரீமகா பிரத்யங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ளது. பிரத்யங்கிரா தேவி எழுந்தருளியுள்ள ஆலயங்களில் அமாவாசை அன்று மிளகாய் வற்றலைக் கொண்டு யாகம் நடைபெறுகிறது.

தீய சக்திகளிடமிருந்தும், துஷ்டர்களிடமிருந்தும் தனது பக்தர்களைக் காத்தருளுபவள் பிரத்யங்கிரா தேவி. அன்னை பிரத்யங்கிரா தேவியை வழிபட்டு நல்வாழ்வைப் பெறுவோம்.

இந்திய மக்களிடம் கோரிக்கை விடுத்த மாலத்தீவு அமைச்சர்!

6G தொழில்நுட்பம் வந்தால், ஸ்மார்ட் போன்களே இருக்காது… எல்லாம் சிப் தான்! 

டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோனை சமநிலையில் வைக்க உதவும் மூலிகைகள்!

இரண்டு வங்கிக் கணக்குகள் இருக்கா? அப்போ இது உங்களுக்குத் தான்!

சாதாரண நீர் தெரியும்; கனநீர் என்றால் என்னவென்று தெரியுமா?

SCROLL FOR NEXT