Sri Mahavishnu 
ஆன்மிகம்

புரட்டாசி மாத இந்திர ஏகாதசியும் அவற்றின் பலன்களும்!

ம.வசந்தி

பௌர்ணமிக்கு பிறகு வரும் 11ம் நாளும், அமாவாசைக்கு பிறகு வரும் 11ம் நாளும் ஏகாதசி என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு சிறப்பு உண்டு அதிலும் இந்த புரட்டாசி மாதத்தில் வரும் ஏகாதசி மிகவும் சிறப்பு மிக்கது. அதனால் அன்றைய தினம் கண்டிப்பாக விரதம் இருப்பது நன்று. பொதுவாக, ஒரு வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசிகள் வருவது வழக்கம். அனைத்து ஏகாதசிகளும் வெவ்வேறு பெயர்களால் அறியப்பட்டு அவற்றின் பெயர்களுக்கு ஏற்ப பலன்களையும் தந்துக் கொண்டிருக்கின்றன.

தற்போது, ​​புரட்டாசி மாதம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தில் வரும் ஏகாதசி இந்திர ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில், விஷ்ணு பகவானை வணங்கினால் இந்திரனுக்கு இணையாக அனைத்து நலன்களும் உங்களுக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இவ்வருட இந்திர ஏகாதசி திதி இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1:20 மணிக்கு தொடங்கி, நாளை சனிக்கிழமை மதியம் 2:49 மணிக்கு முடிவடைகிறது. சாஸ்திரங்களின்படி, உதய திதியில் எந்தத் தேதி வருகிறதோ, அதே நாளில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் செப்டம்பர் 28ம் தேதி இந்திர ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்திர ஏகாதசி நாளில் அதிகாலை நீராடி, சுத்தமான ஆடை அணிந்து, விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். உங்கள் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கும் சேர்த்து அஞ்சலி செலுத்தலாம். மகாவிஷ்ணுவின் சிலை அல்லது படத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து நெய் தீபம் ஏற்றவும். அந்த தீபத்தை நான்கு முக தீபமாக ஏற்றுவது இன்னும் சிறப்பு. இந்திர ஏகாதசி நாளில் நான்கு முக தீபம் ஏற்றி விளக்கேற்றினால், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. விஷ்ணு பகவான் மஞ்சள் நிறத்தை மிகவும் விரும்புபவர் என்பதால், அவருக்கு மஞ்சள் நிற பூக்கள் மற்றும் இனிப்புகளை வைத்து வழிபட வேண்டும்.

நான்கு முக தீபம் நான்கு திசைகளைக் குறிக்கிறது. அது மட்டுமல்லாமல், நான்கு திசையிலும் ஒளியைப் பரவச் செய்கிறது. நான்கு திசைகளின் மகிழ்ச்சி மற்றும் செழுமையின் அடையாளமாக இது கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த விளக்கை ஏற்றி வைப்பது வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும் என்பது நம்பிக்கை.

புரட்டாசி மாத இந்திர ஏகாதசி அன்று நெய், பால், தயிர் மற்றும் உணவு தானம் செய்வது வழக்கம். இந்த அன்னதானம்தான் தானங்களில் மிகப் பெரியது. இந்நாளில், ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது, இதன் காரணமாக முன்னோர்கள் திருப்தி அடைகிறார்கள். அன்னதானம் செய்வதால் மகிழ்ச்சியும் செழிப்பும் பெருகும், நிதி ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இந்திர ஏகாதசி இந்த வருடம் புரட்டாசி சனிக்கிழமையில் வருவது இன்னும் கூடுதல் சிறப்பு ஆகும். இந்த நாளில் விரதம் இருந்து பெருமாளின் கடைக்கண் பார்வைக்கு பாத்திரமாவோம்!

பலாக்கொட்டை உடலுக்குத் தரும் நன்மைகளும் தீமைகளும்!

உலகின் மிக சிறிய 'புடு' மான் ஈன்ற குட்டிமான்!

‘ஆல் இன் ஒன்’ பெற்றோராகத் திகழ்வது எப்படி தெரியுமா?

திருப்பதி லட்டு வாங்க இனி திருப்பதிக்கு செல்ல வேண்டாம்! 

Soap Vs Body Wash: உடல் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

SCROLL FOR NEXT