“சனாதன தர்மம் என்பது தொன்மையானது! நிரந்தரமானது! அதனை யாராலும் அழிக்க முடியாது” என்று உறுதிபடக் கூறினார் அகோபில மடம் அழகிய சிங்கர் ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மஹா தேசிகன் ஸ்வாமிகள்.
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில், ‘சாஸ்த்ர சத் சங்கம்’ ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீ ராம வைபவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ‘ராம பக்தி பிரச்சார மணி’ விருதுகளை அவர் வழங்கினார். தொடர்ந்து அவர் அருளாசி வழங்கி உரையாற்றியபோதுதான் சனாதன தர்மம் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்.
அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக அன்றைய தினம் மாலை இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லாண்டு காலமாக ராமாயணத்தையும், ராம பக்தியையும் மக்கள் மத்தியில் பரப்பி வரும் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆன்மிக சொற்பொழிவாளர்கள், உபன்யாசகர்த்தாக்கள், வில்லுப்பாட்டுக் கலைஞர் உள்ளிட்ட எட்டு பேருக்கு, ‘ராம பக்தி பிரச்சார மணி’ விருதுகள் வழங்கப்பட்டன. சுந்தர் குமார், தாமல் ராமகிருஷ்ணன், தாமல் பெருந்தேவி, உடையாளூர் கல்யாணராமன் பாகவதர், சுதா சேஷையன், நாகை முகுந்தன், பாரதி திருமகன், துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோருக்கு அகோபில மடம் அழகியசிங்கர் சுவாமிகள் இந்த விருதுகளை வழங்கினார்.
விருது பெற்ற அனைவரும் தங்களது ஏற்புரையில், ‘அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நாடே கொண்டாடும் இந்நாளில் விருது பெறுவதை பெரும் பாக்கியமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டதோடு, தாங்கள் தொடர்ந்து ராம பக்தி பிரச்சாரப் பணியில் ஈடுபடுவதற்கு இந்த விருது மிகுந்த ஊக்கமளிப்பதாகவும்’ குறிப்பிட்டார்கள்.
வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள் பாரதி திருமகன் விருதினைப் பெற்றுக்கொண்டு ஆற்றிய ஏற்புரையில், “எங்கள் தந்தையோடு உலகமெங்கும் சென்று வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை வழங்கியபோதிலும், தமிழ்நாட்டின் ஏராளமான குக்கிராமங்களுக்கும் சென்று நாங்கள் ராமன் கதையை சொல்லி இருக்கிறோம் என்பதில் பெருமைப்படுகிறேன். எங்கள் தந்தையை வில்லுப்பாட்டில் ராமாயணம் சொல்லும்படி உத்தரவு போட்டவர் காஞ்சி மகாபெரியவர் என்று நினைக்கும்போது என் நெஞ்சம் நெகிழ்கிறது. மகாபெரியவர் தனது திருக்கரங்களால் தொட்டு ஆசிர்வதித்து அளித்த வில்லை அடித்துத்தான் எங்கள் தந்தையார் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினார். அவருக்குப் பிறகு, நானும் அதே வில்லில்தான் வில்லுப்பாட்டு பாடுகிறேன்” என்று குறிப்பிட்டார்.
‘ராம பக்தி பிரச்சார மணி’ விருது பெற்ற தாமல் ராமகிருஷ்ணன், தாமல் பெருந்தேவி இருவரும் உடன்பிறப்புக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் தொல்லியல் வல்லுநர்களான கே.கே.முகம்மது மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த இரா.நாகசாமி இருவருக்கும், ‘ராம கீர்த்தி பிரச்சார மணி’ என்ற விருது வழங்கப்பட்டது. இவர்களது நுட்பமான தொல்லியல் ஆராய்ச்சி ஆவணங்கள் அயோத்தி வழக்கில் முக்கியப் பங்கு வகித்தன. மறைந்த நாகசாமியின் சார்பில் அவரது மகள் கலா இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.