எவ்வளவு படித்திருந்தாலும் ஞானிகளின் முன்பு, அவர்களின் அறிவு கட்டுப்படும் என்பதற்கு பாபா ஒரு மருத்துவருக்குத் தந்த அனுபவத்தின் மூலம் அறியலாம்.
நாசிக் ஜில்லாவில் ஒரு மருத்துவர் சகோதரியின் மகன் குணமாக்க இயலாத எலும்புருக்கி நோய் கட்டியால் துன்பப்பட்டான். அந்த மருத்துவருடன் மற்ற மருத்துவ நிபுணர்களும் இணைந்து அறுவை சிகிச்சை முதல் அனைத்து விதமான சிகிச்சைகளைச் செய்தும் குணமாகவே இல்லை. அச்சிறுவன் மிகுந்த துன்பத்திற்கு ஆளானான்.
நண்பர்களும் உறவினர்களும் அவன் பெற்றோரிடம், ‘கடவுளை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்றனர். குறிப்பாக, குணமாக்க இயலாத வியாதிகளை எல்லாம் தமது கடைக்கண் பார்வையினாலேயே குணமாக்கிவிடும் சீரடி சாயி பாபாவிடம் செல்லும்படி அறிவுறுத்தினர்.
அதையேற்ற பெற்றோர், சீரடிக்கு வந்து சிறுவனை பாபாவின் முன்பு அமர்த்தி வணங்கி, தங்கள் சிறுவனைக் காக்கும்படி மன்றாடி பிரார்த்தித்தனர். பாபா அவர்களுக்கு ஆறுதல் கூறி, "கவலையின்றி இருங்கள் என்று சொல்லி, உதியை நோய் கட்டியின் மீது தடவுங்கள். ஒரு வாரத்திற்குள் அவன் குணமடைவான். கடவுளை நம்புங்கள். அவனுடைய தொல்லைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்" என்றார்.
சிறுவனின் உடலில் இருந்த கட்டி மீது பாபா தனது கையை வைத்துத் தடவி, அவன் மீது தனது கருணை பார்வையை செலுத்தினார். உதியை தடவிய பின்னர் அவன் குணமடைய துவங்கி சில நாட்களுக்குப் பின்னர் முற்றிலும் குணமாகி, பாபாவுக்கு நன்றி செலுத்திவிட்டு சீரடியை விட்டு சென்றனர்.
இதை அறிந்த அவனுக்கு சிகிச்சை அளித்த அவன் மாமாவாகிய மருத்துவர் ஆச்சரியமடைந்தார். படித்த தன்னால் தீர்க்க முடியாத பிணியைத் தீர்த்த பாபாவைக் காண பம்பாய்க்கு செல்லும் வழியில் சீரடிக்குப் போக விரும்பினார். ஆனால், அவரிடம் சிலர் பாபாவுக்கு எதிராகப் பேசி அவரது எண்ணத்தைக் கலைத்தனர். எனவே, சீரடிக்குச் செல்வதைக் கைவிட்டு பம்பாய்க்கு நேரடியாக சென்று விட்டார்.
ஆனால், அவர் பம்பாயில் இருந்தபோது தொடர்ந்து மூன்று இரவுகளிலும், ‘இன்னும் என்னை நம்ப மறுக்கிறாயா?’ என்ற ஒரு குரல் எழுந்தது. இதனால் அந்த மருத்துவர் தனது மனதை மாற்றிக் கொண்டு சீரடிக்கு செல்ல தீர்மானித்தார். இடையில் பம்பாயில் குணப்படுத்த நாளாகும் ஒட்டு ஜுரம் வந்த ஒரு நோயாளியை அவர் கவனிக்க வேண்டியிருந்தால் அவர் சீரடிக்குச் செல்வதைத் தள்ளி வைக்கலாம் என நினைத்தார்.
எனினும், தமது மனதில் ஒரு சிறிய முடிவை எடுத்தார். ‘பாபாவின் அருளால் இந்த நோயாளி இன்று குணமடைந்தால் நாளை நான சீரடிக்கு நிச்சயம் செய்வேன்’ என்று கூறிக்கொண்டார். என்ன ஆச்சரியம்? அவர் அந்த முடிவை எடுத்த நிமிடம் முதல் அந்த நோயாளியின் ஜுரம் குறையத் துவங்கி, அந்த நோயாளியின் உடல் சாதாரண நிலைக்கு வந்துவிட்டது.
மருத்துவரான தன்னால் முடியாததை எங்கோ இருந்து நிகழ்த்தும் பாபாவின் சக்தியை உணர்ந்து தமது தீர்மானத்தின்படி அடுத்த நாளே சீரடி சென்று பாபாவின் தரிசனத்தை பெற்று அவரைப் பணிந்தார். ‘கல்வியறிவு ஞானிகளின் முன்பு ஒன்றுமில்லை’ என மருத்துவருக்கு உணர்த்திய பாபாவை நாமும் பணிந்து நலம் பெறுவோம்.
மூலம்: சாயி சத்சரிதம்