Singaravelar is a problem solver
Singaravelar is a problem solver 
ஆன்மிகம்

சிக்கல்களைத் தீர்க்கும் சிங்காரவேலர்!

ரேவதி பாலு

சிக்கல் சிங்காரவேலன் கோயில்  தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் கிராமத்தில் அமைந்துள்ளது. இது நாகப்பட்டினத்திலிருந்து மேற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலும், திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் கிழக்கே 18 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் சிவன் மற்றும் விஷ்ணு தெய்வங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ள அரிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இங்கிருக்கும் சிவனுக்கு சிக்கல் நவநீதேஸ்வரர் என்று திருநாமம். இங்கு நின்ற கோலத்தில் அருளும் அம்மனின் திருநாமம் வேல்நெடுங்கண்ணி. இந்தத் திருத்தலத்தின் தலவிருட்சம் மல்லிகை.  சிங்காரவேலர் உத்ஸவமூர்த்தி வடிவில் தனது துணைவியரான வள்ளி, தேவயானையுடன் இங்கே அருள்பாலிக்கிறார்.

புராணங்களின்படி இந்த இடம் ஒரு காலத்தில் மல்லிகைக் காடாக இருந்தது. அந்த நறுமணத்தின் காரணமாக, காமதேனு என்னும் தேவலோகத்துப் பசு இங்கே வசிக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஒரு சமயம் காமதேனு இறைச்சி உண்டபோது சிவபெருமானால் சபிக்கப்பட்டது. பிற்பாடு சாப நிவர்த்திக்காக சிவபெருமான் கூற்றுப்படி இங்கேயுள்ள புனித குளத்தில் நீராடி தனது சாபத்தைப் போக்கிக் கொண்டது. பாவத்திலிருந்து விடுபட்ட பசு, இந்தக் குளத்தில் தனது பாலை சொரிந்ததால் இந்தக் குளம் பால் குளம் என்றே அழைக்கப்பட்டது.

வசிஷ்ட மகரிஷி இந்த பால் குளத்தில் இருந்து வெண்ணெய் எடுத்து அதனால் ஒரு லிங்கம் செய்து  பூஜை செய்தார். பூஜை முடிந்ததும் அந்த லிங்கத்தை நகர்த்த முயன்றார். ஆனால், அந்த லிங்கம் அந்த இடத்திலேயே ஒட்டிக் கொண்டது. நகரவே இல்லை. இதன் விளைவாக வசிஷ்ட மகரிஷி இந்த இடத்தை சிக்கலாகக் கருதினார். அதனாலேயே இந்த தலத்துக்கு சிக்கல் என்று பெயர் வந்ததாம்.

ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா இந்தத் தலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் சிங்காரவேலர் சிக்கலில் அம்பாளிடம் வேல் பெற்று, மறுநாள் திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்ததாகப் புராணம் கூறுகிறது. வேல் பெற்றுக்கொள்ளும் அந்தப் புனித நாளன்று சிங்காரவேலருக்கு முகம் முழுவதும் வியர்க்குமாம். அந்த அதிசயம் இன்றளவும் இந்தத் திருத்தலத்தில் நடைபெறுகிறதாம்.

sikkal singaravelan

அசுரன் சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்காக முருகப்பெருமான் தனது அன்னை பார்வதி தேவியிடமிருந்து வேலாயுதத்தைப் பெறுவது ஒரு மிக முக்கியமான திருவிழாவாக  இங்கே நடைபெறுகிறது. உலகெங்கும் இருந்தும் பக்தர்கள், அன்னையிடமிருந்து வேலை வாங்கியதும் சிங்காரவேலரின் முகத்தில் அரும்பும் வியர்வைத் துளிகளோடு முருகனை தரிசிப்பதற்காகவே அந்த தினத்தன்று அங்கே வருகிறார்களாம்.

ஐப்பசி மாதத்தில் முருகப்பெருமானுக்கு பத்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. தேரோட்டம் முடிந்த ஐந்தாம் நாள் முருகப்பெருமான் அம்மனிடம் பெற்ற வேலாயுதத்துடன் தனது சன்னிதிக்குத் திரும்புகிறார்.  சில மணி நேரங்களுக்குப் பிறகு முருகப்பெருமானின் சிலை மீது வியர்வைத் துளிகள் காணப்படுகின்றன. ‘சிக்கலில் வேல் பெற்று திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்’ என்பது உள்ளூர் பழமொழி.

இந்தத் திருத்தலத்தில் முருகப்பெருமான் தனது அன்னை ஞானாம்பிகையிடம் வேல் பெறுவது கண்கொள்ளாக் காட்சி. முருகப்பெருமானின் முன்பக்க உருவத்தின் மீது சூரியக்கதிர்கள் விழுவதால் தங்கமயமாக பிரகாசமாகத் தோன்றும். வேல் பெற்றுக் கொண்டவுடன் முருகப்பெருமானின் திரு உருவத்தில் வியர்வை பனி போல் தோன்றும். அதைக் காணும் பக்தர்கள் இம்மையின் பெறும் பயனை பெறுவார்கள்.  சிக்கல் சிங்காரவேலவரை தரிசித்தால் வாழ்வின் சிக்கல்கள் யாவும் தீர்ந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

துப்புரவுப் பணியாளர்களுக்கு துணை நிற்போம்!

அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க செய்யக்கூடிய 9 எளிய விஷயங்கள்!

கைவசம் வசம்பு... இனி நோ வம்பு!

பாகுபாலி பிரபாஸுக்கு திருமணமா? இன்ஸ்டா ஸ்டோரி வைரல்!

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் அறிவோம்!

SCROLL FOR NEXT