Lord Narasimha opens his eyes on Karthigai 
ஆன்மிகம்

கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் கண் திறக்கும் யோக நரசிம்மர்!

ஆர்.ஜெயலட்சுமி

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ளது யோக நரசிம்மர் திருக்கோயில். மலை மீது அமைந்திருக்கும் இக்கோயிலில் யோக நரசிம்மர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மலையின் அடிவாரத்தில் உத்ஸவர் அருள்பாலிக்கிறார். இவரது திருநாமம் அருள்மிகு பக்தவச்சல பெருமாள். மலையின் ஒரு பகுதியில் யோக ஆஞ்சனேயரும் தரிசனம் தருகிறார்.

பக்த பிரகலாதனுக்காகக் காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தரிசிக்க வசிஷ்டர், காஸ்யபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர் ஆகிய சப்த ரிஷிகளும் விரும்பினர். ஆனால், பிரகலாதனுக்குக் காட்சி கொடுத்த உக்கிர கோலத்தை நீக்கி சாந்தமாகக் காட்சி அளிக்க வேண்டும் என்று அவர்கள் நரசிம்ம பெருமாளை வேண்டினர். அதற்காக அவர்கள் ஏழு பேரும் நரசிம்மரை நினைத்து தவமிருந்த தலம் இதுவாகும். ஒரு காலத்தில் விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு ‘பிரம்ம ரிஷி’ பட்டத்தைப் பெற்றார். அதுபோல், தங்களுக்கும் நரசிம்மரின் தரிசனம் உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சப்த ரிஷிகளும் இந்தத் தலத்தை தேர்வு செய்து தவம் இயற்றினர்.

இதையடுத்து சப்த ரிஷிகள் விருப்பப்படி நரசிம்மர் தன்னுடைய கோபத்தைத் தணித்து யோக நிலையில் காட்சி அளித்தார். அந்தக் கோலத்திலேயே இந்த ஆலயத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும் செய்கிறார். சுமார் அறுநூறு அடி உயரமுள்ள மலை மீது யோக நரசிம்மர் கோயில் அமைந்திருக்கிறது. அடிவாரத்தில் இருந்து இந்த ஆலயத்தை அடைவதற்கு 1305 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். மலையின் மீது ஒரு ஏக்கர் பரப்பளவில் இருநூறு அடி நீளம் நூற்றைம்பது அடி அகலத்தில் யோக நரசிம்மர் கோயில் அமைந்திருக்கிறது. இங்கே சிம்ஹகோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

மூலவரான யோக நரசிம்மர் கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்துள்ளார். இவர் சாளக்ராம மாலை அணிந்திருக்கிறார். இவரது வடிவத்தை சிலா வடிவம் என்று போற்றுகின்றனர். அருகில் தாயார் அமுதவல்லி காட்சி தருகிறார். ஊரின் மையத்தில் உத்ஸவருக்கு தனிக் கோயில் அமைந்திருப்பது சிறப்புக்குரியது. பிரம்மோத்ஸவம் போன்ற விழாக்கள் அனைத்தும் இங்குதான் நடைபெறுகின்றன. இங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது மலை மீது உள்ள யோக நரசிம்மர் ஆலயம். இந்த மலை மீது இருபத்து நான்கு நிமிடங்கள் இருந்தாலே ஒருவர் முக்தி அடைவார் என்று சொல்லப்படுகிறது.

இந்த மலை மீது ஆயிரத்து முன்னூறு படிகளைக் கடந்து வந்து யோக நரசிம்மரை தரிசித்தாலே பக்தர்கள் கேட்கும் வரங்களை அவர் அளித்து விடுவார். இத்தல இறைவனுக்கு கற்கண்டு, வெல்லம், வாழைப்பழம், தயிர் சாதம் நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது.

இந்த யோக நரசிம்மர் ஆலயத்தில் கார்த்திகை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமைகள், ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் விசேஷ பூஜைகள் நடைபெறும். யோக நரசிம்மராக கண் மூடிய நிலையில் இருக்கும் இக்கோயில் மூலவர் கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து அடியார்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். குறிப்பாக, கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நரசிம்மரை வழிபடுவது மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது.

வெற்றிக்கு உதவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கற்க வேண்டிய 7 பழக்கங்கள்!

அத்திப்பழம் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிடேரியன் ஃபுரூட்டா?

ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வாழைப்பூ!

Biography of Picasso: 20ஆம் நூற்றாண்டின் கலைப் புரட்சியாளர். 

சிறுகதை: நரையும் நர்மதாவும்!

SCROLL FOR NEXT