திருவனந்தபுரம் மாவட்டத்திலிருந்து 51 கி.மீ வடக்கேயும் தெற்கு கேரளத்தின் கொல்லத்திற்கு தெற்கே 37 கி.மீ-லும் அமைந்திருக்கிறது இந்த குக்கிராமம். இங்கு காணவேண்டிய சில இடங்களின் விபரங்கள் இதோ…
பாபநாசம் கடற்கரை (வர்க்கலா கடற்கரை) வர்க்கலாவிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இயற்கை சுனைக்கு பெயர்பெற்ற ஒன்றாக உள்ளது. மருத்துவ குணம் கொண்ட இதில் முழுக்குப் போடுவதால் பாவங்கள் நீங்கி உடல் நலம் பெறலாம்.
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலான ஜனார்த்தனசுவாமி கோயில் கடற்கரையை நோக்கிய குன்றுகள் மீது, சற்று தொலைவில் உள்ளது. மகாவிஷ்ணு உறையும் இக்கோயிலின் கட்டிடக்கலை ஆன்மீக சூழலுடன் கவர்கிறது. இங்கு செதுக்கப்பட்ட அழகிய கூரைகள், ஹனுமனின் ஓவியங்கள் மற்றும் பழங்கால கோவில்மணி ஆகியவை காண சிறப்பு.. தெற்கு காசி என்றும் அழைக்கப்படும் இக்கோவிலில் உள்ள ஜனார்தனசுவாமி சிலை கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. வாயை நோக்கிச் செல்லும்படி அமைக்கப்பட்டிருக்கும் இச்சிலையின் வலக்கையானது வாயைச் சென்று அடையும்போது கலியுகம் முடிவுக்கு வரும் என்பது ஐதீகமாக சொல்லப்படுவது அதிசயம்.
வர்க்கலாவின் மற்றொரு ஆன்மீக சிறப்பாக 'ஒன்றே குலம், ஒரே மதம், ஒருவரே கடவுள்' என்று பிரச்சாரம் செய்த மத சீர்திருத்தவாதியும் தத்துவஞானியுமான ஸ்ரீநாராயணகுரு (1856-1928) துவங்கிய சிவகிரி மடம் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவகிரி புண்ணிய பயண நாட்களான டிசம்பர் 30லிருந்து ஜனவரி 1-ம் நாள்வரை இங்கு வந்து கூடுவர்.
அடுத்து சுற்றுலா பயணிகளைக் கவர்கிறது திருவம்பாடி கடற்கரை. காரணம் அதன் அழகான கருப்பு மணல். இதுவரை பார்க்காத மணலின் அழகியலை அங்கு கண்டு ரசிக்கலாம். அமைதியாக ஓய்வெடுக்கவும், ஸ்நோர்கெல்லின் போது கடல்வாழ் உயிரினங்களைப் பார்த்து ரசிக்கவும் உகந்த இடங்களில் ஒன்றாக அமைகிறது.
அடுத்து தென்னை மரங்களால் சூழப்பட்ட ஒரு அழகிய முகத்துவாரமான கப்பில் ஏரி. ஏரியின் அற்புதமான காட்சியைக் காணும் வகையில் ஏரியின் குறுக்கே பாலம் உள்ளது. வர்கலாவில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றான இந்த ஏரியின் ஓரத்தில் நீண்ட நடைப்பயணம் மற்றும் துடுப்புப் படகு சவாரி சிறப்பு.
அடுத்து காண விரும்பும் பேக்கல் கோட்டையானது ஒரு அற்புதமான பழங்கால கோட்டையாகும். கேரளாவின் மிகப்பெரிய கோட்டையான இது கடல் மட்டத்திலிருந்து 130 அடி உயரத்தில் தனித்துவமான சாவி துளை வடிவ கட்டிடக்கலையின் சாட்சியாக உள்ளது.
சுற்றுலா இடங்களில் ஒன்றான பொன்னும்துருத்துத் தீவு, அஞ்செங்கோ உப்பங்கழியின் நடுவில் ஒரு பழமையான சிவன்-பார்வதி கோயிலுடன் விளங்குகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இங்கு புலம் பெயர்ந்த பறவைகளைக் கண்டு ரசிக்க சிறந்த இடமாகும். நெடுங்கண்டா கிராம ஜெட்டியில் இருந்து 30 நிமிட படகு சவாரி மூலம் இந்த தீவை அடையலாம்.
மேலும் வர்க்கலாவின் கடல் உணவுகள், விதவிதமான ஷாப்பிங் பொருள்கள், கடல் விளையாட்டுகள், ஆயுர்வேதிக் மசாஜ் மையங்கள் போன்றவைகள் சுற்றுலாவை சொர்க்கமாக உணரவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. செல்லும் வாய்ப்பு கிடைத்தால் தவற விடாதீர்கள்.