உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

நவம்பர் 23 - ஶ்ரீ சத்ய சாயி பாபா ஜயந்தி!
Sri Sathya Sai Baba
Sri Sathya Sai BabaImg Credit: Wikimedia commons
Published on

அற்புத அவதாரமான ஶ்ரீ சத்யசாயிபாபா (தோற்றம் 23-11-1926 ; சமாதி 24-4-2011) தன் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய அற்புதங்கள் ஏராளம், ஏராளம்.

உலகெங்கிலுமிருந்து அவரை தரிசிக்க வந்து அவரது பக்தர்களானோர் அனுபவித்த லீலைகளும் ஏராளம்.

Phyliis Krystal
Phyliis Krystal

இவர்களில் ஒருவர் பிலிஸ் கிறிஸ்டால் - Phyliis Krystal

இங்கிலாந்தில் லண்டனில் 1914-ம் ஆண்டு பிறந்த கிறிஸ்டால் இந்திய ஆன்மீக மகான்கள்பால் அளவற்ற ஆர்வம் கொண்டவர். ஒரு நாள் அவர் சத்யசாயிபாபாவின் படத்தைத் தற்செயலாகப் பார்க்கவே, அவரைப் பற்றி அறிய ஆர்வம் கொண்டு 1973ம் ஆண்டு தன் கணவருடன் பங்களூரை வந்து அடைந்தார்.

அவரது கணவர் சிட்னி, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் பிரபலமான அட்டர்னி. தம்பதியினருக்கு இரு மகள்கள் உண்டு.

தரிசனத்திற்காக அமர்ந்திருந்த வரிசையில் கிறிஸ்டாலைப் பார்த்த பாபா, "நாளை காலை 9 மணிக்கு பேட்டி அறைக்கு வா, பேண்டுடன் வா (bring the band)” என்றார். கிறிஸ்டாலுக்கு ஒன்றும் புரியவில்லை. பேண்ட் என்றால்..? அவரது குழப்பத்தைப் பார்த்து குறும்பாகப் புன்னகைத்த பாபா "HUS-BAND ஹஸ்பெண்ட்" என்றார். அனைவரும் சிரித்தனர்.

இப்படி ஆரம்பித்தது பாபாவினுடனான அணுக்கமான தரிசனங்கள்.

ஒரு நாள் பாபா ஒரு திருமணத்தை நடத்தி விட்டு வந்ததாகச் சொன்ன போது, சிட்னி தனது மனைவியுடனான 33வது மணநாள் ஜனவரி 30ஆம் தேதி வரவிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பாபா அன்று அவசியம் அவர்களைப் பார்ப்பதாகத் தெரிவித்தார்.

ஜனவரி 30 வந்தது.

யாரோ ஒருவர் கதவைத் தட்ட, யார் என்று பார்த்த கிறிஸ்டாலிடம் ஒருவர், பாபா அவர்களை பார்க்க வரச் சொன்னதாகச் சொன்னார். உலகின் ஆகப் பெரும் அதீத உளவியல் விஞ்ஞானிகளான டாக்டர் கார்லிஸ் ஓஸிஸ் மற்றும் டாக்டர் எர்லெண்டர் ஹரால்ட்ஸன் ஆகியோரும் பாபாவால் அழைக்கப்பட்டிருந்தனர்.

கார்லிஸ் ஓஸில் நியூயார்க்கில் உள்ள அமெரிக்க அதீத உளவியல் ஆய்வு மையத்தின் இயக்குநர். (Dr. Karlis Osis Director of the American Society for Psychical Rresearch) ஹரால்ட்ஸன் ரெய்க்ஜவிக்கில் உள்ள ஐஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் உளவியில் பிரிவைச் சேர்ந்தவர்.

தொடர்ந்து பாபாவின் அதீத உளவியல் ஆற்றல்களைப் பற்றி ஒரு பெரும் ஆய்வை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

திடீரென்று பாபா சிட்னி - கிறிஸ்டால் தம்பதியின் 33வது திருமண நாளையொட்டி அவர்களுக்கு வைதீக ரீதியிலான ஆன்மீகத் திருமணம் நடத்தப் போவதாக அறிவித்தார்.

சஷ்டியப்த பூர்த்தி என்றால் என்ன என்று அவர்களுக்குப் பின்னால் சிலர் விளக்கினர்.

சிட்னியை அருகில் அழைத்தார் பாபா. இரு விஞ்ஞானிகளும் மிக அருகில் இருந்து உன்னிப்பாக பாபாவைக் கவனிக்கலாயினர்.

தனது கையை வட்டமாகச் சுழற்றிய பாபா ஒரு தங்க மோதிரத்தை அனைவருக்கும் காட்டி சிட்னியிடம் வழங்கினார். சைகை மூலம் கிறிஸ்டாலை அழைத்த பாபா அதை சிட்னியிடமிருந்து வாங்கி சிட்னியின் இடது கை மோதிர விரலில் அணிவிக்கச் சொன்னார்.

பின்னர் தன் கையை விஞ்ஞானிகளும் இதர அனவரும் பார்க்க அது வெறும் கையாக இருப்பதைக் காண்பித்து விட்டு கையைச் சுழற்றினார். ஆ! என்ன அதிசயம். இப்போது அவரது கையில் ஒரு பெரிய நெக்லஸ் ஜொலித்தது. 32 அங்குல நீளம் உள்ள அந்த நெக்லஸ் அனைவரையும் கவர்ந்தது. அதில் நவரத்தினங்கள் எட்டு செட் பதிப்பிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு செட்டும் ஒரு தங்க மணியால் பிரிக்கப்பட்டிருந்தது. ஆக மொத்தம் எல்லாமாகச் சேர்ந்து 81 மணிகள்! நெக்லஸின் கீழே பாபாவின் படம் கொண்ட ஒரு டாலர். அதில் உலகின் ஐந்து பெரும் மதங்களின் அடையாளச் சின்னங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன. கண்களில் நீர் ததும்ப அதைப் பெற்று அணிந்தார் கிறிஸ்டால். அதைப் புடவையின் உள்ளே இருக்கும்படி அணிய வேண்டும் என்று பாபா அறிவுறுத்தினார். அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கலாமா என்று கேட்ட கிறிஸ்டாலிடம், "தாராளமாக, இவர்கள் உனது சகோதர, சகோதரிகள் தாம்” என்றார் பாபா. "நவகிரகங்களின் பாதுகாப்பைத் தரும் நவரத்தினங்கள் இவை" என்றார் பாபா.

ஹிந்து முறைப்படி இது மங்கலசூத்ரம் (அல்லது தாலி) எனப்படும் என்பதை கிறிஸ்டால் தம்பதியினர் விளங்கிக் கொண்டனர்.

நெக்லஸை விஞ்ஞானிகள் பார்த்து பிரமித்தனர். விஞ்ஞானிகளைப் பார்த்த பாபா, "இது எப்படி நடந்தது என்று உங்களால் விளக்க முடியுமா?" என்று கேட்டு அவர்களைச் சீண்டினார்.

முடியாது என்று தலையை அசைத்தனர் விஞ்ஞானிகள்.

அவர்கள் தூய்மையான இதயம் கொண்டவர்கள் என்பதால் அவர்களது ஆய்வுக்காகத் தேவையான அளவு வாய்ப்புகளைக் கொடுத்து வருவதாகக் கூறிய பாபா, தனது சங்கல்பத்தினாலேயே அப்படிப்பட்ட பொருள்களைத் தாம் சிருஷ்டிப்பதாகக் கூறினார்.

"இதற்கு அறிவியல் ரீதியாக விளக்கத்தை உங்களால் அளிக்க முடியுமா?" என்று அந்த இரு விஞ்ஞானிகளும் பாபாவைக் கேட்டனர்.

“உலோகாயத விஞ்ஞானம் ஒரு நாளும் இதை அறிய முடியாது. விஞ்ஞானத்தின் எல்லை குறுகிய ஒன்று. அது படைக்கப்பட்ட உலகைத் தாண்டிச் செல்ல முடியாது. விஞ்ஞானம் சோதனைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆன்மீகமோ அனுபவத்தையும் உள்ளுணர்வையும் அடிப்படையாகக் கொண்டது. ஒரு பெரிய டாக்டரும் கூட சிகிச்சை செய்ய எக்ஸ்ரே உள்ளிட்ட பல சோதனைகளை எடுக்கிறார். ஆனால் எனக்கு எதுவும் தேவையில்லை. நேரடியாக சரியான சிகிச்சையை நான் தந்து விடுவேன்” என்றார் பாபா.

இதையும் படியுங்கள்:
சீதையின் அருள் பெற்ற அனுமன்!
Sri Sathya Sai Baba

தங்களது சோதனைகள்  மற்றும் விதிகளின் படி கட்டுப்பாடான சூழ்நிலையில் பாபா இதைச் செய்து காட்ட வேண்டும் என்று இரு விஞ்ஞானிகளும் வேண்டினர்.

பாபா பொறுமையை இழந்தார். “இதோ உன் மோதிரத்தைப் பார்," என்று அவர்களில் ஒருவரிடம் சொன்னார். அவர் தனது மோதிரத்தைப் பார்த்தார். அதில் பதிக்கப்பட்டிருந்த படத்தைக் காணோம். கீழே விழுந்து கிடக்கிறதா என்று தேடலானார். அனைவரும் தேடினர். ஆனால் போனது போனது தான். அந்தப் படம் கிடைக்கவில்லை.

“இது எனது எக்ஸ்பரிமெண்ட்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பாபா.

இரு தினங்கள் கழிந்தன. இரு விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் அழைக்கப்பட, பாபா மோதிரத்தில் படத்தை இழந்தவரைப் பார்த்து, "என்ன படம் கிடைக்கவில்லையா? அது வேண்டுமா?" என்று கேட்டார். அவரிடமிருந்து மோதிரத்தை வாங்கிக் கொண்ட பாபா, "அதே படம் தான் வேண்டுமா அல்லது வேறு படம் வேண்டுமா?" என்று கேட்டார்.

"அதே படம் தான் வேண்டும்" என்று பதில் வந்தது.

உடனே பாபா மோதிரத்தைத் தன் கையில் மடக்கி வைத்துக் கொண்டு மூன்று முறை ஊதினார். கையைத் திறந்தார். என்ன ஆச்சரியம்!

தொலைந்து போயிருந்த அந்தப் படம் இப்போது பதிக்கப்பட்டிருந்தது. நன்கு பிரகாசமாகத் திகழ்ந்த அந்தப் படத்தில் பின்புலம் மட்டும் இப்போது வேறாக இருந்தது.

இரு விஞ்ஞானிகள் உட்பட அனைவரும் ஓவென்று கத்தினர். உஷ் என்று விரலை உதடுகளில் வைத்த பாபா அவர்களின் கூச்சலை மட்டுப்படுத்தச் சொன்னார்.

விஞ்ஞானிகளுக்கே ஒரு எக்ஸ்பெரிமெண்ட் தந்த பாபாவை கிறிஸ்டாலும் சிட்னியும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதையும் படியுங்கள்:
நெற்றிக்கண் கொண்ட நரசிம்மர் கோவில் எங்குள்ளது தெரியுமா?
Sri Sathya Sai Baba

தனது அனுபவத்தை சாயிபாபா – தி அல்டிமேட் எக்ஸ்பீரியன்ஸ் என்ற புத்தகமாக  எழுதி கிறிஸ்டால் வெளியிட்டார்.

நீண்ட கால அணுக்கத் தொண்டராக இருந்த கிறிஸ்டால் அமெரிக்காவிலிருந்து லண்டன் சென்று தன் இறுதி நாட்களைக் கழித்தார். சிட்னி 1993-ம் ஆண்டு 85-ம் வயதில் மரணமடைந்தார். கிறிஸ்டால் 102 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்து 2016-ல் டிசம்பர் 10-ம் நாளன்று காலமானார்.

ஆதாரம் : Saibaba The Ultimate Experience by Phyllis Krystal (Chapter 13)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com