இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த வருடக் கோடை விடுமுறையில் நாகர்கோயில், கன்னியாகுமரி சென்று வரலாம் என முடிவெடுத்து, அப்போதே ரயிலில் முன்பதிவும் செய்தாகி விட்டது. அக்னி நட்சத்திர காலம் ஆரம்பித்த ஒரே வாரத்தில் மாலையில் மழையும், பகலில் கூடுதல் வெப்பமும் வாட்டி எடுக்க, வேர்த்து சோர்ந்த உடலும், டூர் போகும் உற்சாகமும் கலந்துகட்டிய ஒரு கலவையான உணர்வில் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்தோம்.
ஐந்து மணிக்கு நாகர்கோவிலை அடையவேண்டிய ரயில், இருபது நிமிடம் முன்னதாகவே சென்று விட, மழை தூறிக்கொண்டிருந்த அந்த இனிய காலை வேளையில், லேசாக நனைந்துகொண்டே ஆவினின் வெகு சுமாரான காபியைக் கூட ரசித்து சுவைத்தோம்.
குமரிக்கடற்கரை
அன்று மதியம் வரை கோவில்களுக்கு சென்று விட்டு, சிறிது நேர ஓய்விற்குப் பின், மாலையில் குமரிக் கடற்கரையை அடைந்தோம். கடல் மணலுக்குப் போட்டியாக ஏராளமான கூட்டம் அங்கே. விவேகானந்தர் பாறைக்குப் போகலாம் என நினைத்து, டிக்கெட் வாங்கச் சென்றபோது, அங்கே நின்றிருந்த நீண்.....ட வரிசையைப் பார்த்து மயக்கமே வந்தது. இன்னொரு முறை போய்க்கொள்ளலாம் என முடிவெடுத்து, விவேகானந்தர் பாறை, மற்றும் அய்யன் வள்ளுவர் சிலையை அலைபேசியில் சிறைபிடித்து, ஆக்ரோஷமாக கிளம்பி வந்த அலைகளின் ஓரத்தில் கால் நனைத்து விட்டு திருப்தியடைந்தோம்.
போவோமா ஒரு போட்டிங் தான்!
மறுநாள் காலையில் கிளம்பி திற்பரப்பு அருவிக்கு சென்றோம். முதலில் போட்டிங் போகலாம் என முடிவெடுத்து சென்றால் அங்கேயும் கூட்டத்திற்குக் குறைவில்லை. வரிசையில் காத்திருந்து, எங்கள் முறை வந்ததும், லைப் ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு படகில் பயணித்தோம். இருபது வயதிருக்கும் அந்தப் படகுக்காரருக்கு, உற்சாகமாக துடுப்புப் போட ஆரம்பித்தார். நாங்கள் தண்ணீரின் குளுமையை அனுபவித்தபடி, நீரில் கைகளை அளயவிட்டபடி, சுற்றிலும் இருந்த இயற்கையை ரசித்தபடி, பயணம் செய்தோம். கரையோரத்தில் வளர்ந்திருந்த மரங்கள் தன் தாழ்வான கிளைகளை ஏரித்தண்ணீரில் படரவிட்டிருந்த பாதையில் பயணித்தது அருமையான அனுபவம். அருவியில் குளிக்கவும் நீள வரிசை நின்றிருந்தது.
தெய்வமாக வழிபடப்படும் பொறியாளர்:
அடுத்து நாங்கள் சென்றது பேச்சிப்பாறை அணைக்கட்டிற்கு. கோதையாறு அமைதியாய் ஓடிக்கொண்டிருந்ததைப் பார்க்கையில் அவ்வளவு அழகாக இருந்தது. 48 அடி கொள்ளளவுகொண்ட பேச்சிப்பாறை அணையின்மூலம் குமரி மாவட்டத்தில் இரு போக சாகுபடிகள் நடக்கின்றன. இந்த அணை,1897-1906-ம் காலகட்டத்தில் ஐரோப்பிய பொறியாளர் அலெக்ஸ்சாண்டர் மிஞ்சின்அவர்களால், அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா மூலம் கட்டப்பட்டது. அலெக்ஸ்சாண்டர் மிஞ்சின், மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 1913-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி இறந்தார். அவர்மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த திருவிதாங்கூர் மன்னர், அவர் உடலை பேச்சிப்பாறை அணைப் பகுதியிலேயே அரசு மரியாதையுடன் அடக்கம்செய்து, அந்தப் பகுதியில் கல்லறை கட்டவும் உத்தரவிட்டார். அதன்பேரில், அங்கு கல்லறை கட்டப்பட்டு இன்று நினைவுச் சின்னமாகக் காட்சியளிக்கிறது. குமரி மாவட்ட மக்கள் அவரை வெள்ளைக்கார சாமி, மூக்கன் துரை சாமி என்று அன்போடு அழைத்தது மட்டுமன்றி, ஏற்கெனவே தாங்கள் வணங்கிவந்த பேச்சியம்மன் சுடலை மாடசாமி கோயிலில் கூடுதல் பீடம் ஓன்று போட்டு, மூக்கன் துரை மிஞ்சினையும் வழிபடத் தொடங்கினர். கொடை விழாவும் எடுத்தனர். ஹம்ப்ரே அலெக்ஸ்சாண்டர் மிஞ்சினின் 150-வது பிறந்தநாள் விழா, 2017ல் குமரியில் விவசாயிகளால் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது என்பதை அறிந்த போது ஆச்சரியமளித்தது.
அந்தப் பலாவைத் தான் நான் கையில பிடிச்சேன் மொமென்ட்:
நாகர்கோவிலில் இருந்து திற்பரப்பு செல்லும் வழியில் இருந்த நிறைய பலாமரங்களை என் மகள் பாவனா வியப்புடன் பார்த்தாள். மாத்தூர் தொட்டிப்பாலத்தை நெருங்கிய போது, அரை கிலோமீட்டர் தூரத்திற்கு, எக்கச்சக்கமான வாகனங்கள் வரிசையில் நின்றிருந்தன. போக்குவரத்து கிளியர் ஆக எப்படியும் பதினைந்து நிமிடங்கள் ஆகும் எனத் தெரிந்தது. அப்போது கார் ஜன்னல் வழியே பார்த்த போது ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவற்றின் மேல் இரண்டு பலாப்பழங்கள் காய்த்து தொங்குவதைப் பார்த்த பாவனாவிற்கு, அவற்றை தொட்டுப் பார்க்கும் ஆசை வந்தது. அந்த வீட்டின் வெளிப்புறம் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி நின்று ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். தயக்கத்துடனே அவரை அணுகி, என் மகளின் ஆசையை சொல்லி, ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டேன்.’’ அதுக்கென்ன, தாராளமா எடுங்க. உள்ள வந்து, தொட்டுப் பாருங்க’’ என கேட்டைத் திறந்து விட்டார். ஆசைதீர தொட்டுப்பார்த்து படமும் எடுத்துக்கொண்டோம். மரத்தின் வேர்ப்பகுதியை ஒட்டியவாறு பலாப்பழம் காயத்திருந்ததை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் பாவனா.
மாத்தூா் தொட்டிப்பாலம்
திருவட்டார் என்னும் வைணவத் தலத்துக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாத்தூர் தொட்டிப்பாலம். 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாத்தூா் தொட்டிப் பாலமானது ஆசியாவின் மிக உயரமானதும் மிக நீளமானதும் ஆகும். இந்தப் பாலம் 115 அடி உயரமும், ஒரு கிலோ மீட்டா் நீளமும் கொண்டது. இந்தப் பாலத்தின் நீளம் 1204 அடிகள், உயரம் 104 அடிகள். 28 தூண்கள் இந்தத் தொட்டிப் பாலத்தைத் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் 32 அடி சுற்றளவு கொண்டது. இப்பாலம் கணியான் பாறை, கூட்டுவாயுப்பாறை எனும் இரு பாறைகளையும் இணைக்கிறது. இந்தப் பாலம் வழியாகத் பறளியாற்றின் தண்ணீர், ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு எடுத்து செல்லப்படுகிறது.
தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும், இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது இந்த இடத்தில் நிறைய தமிழ் திரைப்படக் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்த சுற்றுலாத் தலத்தில் குழந்தைகள் பூங்காவும் நீராடும் துறையும் இருக்கின்றன. மக்கள் கூட்டம்கூட்டமாக கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்து உண்பதை பார்க்க முடிந்தது. இங்கு விற்கப்படும் அன்னாசிப்பழத் துண்டுகள் கற்கண்டு போல இனிக்கின்றது.
டூர் முடிந்து ஊர் திரும்பி இரண்டு நாட்கள் கழித்து தான், இந்த ஊரின் வெப்பநிலையை ஏற்கும்பக்குவம் வந்தது உடலுக்கு.