ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்   
தீபம்

அனுபவச் சுவடுகள் 20 ‘கேமரா’ ரூமும் ‘சுளுக்கி’ ஆயுதமும்!

பி.சுவாமிநாதன்

க்ரஹாரத்தில் நாங்கள் வாழ்ந்த வீடு, முழுக்க முழுக்க ஓட்டு வீடு. தெருவில் இருந்து வீட்டுக்குள் நுழைகிறபோது இடப் பக்கம் சிறிய திண்ணை. வலப் பக்கம் பெரிய திண்ணை. காவியும் சுண்ணாம்பும் மாறி மாறி பட்டை பட்டையாக அடித்து வைத்திருப்பார்கள். அக்ரஹாரத்தில் இருக்கிற பெரும்பாலான வீடுகளில் இந்தக் காவியும் வெள்ளையும் பார்க்க முடியும். இத்தகைய வீடுகளைப் பார்த்தாலே ஒரு தெய்வாம்சம் தென்படும்.

வாசல் படி ஏறி நடந்தால், ரேழி. என் அண்ணன் விசு தனது ‘ரேலே’ சைக்கிளை இரவு வேளையில் இங்கேதான் நிறுத்தி இருப்பான். தவிர, ரேழியின் மூலையில் ஏதாவது கண்டாமுண்டா சாமான்கள் ஒன்றிரண்டு காணப்படும். ரேழி பெரும்பாலும் இருட்டாகவே காணப்படும். ரேழியைக் கடந்தால், நேராக முற்றம். துளசிமாடம். துணி துவைக்க ஒரு பெரிய கல். தாழ்வாரமும் முற்றமும் இணைகிற இடத்தில் ஒரு தண்ணீர் தொட்டி. அவ்வப்போது கொல்லைப்பக்கத்தில் இருக்கும் கிணற்றில் இருந்து நீர் கொண்டு வந்து நிரப்பிக்கொண்டே இருப்போம்.

முற்றத்தில் இறங்காமல் வலப்பக்கம் நடந்தால் தாழ்வாரம். அதைத் தாண்டி, கூடம்.  கூடத்தின் ஒரு பக்கம் சமையலறை. இன்னொரு பக்கம் கேமரா ரூம்.

சமையலறையில் கீழே உட்கார்ந்துதான் சமைக்க வேண்டும். மண் அடுப்பு. தினமும் சமையல் முடிந்ததும், சாணி கொண்டு அடுப்பை மெழுகுவாள் அம்மா. ஒரு கோலம் போடுவாள். விறகுதான் பயன்படுத்துவார்கள்.

இந்தக் கடைசியில் கேமரா ரூம். என்ன காரணத்தினால் இதை கேமரா ரூம் என்று அழைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ‘கேமரா ரூம்ல பெரிய உருளி இருக்கும். எடுத்துண்டு வாடா’ என்று அம்மா சொல்வது நினைவில் இருக்கிறது. அந்த உருளியைத் தூக்கினால் அத்தனை வெயிட்டாக இருக்கும்.

அடிக்கடி புழக்கத்தில் இல்லாத பெரிய பெரிய பாத்திரங்கள், பொக்கிஷம் என்று கருதப்படும் பல பொருட்கள் (பணம், நகைகள் எல்லாம் இதில் வரவே வராது), கொலு பொம்மைகள் போன்றவை இந்த ரூமில் இருக்கும். இந்த ரூமை அதிகம் பயன்படுத்த மாட்டார்கள்.

கேமரா ரூமின் கடைசியில்,  அதாவது அக்ரஹார வீதியை ஒட்டி ஒரு ஜன்னல் உண்டு. அந்த ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு அமர்வதற்கு வசதியாக ஒரு சிறு மேடை காணப்படும். அதில் உட்கார்ந்தால் தெருவில் போவோர் வருவோரைப் பார்க்க முடியும். அருகே அழைத்துப் பேச முடியும்.

நம்மைக் கவனிக்காமல் யாராவது போனாலும், பெயர் சொல்லி அழைத்தால் குரல் எங்கிருந்து வருகிறது என்று சுற்றும்முற்றும் தேடிவிட்டுப் பிறகுதான் தெரிந்துகொள்வார்கள். ஒரு புன்னகையுடன் அருகே வருவார்கள். தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

வீட்டுக் கூடத்தில்தான் பெரிய பெரிய சுவாமி படங்கள் மாட்டப்பட்டிருக்கும். எல்லாம் பழைய படங்கள். இன்றைக்கு இருப்பதுபோல் ஓவியத்தில் செயற்கைக் கலப்புகள் அப்போது கிடையாது. ஒரு பழைய முருகப் பெருமான் படத்தைப் பாருங்கள்... இன்றைக்கு இருக்கிற ஒரு ஓவியர் வரைந்த முருகப் பெருமான் படத்தையும் பாருங்கள்... இரண்டுக்கும் இருக்கிற வித்தியாசத்தை நன்றாக உணர முடியும். ஓல்டு இஸ் கோல்டு.

இந்தக் கூடத்தில்தான் நவராத்திரி காலத்தில் பிரமாண்டமாக கொலு வைப்போம். கூடத்தில் இருக்கிற பெரிய ஊஞ்சலைக் கழற்றி அதை ஒரு படியாக வைத்து விடுவோம். ஊஞ்சலின் நீள அகலத்துக்கு ஏற்றவாறு மற்ற படிகளைத் தயார் செய்வோம். ஐந்து அல்லது ஏழு படிகள்.

எங்கள் இல்லத்தில் மின்சார வசதி கிடையாது. அந்த வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற பொருளாதார வசதி அப்போது இல்லை. எனவே, சிம்னி விளக்குதான்.

பகல் வேளையில் பெரிய திண்ணையில் உட்கார்ந்துகொண்டு அப்பாதான் விளக்குகளைத் துடைப்பார். அவற்றுக்கு மண்ணெண்ணெய் ஊற்றுவார். தினமும் இந்தப் பணியை செய்ய வேண்டும். இதனால், ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கி வைத்து விடுவோம். இரவில் கொல்லைக்குப் போனாலும், பூச்சிப்பொட்டு வந்தாலும் எல்லாவற்றுக்கும் ஆபத்பாந்தவன் சிம்னி விளக்குதான்!

அந்தக் காலத்தை இப்போது நினைத்துப் பார்த்தாலும் உடல் சிலிர்க்கிறது.

எத்தனையோ பாம்புகள் இரவு வேளையில் வீட்டு கூடம், தாழ்வாரத்துக்குள் வந்து விடும். உறங்குகிற எங்களுக்கு அருகே ரொம்ப ரிலாக்ஸ்டாக ஊர்ந்து செல்லும். யாராவது கவனித்துவிட்டால், அவ்வளவுதான். எல்லா சிம்னி விளக்குகளும் கடகடவென்று உயிர் பெறும்.

பெரிய பெரிய சுவாமி படங்கள்... அக்காவின் திருமணத்தின்போது...

பாம்பென்றால் படையும் நடுங்கும்தான். ஆனால், அப்போது எங்களுக்கு இவையெல்லாம் பழகிப் போயிற்று. நள்ளிரவு வேளைகளில் சில சமயம் பாம்பைப் பார்த்துவிட்டால், அது அசந்திருக்கும்போது பெரிய கூடையைப் போட்டு மூடி வைத்துவிடுவோம். மேலே ஒரு கல்லை வெயிட்டாக வைத்து விடுவோம். காலையில் ஆட்களை அழைத்துப் பாம்பைப் பிடித்து விடுவோம். , ஒன்று... நினைவு தெரிந்தவரை எங்கள் இல்லத்தில் பாம்புகள் யாரையும் தீண்டியதில்லை.

எங்கள் அக்ரஹாரத்தில் ஒரு ஐயங்கார் இருந்தார். உள்ளூர் பெருமாள் கோயிலில் அவர்தான் பூஜை.  பகலில் ஆதிசேஷனுக்கு பூஜை பண்ணுவார். இரவில் அதே ஆதிசேஷனை சம்ஹாரமும் பண்ணுவார். என்னது, புரியவில்லையா? இந்த ஐயங்கார் பாம்புகளைப் பிடிப்பதில் எக்ஸ்பர்ட்.

கிராமங்களில் பாம்புகளைப் பிடிக்க ‘சுளுக்கி’ என்று ஒரு ஆயுதம் இருக்கும். இரும்பினால் ஆனது. சுளுக்கியின் முனை கூராக இருக்கும். தவிர சுளுக்கியில் ஆங்காங்கே முள் போல் இரும்பு கூர்மையாகத் துருத்திக் கொண்டிருக்கும். இந்த சுளுக்கியை ஒரு நீண்ட கம்பின் முனையில் செருகி வைத்திருப்பார்கள்.

கம்பின் ஒரு முனையைப் பிடித்துக்கொண்டு லாகவமாக மறு முனையை,  அதாவது சுளுக்கு செருகப்பட்டிருக்கும் பகுதியை பாம்பின் மேல் பாய்ச்ச வேண்டும். சுளுக்கியில் இருக்கிற இரும்பு முட்கள் பாம்பைப் பதம் பார்த்து விடும்.

அதன்பின் இறந்த பாம்பை வீட்டுக் கொல்லையில் ஒரு குழி தோண்டிப் புதைத்து விடுவோம். அந்தக் குழிக்குள் மறக்காமல் அரிசி, பசும்பால் போன்றவற்றைப் போடுவோம். சர்ப்பராஜா அல்லவா? செய்த தவறுக்கு ஒரு பிராயச்சித்தம்.

சும்மா சொல்லக் கூடாது... அந்த ஐயங்கார் இல்லையென்றால், பாம்பு தீண்டி எத்தனை குடும்பங்கள் அன்றைக்குப் பலி ஆகி இருக்குமோ?

வசதி இருந்தால்தான் வாழ்க்கையை இன்றைக்கு அனுபவிக்க முடியும் என்ற நிலை... ஆனால், அன்றைக்கு வசதி இல்லாமல் இருந்தால்தான் வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்ற சூழல்.

மழைக் காலங்களில் கொண்டாட்டமும் உண்டு; திண்டாட்டமும் உண்டு.

கொண்டாட்டம் என்ன?

மழை பெய்தால் மூன்று பக்கங்களில் இருந்து ஓடுகள் வழியே மழை நீர் குற்றால அருவி போல் முற்றத்தில் கொட்டும். பெரிய பெரிய அண்டாக்களை வைத்து அந்த நீரைப் பிடிப்போம். கிணற்றில் இருந்து இழுப்பது குறையும். ஓடுகளில் இருந்து கொட்டுகிற நீரை கைகளை நீட்டிப் பிடித்து வீசி அடிக்கிற காலம், கண் முன்னால் வந்து போகிறது.

திண்டாட்டம் என்ன?

ஓடுகளை மாற்றாத வீடு என்றால், அங்கங்கே நீர்க் கசிவு ஏற்பட்டு வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சொட்டிக்கொண்டே இருக்கும். இருக்கிற பாத்திரங்களை எல்லாம் கொண்டு வந்து நீர் சொட்டுகிற இடத்தில் வைக்க வேண்டும்.

தளம் போடப்பட்ட வீடுகள் ஒரு சில அப்போது இருந்தாலும், எங்கள் கிராமத்தில் ஓட்டு வீடுகள்தான் அதிகம். சூளையில் செங்கற்களை சுட வைப்பது போல், ஓடுகளையும் சூளையில் சுட வைப்பார்கள்.  ஓடு வேய்ந்த வீடுகளுக்கு பராமரிப்பு அவசியம். வருடத்துக்கு ஒரு முறை ஓடு மாற்றுவது அவசியம். இல்லாவிட்டால், மழை பெய்தால் உள்ளே ஒழுகும்.

பாம்புகளைத் தவிர, எங்கள் ஊரில் அடிக்கடி குரங்குகள் படையெடுக்கும். சாரி சாரியாக குரங்குகள் ஓட்டின் மீது ஓடுகிறபோது ஓடுகள் உடைந்து விட வாய்ப்புண்டு. எங்கள் ஊருக்கு எப்போது விருந்தாளிகளாக குரங்குகள் படையெடுக்கும் என்று சொல்ல முடியாது. கூட்டமாக வந்து விட்டால் அத்தனை சுலபத்தில் போகாது. நிரந்தரமாகத் தங்கி விடும்.

குரங்கினால் ஒரு முறை எங்கள் வீட்டில் களேபரம் ஆகிவிட்டது. ஊரில் சுற்றித் திரிந்த குரங்குகளுள் ஒன்று எங்கள் வீட்டு அடுப்பங்கரை வரை வந்து விட்டது.

என்ன ஆயிற்று?

 (தொடரும்)

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT