மகாபாரத புராண கதையில் ராமன், லட்சுமணன், ராவணன், அனுமனுக்கு அடுத்தபடியாக நன்கு அறியப்பட்ட ஒரு கதாபாத்திரம் கும்பகர்ணன். ராவணனின் தம்பியான கும்பகர்ணன் மிகுந்த இரக்க குணத்திற்கும் புத்தி கூர்மைக்கும் அடையாளமாக போற்றப்பட்டவர். நெறி தவறாத வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்து வந்த கும்பகர்ணன் தொடர்ந்து ஆறு மாதம் தூங்கிக் கொண்டே இருக்கும் வரத்தை பெற்றதன் பின்னணி என்ன என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மூன்று லோகங்களையும் ஆட்சி செய்து வந்த ராவணன் வீரத்தில் சிறந்தவனாக இருந்து வந்தான். பிரபஞ்சம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் வல்லமை கொண்ட ராவணனின் அறிவுக்கூர்மியையும் ஆற்றலையும் எண்ணி வியந்த அவனது தம்பியான கும்பகர்ணன் தன் அண்ணன் மெச்சும்படியாக ஏதாவது ஒரு பரிசை அவருக்கு கொடுக்க வேண்டும் என எண்ணினான். அதன்படியாக என்ன பரிசு கொடுக்கலாம் என யோசித்தபோது இந்திரனது சிம்மாசனத்தை அண்ணனுக்கு பரிசாக கொடுக்கலாம் அதுவே அவரது தகுதிக்கு உரிய பரிசாக இருக்கும் என நினைத்து அதனை எவ்வாறு பெறுவது என்று சிந்திக்க ஆயத்தமானான். பிரம்ம தேவரை நோக்கி கடுமையான தவம் ஒன்றை மேற்கொண்டான் கும்பகர்ணன்.
ராவணன் மீதும் ராவணனது தம்பியான கும்பகர்ணன் மீதும் இந்திரனுக்கு ஒரு மனத்தாங்கல் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் கும்பகர்ணன் மேற்கொள்ளும் கடுமையான தவத்தால் தன்னுடைய அரியாசனம் பறிபோனாலும் போய்விடும் என எண்ணி, இந்திரன் மிகவும் கலக்கமடைந்தான். அதனால் இந்திரன் தன்னுடைய அரியாசனத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக சரஸ்வதி தேவியை வேண்டி நின்றான். இந்நிலையில் மறுபுறம் கும்பகர்ணன் மேற்கொண்ட கடுமையான தவத்தின் காரணமாக பூலோகம் மற்றும் மேலோகம் முழுவதும் கும்பகர்ணனை பற்றிய பேச்சு நிலவிக் கொண்டிருந்தது.
கும்பகர்ணன் மேற்கொண்டிருக்கும் கடுமையான தவத்தைக் கண்டு மனம் பூரித்துப் போன பிரம்மதேவர் கும்பகர்ணன் வேண்டும் வரங்களைக் கொடுப்பதற்காக பூலோகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். இதே சமயத்தில் இந்திரன் சரஸ்வதி தேவியிடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்க சரஸ்வதி தேவியும் அன்று கும்பகர்ணனின் நாவில் குடியேறிக் கொண்டார். பூலோகத்தை அடைந்த பிரம்மதேவன் கும்பகர்ணனின் முன் தோன்றி, "உன்னுடைய தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்தோம்! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்!" என்று கூறினார்.
இதைக் கேட்ட கும்பகர்ணன் மிகவும் மகிழ்ந்து,"எனக்கு நித்ராசனம் வேண்டும்" என்று வரம் கேட்டார். (நித்ராசனம் என்றால் வருடம் முழுவதும் தூங்கிக் கொண்டே இருப்பது என்று பொருளாகும்.)
உடனே பிரம்மதேவரும், "யாம் கேட்ட வரத்தை கொடுத்து மகிழ்ந்தோம்" என்று கூறி அந்த இடத்தை விட்டு புறப்பட்டார். பிரம்மதேவன் சென்ற மறு வினாடியே கும்பகர்ணனின் நாவில் இருந்த சரஸ்வதி தேவியும் கும்பகர்ணனின் நாவை விட்டு விலகிச் சென்று விட்டாள். கும்பகர்ணனுக்கு அப்பொழுதுதான் தான் உச்சரித்த வார்த்தைகளை தவறுதலாக உச்சரித்து விட்டோம் என்பது புரிந்தது.
இந்திராசனம் வேண்டும் என்று கேட்பதற்கு பதிலாக நித்ராசனம் வேண்டும் என்று தவறுதலாக வார்த்தையை உச்சரித்து விட்டதை எண்ணி மனம் வருந்தினார் கும்பகர்ணன்.
எனவே இவ்வாறு தான் கேட்ட வரத்தின் காரணமாக வருடம் முழுவதும் நாம் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணிய கும்பகர்ணன் மீண்டும் பிரம்ம தேவனை நோக்கி தவம் மேற்கொள்ள தொடங்கினார்.
அப்பொழுது மீண்டும் கும்பகர்ணன் முன் தோன்றிய பிரம்மதேவன் "நீவிர் விரும்பிய வரத்தையே யாம் கொடுத்தோம்! கொடுத்த வரத்தை எம்மால் ஒன்றும் செய்ய இயலாது" என்று கூறினார். இருப்பினும் கும்பகர்ணன் அவரிடம் மீண்டும் மீண்டும் வருந்தி கேட்டுக் கொள்ளவே மனமிரங்கிய பிரம்மதேயர், "வருடம் முழுவதும் என்பதை ஆறு மாதமாக குறைத்துக் கொள்கிறேன்" என்று வரம் அளித்து சென்றார். அதன் அடிப்படையில் தான் கும்பகர்ணன் வருடத்தில் ஆறு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டும் மீதி ஆறு மாதங்கள் தொடர்ந்து தூங்கிக் கொண்டும் இருக்கிறார்.
பருத்த உடல் அமைப்பைக் கொண்டு தொடர் தூக்கத்தாலும் தொடர்ந்து சாப்பிடும் பண்பாலும் கும்பகர்ணன் கிட்டத்தட்ட ஒரு அரக்கனை போலவே காட்சியளிக்கிறார். ஆனால் உண்மையில் கும்பகர்ணன் மிகவும் சாந்தமான குணமுடையவர். ராவணன் சீதையை கவர்ந்து வந்த போது ராவணனை நோக்கி,'நீ செய்தது தவறு!' என்று சுட்டிக்காட்டியவரும் கும்பகர்ணனே! ராவணன் தவறான பாதையில் சென்றாலும் கூட, தன் அண்ணன் அநீதியின் பக்கம் இருப்பது தெரிந்தும், தன் அண்ணன் மீது கொண்ட அதிகப்படியான பாசத்தினால் அண்ணனுக்கு எதிராக நிற்காமல் இறுதிவரை அவருக்கு ஆதரவாக நின்று போர்க்களத்தில் போராடி உயிரை விட்டவர் கும்பகர்ணன்!
எனவே இனிமேல் கும்பகர்ணனை ஆழ்ந்த தூக்கத்திற்கு மட்டும் உதாரணமாக சொல்லாமல் அண்ணன் மீது கொண்ட அளப்பெரிய பாசத்துக்கும் ஒரு உதாரணமாக சொல்லலாமே!