சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாப்பட்டிணத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில் உள்ளது. வடஇந்தியாவில் உள்ள ராமர் அவதரித்த அயோத்தி மாநகருக்கு செல்ல முடியாதவர்கள் தென்னகத்தின் அயோத்தியாம் இந்தத் கோவிலுக்கு வந்து செல்லலாம். அயோத்தியில் அருள்புரியும் ராமருக்கு நிகராக ஏகப்பட்ட ஆன்மீக நிகழ்வுகள் நடந்த தலமாக இது விளங்கி வருகிறது. இங்கிருக்கும் அழகிய சிற்பங்களும் கோவில் அமைப்பும் கடவுள் சிலைகளும் காணக்காணக் கண்களையும் மனதையும் நிறைக்கும்.
தமிழகத்தில் ராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி அளிக்கும் ஒரே கோவில் என்ற பெருமையும் இதற்கு உண்டு. அதேபோல் ராமன் சீதை இணைந்து திருமணக் கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிப்பது சிறப்பு. மேலும் ராமபிரானும் சீதாப்பிராட்டியும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது இந்தக் கோவிலின் விசேஷ அம்சம். இந்தக் கோவிலின் சிற்பங்களை செய்த சிற்பி சிற்ப ரகசியத்தை வெளியே சொல்லாமல் இருக்க நாக்கு அறுபட்ட நிலையில் இங்கிருக்கும் சிற்பமே இக்கோவிலின் மகிமைக்கு சான்று. இப்படி இன்னும் பல சிறப்புகளை உடைய . இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி ராமநவமி, புட்டாசி சனிக்கிழமைகள், நவராத்திரி விழா, உள்பட அங்கு தனிக்கோவில் அமைத்து அருளும் ஆண்டாளின் ஆடிப்பூர விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு திருவிழா நாட்களில் ராமன் சீதை லட்சுமணன் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடக்கிறது. இக்கோவிலில் நூறு ஆண்டுகள் பழமையான மரத்தேர் இருந்தது. அந்த தேர் சில ஆண்டுகளுக்கு முன் பழுதானதால் அதற்குப் பதில் புதிய மரத்தில் செய்ய ஆன்மீக முன்னோடிகள் பல்வேறு அமைப்பினர் அரசை வலியுறுத்தினர். இதை பரிசீலித்த அரசு ரூபாய் 50 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்ய ஒப்புதல் வழங்கியது. இதை அடுத்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு புதிய மரத்தேர் செய்யும் பணி தொடங்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகளால் தேர் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களும் பக்தர்களும் அதிருப்தியில் இருந்தனர்.
தற்போது தேர் செய்யும் பணியை சில மாதங்கள் முன் மற்றொரு குழுவுக்கு கோவில் நிர்வாகம் வழங்கி உள்ளது. அவர்கள் கடந்த மூன்று மாதமாக தேர் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த மரத்தேர் அடிப் பகுதியில் இலுப்பை மரத்திலும் மற்ற பகுதிகள் ஏற்காடு வேங்கை மரத்திலும் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது 75% பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள 25 சதவீத பணிகள், இந்த வருட ஏப்ரல் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர் பணி முழுமையாக முடித்த பின்பு வெள்ளோட்டம் நடத்தப்படும். அதன் பிறகு திருவிழாக் காலங்களில் ராமர் சீதை லட்சுமணன் அனுமன் உள்ளிட்ட உற்சவர்களை புதிய தேரில் வைத்து தேரோட்டம் நடத்தப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய மரத்தேரில் உலாவரும் ராம பரிவாரங்களை வழிபட எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர் அப்பகுதி மக்களுடன் வெளியூர் பக்தர்களும்.