சீன நாட்டில் ஒரு நேர்மையான வணிகர் வாழ்ந்து வந்தார். நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று வியாபாரம் செய்யும் அவர் சில சமயம் எங்கேயாது தங்கிக் கொள்ளுவது வழக்கம். ஒரு சமயம் ஒரு ஊரில் வியாபாரம் செய்து முடித்தபோது இரவு நேரமாகிவிட்டது. ஒரு பெரியவரிடம் விசாரிக்க அவர் “இங்கிருந்து வடக்கே சற்று தொலைவில் ஒரு பெண்மணி சத்திரம் ஒன்றை நடத்தி வருகிறாள். அங்கே தங்கிக் கொள்” என்றார்.
வணிகர் வடதிசையை நோக்கிச் சென்று அந்த சத்திரத்தை அடைந்து அன்றிரவு அந்த சத்திரத்தில் தங்கினார். அவரைப் போலவே பலரும் அந்த சத்திரத்தில் தங்கியிருந்தார்கள்.
பெண்மணி இரவு சாப்பிட சப்பாத்திகளை தயாரித்துக் கொடுத்தாள். அனைவரும் சுவையான சப்பாத்திகளை விரும்பி சாப்பிட்டார்கள். வணிகருக்கு பசி இல்லாத காரணத்தினால் அவர் சாப்பிடவில்லை.
அன்றிரவு நடு இரவில் ஏதோ விநோத சத்தம் கேட்டது. நன்றாக சாப்பிட்ட மயக்கத்தில் அனைவரும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தார்கள். சத்தம் கேட்டு விழித்த வணிகர் எழுந்து சத்தம் வந்த அறையை நோக்கி நடந்தார். வணிகர் ஜன்னல் வழியாக அந்த அறைக்குள் எட்டிப் பார்த்தார். உள்ளே அவர் பார்த்த காட்சி அவரை திடுக்கிட வைத்தது.
சத்திரத்து பெண்மணி ஒரு மரப்பெட்டியிலிருந்து மரக்குதிரை மரத்தினால் ஆன ஒரு மனிதன் மரத்தினாலான கலப்பை ஆகியவற்றை எடுத்து மேஜையின் மீது வைத்தாள். கரகரப்பான குரலில் மந்திரம் ஒன்றை உச்சரித்தாள். உடனே அந்த மரமனிதன் கலப்பையால் உழ ஆரம்பித்தான். சில விதைகளை பெண்மணி தெளித்தாள். சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் கோதுமைப் பயிர் விளைந்தது. அதை அறுவடை செய்து மூட்டைகளில் கட்டி வைத்தாள் அந்த பெண்மணி.
“மனிதர்களை கழுதைகளாக்கும் மந்திர சப்பாத்திக்கான கோதுமைகளை தயார் செய்துவிட்டேன்” அந்த பெண்மணி தனக்குத்தானே சொல்லி பயங்கரமாக சிரித்தாள்.
இதைக் கேட்ட வணிகர் அதிர்ச்சி அடைந்தார். நல்லவேளையாக இரவு அவர் சப்பாத்தி சாப்பிடவில்லை.
அடுத்தநாள் காலை மந்திர சப்பாத்திகளை சாப்பிட்ட பலர் கழுதைகளாக மாறியிருந்தனர்.
வணிகர் தனக்கு எதுவும் தெரியாததுபோல நடந்து கொண்டார்.
சத்திரப் பெண்மணியிடம் சென்று விடைபெற எண்ணினார்.
“வணிகரே. நீங்கள் இங்கு வந்து தங்கியது குறித்து மகிழ்ச்சி. கொஞ்சம் பொறுங்கள். நான் தயாரித்துத் தரும் சுவை மிக்க சப்பாத்திகளை சாப்பிட்டுவிட்டு புறப்படலாம்”
“பெண்மணியே. எனக்கு நேரமாகிவிட்டது. சப்பாத்திகளை பொட்டலமாக கட்டிக் கொடுங்கள். வழியில் சாப்பிடுகிறேன்”
பெண்மணியும் சப்பாத்திகளை பொட்டலமாக கட்டிக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு புறப்பட்டார் வணிகர்.
அடுத்தநாள் வணிகர் மீண்டும் அந்த சத்திரத்திற்கு வந்தார். அவர் கழுதையாக மாறாமல் மனிதனாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள் சத்திரப் பெண்மணி.
“என்ன வணிகரே. நான் செய்து கொடுத்த சப்பாத்திகளை நீங்கள் சாப்பிடவில்லையா ?”
“மன்னிக்க வேண்டும் நல்ல பெண்மணியே. வழியில் என்னுடைய நண்பர்கள் நீங்கள் தயாரித்துக் கொடுத்த சப்பாத்திகளை சாப்பிட்டு விட்டார்கள். நான் சென்ற பகுதியில் அதிசயமான சில சப்பாத்திகள் எனக்குக் கிடைத்தன. அவற்றை சாப்பிட்டால் எப்போதும் வயதாகாமல் இளமையாக இருக்கலாம்”
“அப்படியா ? எனக்கும் சிறிது தாருங்கள்”
பெண்மணி ஆச்சரியமாக அவரிடம் கேட்டாள்.
நேற்று சத்திர பெண்மணி தயாரித்துக் கொடுத்த அதே மந்திர சப்பாத்திகளைத்தான் வணிகர் இப்போது கொண்டு வந்திருக்கிறார். அவற்றுடன் வழியில் வாங்கிய இரண்டு சப்பாத்திகளையும் அதனுடன் வைத்திருந்தார்.
பொட்டலத்தைப் பிரித்து வெளியே வாங்கிய அந்த இரண்டு சப்பாத்திகளை எடுத்துக் கொண்டு மந்திர சப்பாத்திகளை அந்த பெண்மணிக்குக் கொடுத்தார்.
பெண்மணி “சப்பாத்திகள் மிகவும் சுவையாக இருக்கின்றன. இவற்றை தயாரித்தது யார் ?” என்று கேட்க அதற்கு வணிகர் “இவை அனைத்தும் நீங்கள் தயாரித்த மந்திர சப்பாத்திகள்தான் பெண்மணியே” என்றதும் அந்த பெண்மணி திடுக்கிட்டாள்.
“என்ன உளறுகிறாய் ?”
“உளறவில்லை பெண்மணியே. உங்களை நம்பி இங்கே தங்க வரும் மனிதர்களை ஏமாற்றி அவர்களை கழுதைகளாக மாற்றி வந்தீர்கள். இப்போது நீங்களும் கழுதையாக மாறப்போகிறீர்கள்”
வணிகர் இவ்வாறு கூறி முடித்ததும் அந்த சத்திரப் பெண்மணி கழுதையாக மாறிப் போனாள். நன்மைக்கு நன்மை. தீமைக்கு தீமை.