ஹாய் குட்டீஸ்!
நீங்க எல்லாரும் மயில் பார்த்து இருக்கீங்க தானே! சிறுவர் பூங்காவுக்கு செல்லும் போது தனது நீளமான தோகையை விரித்து மயில் ஆடுவதை காண அவ்வளவு அற்புதமான இருக்கும். அதுமட்டுமல்ல நம்முடைய தேசிய பறவையும் மயில் தான்! இந்த மயில்களை பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க!
நாம் அனைவரும் பொதுவாக மயிலை ஆங்கிலத்தில் Peacock என்று அழைக்கிறோம். ஆனால் பொதுவாக Peacock என்பது ஆண் மயிலை குறிக்கும். பெண் மயிலை Peahen என்று அழைப்பர். மயில்கள் இந்தியாவை தவிர்த்து மியான்மர், காங்கோ போன்ற பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது. நாம் நமது தேசிய பறவையாக மயிலை தேர்ந்தெடுத்தது போலவே மியான்மர் மற்றும் காங்கோ நாடுகளும் தங்களின் தேசிய பறவையாக மயிலை தேர்வு செய்து உள்ளனர்.
மயில்களில் பல வகைகள் உண்டு. இருப்பினும் இந்திய மயில்கள் தனித்துவமானவை. இவை சுமார் 20 வருடங்கள் உயிர் வாழும் தன்மை உடையவை. ஆனால், மனிதர்கள் புலங்காத இடங்களில் கிட்டத்தட்ட 40 வருடங்கள் கூட உயிருடன் வாழ்கின்றன. மயில் ஒரு பறவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், மயில்களால் நீண்ட தூரம் பறக்க முடியாது. ஏதேனும் அவசர காலங்களில் மட்டுமே மயில்கள் பறக்கின்றன. அதுவும் கூட குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே பறக்கும் இயல்புடையது.
மயில்கள் பல தனித்துவமான ஒலி எழுப்பும் தன்மை உடையவை. கிட்டத்தட்ட இவை 14 வகையான வித்தியாசமான ஒலிகளை எழுப்புகின்றன. மயில்கள் ஒலி எழுப்புவதை 'அகவுதல்' என்று அழைக்கிறோம். மிகவும் அதிகமாக ஒலி எழுப்பக் கூடிய பறவைகளில் மயிலும் ஒன்று. அடர்ந்து காட்டுப் பகுதிகளில் கூட பல்வேறு மிருகங்கள் வரும் அபாயத்தை உணர்த்துவிதமாக மயில்கள் ஒலி எழுப்பும் தன்மை உடையவை.
மயில்களின் கால்களில் சவ்வு போன்ற அமைப்பு இருக்கிறது. இதை பயன்படுத்தியே மரக் கிளைகளை பிடித்துக் கொள்கிறது. மயில் அதன் இறைச்சி, விவசாய நிலங்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், மற்றும் அழகான அதன் தோகை போன்ற பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்படுகிறது. 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் மயில்களை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாக சொல்லப்படுவதோடு அதனை வீட்டில் வைத்து வளர்க்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
மயில்கள் தாவரம், பூக்கள், எறும்புகள், தவளை, வண்ணத்துப்பூச்சி, எலி, சின்ன பாம்பு போன்றவைகளை உணவாக உட்கொள்ளும். மயிலுக்கு முக்கிய எதிரி என்றால் அது பாம்பு தான். எவ்வளவு கொடிய விஷம் உடைய பாம்புகளாக இருந்தாலும் அதனோடு சண்டையிட்டு இறுதியில் மயிலே வெல்லும். மயில்கள் தற்போது அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மயில் தோகையை பயன்படுத்தி ஆடைகள், விசிறி மற்றும் பல்வேறு வீட்டு அலங்கார பொருட்கள் செய்யப்படுகிறது. மயில்களில் பல்வேறு வகைகள் உள்ளன.
Indian Peacock:
இது இந்திய நாட்டில் வளரும் நீல நிற கருத்தையும் பலவித வண்ணங்களையும் உடைய நாம் பரவலாக காணப்படும் மயிலினத்தைச் சேர்ந்தவை.
Green Peacock:
மியான்மர், வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இத்தகைய மயில்கள் காணப்படுகின்றன. இதன் கழுத்து பச்சை நிறத்திலும் தோகை ஊதா மற்றும் மஞ்சள் கலந்த நிறத்திலும் காணப்படுகிறது.
Congo Peacock:
ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ தீவுகளில் இத்தகைய மயில் வகைகள் காணப்படுகிறது. கழுத்து சிவப்பு நிறத்திலும், தோகை பச்சை மற்றும் நீல நிற புள்ளிகளுடனும் காணப்படும் இந்த வகை மயில் தான் காங்கோ நாட்டின் தேசிய பறவை ஆகும்.
White Peacock:
மஞ்சள் நிறத்தில் பிறந்து, வெள்ளை நிறமாக மாறும் தன்மை உடையது இத்தகைய வெள்ளை நிற மயில்கள். இதன் வெள்ளை நிறத்திற்கு காரணம் நிறச்சுரப்பி பற்றாக்குறையே ஆகும். இதன் தோகையில் ஆங்காங்கே முத்துக்கள் பதித்தது போன்று பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
The Great Argus Peacock:
தெற்காசியாவில் உள்ள அடர்ந்த காடுகளில் மட்டுமே இத்தகைய மயில்கள் காணப்படுகின்றன. நீண்ட தோகையை உடைய இந்த மயில்களின் தோகை மட்டும் 100 முதல் 140 சென்டிமீட்டர் நீளமுடையவை. இருப்பதிலேயே நீளமான தோகை உடைய மயில்கள் இந்த வகையைச் சார்ந்தவை தான்.
என்ன குட்டிஸ் மயில்களைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டீர்களா! அடுத்த பதிவில் மற்றொரு உயிரினத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்!