‘த இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸ்‘ என்ற நிறுவனம் எப்படி உருவானது தெரியுமா?
விவேகானந்தருக்கும், இந்த விஞ்ஞானப் பயிற்சி நிறுவனத்துக்கும் என்ன சம்பந்தம்?
இதைத் தெரிந்து கொள்ள நூறாண்டுகளுக்கு முன்னால் செல்ல வேண்டும்.
1893ம் ஆண்டு இந்திய தொழில் அதிபரான ஜாம்ஷெட்ஜி நுசர்வான்ஜி டாட்டா, ஜெர்மனியை நோக்கிக் கப்பலில் சென்று கொண்டிருந்தார். கப்பலின் மேல் தட்டில் தன் முதல் வகுப்பு அறையைத் திறந்து வெளியே வந்த அவர், கீழ் தளத்தில் ஏதோ சந்தடி எழுவதை உணர்ந்தார். கப்பல் பணியாளரை அழைத்து விவரம் கேட்டபோது, ‘‘இந்தியாவின் பிரபல ஸ்வாமி விவேகானந்தர் இதே கப்பலில் சாதாரண வகுப்பில் பயணம் செய்கிறார். அவரை தரிசிக்கவும், அவர் பேச்சைக் கேட்கவும் பிற பயணிகள் போய்க் கொண்டிருக்கிறார்கள்,‘‘ என்ற தகவல் கிடைத்தது.
உடனே ஆர்வம் உந்தியது டாட்டாவை. விவேகானந்தரைப் பற்றி அவர் நிறைய கேள்விப்பட்டிருந்தார். ஆகவே தானும் கீழே சென்றார். இவரைப் பற்றி விவேகானந்தருக்கும் ஏற்கெனவே தெரிந்திருந்தது. இருவரும் பரஸ்பரம் அறிமுகத்துக்குப் பிறகு, பேசிக் கொண்டிருந்தார்கள்.
‘‘நான் ஜெர்மனிக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்,‘‘ டாட்டா சொன்னார். ‘‘சில மூட்டைகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சேகரித்திருக்கும் மணல் மாதிரிகளை என்னுடன் கொண்டு செல்கிறேன். ஜெர்மனியிலுள்ள பரிசோதனை கூடத்தில் இந்த மணல் துகள்களை ஆராய்வார்கள். இவற்றில் எதில் இரும்புத் தாது இருக்கிறது என்று சொல்வார்கள். அந்த மணலைப் பெருமளவு இந்த நாட்டிற்கு நான் ஏற்றுமதி செய்து அதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இரும்புத் தாதுவை நம் நாட்டில் இறக்குமதி செய்து என் தொழிற்சாலையில் இரும்புப் பொருட்கள் தயாரிக்கலாம் என்று நினைக்கிறேன்.‘‘ என்று தன் பயண நோக்கத்தைத் தெரிவித்தார் டாட்டா.
‘‘சோதித்துப் பார்த்து இவற்றில் இரும்புத் தாது இல்லை என்று அவர்கள் தெரிவித்து விட்டானார்களானால் என்ன செய்வீர்கள்?‘‘ விவேகானந்தர் யதார்த்தமாகக் கேட்டார்.
‘‘அப்புறம் என்ன, வேறு சில சாம்பிள்களை சேகரித்துக் கொண்டு மறுபடி வர வேண்டியதுதான்,‘‘ என்று பதிலளித்தார் டாட்டா.
‘‘அவர்கள் சொல்லும் ஆராய்ச்சி முடிவு உண்மையாக இருக்கும் என்று நீங்கள் முழுமையாக நம்புகிறீர்களா? நம் நாட்டில் நாம் சுயமாக இரும்புப் பொருட்களைத் தயாரித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் ஏன் பொய் சொல்லக் கூடாது?‘‘ விவேகானந்தர் கேட்டார்.
டாட்டா சிந்தனை வயப்பட்டார். ‘‘இருக்கலாம். இதற்கு முன் மூன்று, நான்கு முறை நான் இதே விஷயத்துக்காக வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும், ‘இந்த மணல் சாம்பிள்களில் இரும்புத் தாது இல்லை; வேறு பகுதிகளிலிருந்து மணல் கொண்டு வாருங்கள்,‘ என்றுதான் சொன்னர்கள்….‘‘
‘‘கவலைப் படாதீர்கள். நம் நாட்டில் சிறந்த அறிவும், ஆற்றலும் கொண்ட துடிப்பு மிகுந்த இளைஞர்கள் லட்சக் கணக்கில் இருக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களுக்கு இவ்வாறு ஆராய்ச்சி செய்யும் படிப்பில் பயிற்சி கொடுங்கள். அவர்களை வைத்தே நீங்கள் உருக்காலையை நிர்மாணம் செய்யுங்கள். அவர்களுக்கு வேலை கொடுங்கள். பாரதமே உங்களைப் பெருமையுடன் பார்க்கும். பிற நாடுகள் பொறாமையுடன் பார்க்கும்,‘‘ என்று ஊக்கமளித்தார் ஸ்வாமி.
புதுத்தெம்பு பெற்றார் டாட்டா.
விவேகானந்தர் தொடர்ந்து சொன்னார்: ‘‘உடனடி செலவுக்கு யோசிக்காதீர்கள். உங்களுக்கு உதவ நிறைய பேர் வருவார்கள். முதலில் மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையாரைப் போய்ப் பாருங்கள். என்னுடைய சிகாகோ பயணத்துக்கும் அவர்தான் ஆதரவும், உதவியும் அளித்தார். உங்களுக்கும் அவர் நிச்சயம் உதவுவார். அதோடு நீங்கள் திரும்பத் திரும்ப ஜெர்மனி வந்து போகும் செலவும் மிச்சமாகும். அதிகபட்சம் ஐந்தாறு வருடங்களில் உங்களால் பாரதத்தின் இளம் விஞ்ஞானிகளை உருவாக்க முடியும்,‘‘ என்று நம்பிக்கை அளித்தார்.
அதன்படி டாட்டா உடையாரைப் பார்க்க, அவர் உடனடியாக 370 ஏக்கர் நிலத்தையும், விஞ்ஞான அறிவியல் கல்லூரியை நிர்மாணிக்க கணிசமான தொகையையும் கொடுத்து உதவினார்.
அடுத்தடுத்து பணிகள் சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்பட்டன. அப்போதைய ஆங்கிலேய அரசாங்கமும் இந்த முயற்சிக்கு எந்த முட்டுக்கட்டையும் போடாமல், டாட்டாவுக்கு சாதகமாக ஆணைகளையும் பிறப்பித்தது.
1909ம் ஆண்டு ‘த இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸ்‘ உருவானபோது டாட்டா உயிருடன் இல்லை; ஆமாம் 1904ம் ஆண்டிலேயே உடல்நலக் குறைவால் அவர் மரணமடைந்து விட்டார். ஆனாலும் அவருடைய நோக்கம் வெற்றி பெற்றுவிட்டது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த நிறுவனத்துக்கு டாட்டா, விவேகானந்தர் அல்லது கிருஷ்ணராஜ உடையார் என்று இவர்கள் பெயரை வைக்காமல் பொதுவாக ‘த இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸ்‘ என்று வைத்ததுதான்!