கலைஞர் பதில்:
கலைஞரின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.
கலைஞரது 75வது பிறந்த நாளை ஒட்டி வெளியான 07.06.1998 மற்றும் 14.06.1998 ஆகிய இரு கல்கி இதழ்களில் “கலைஞர் 75” என்ற தலைப்பில் அவரது முற்றிலும் மாறுபட்ட பேட்டி வெளியானது.
07.06.1998 இதழில் வெளியான அந்தப் பேட்டியினை மூன்று பகுதிகளாக ஏற்கபவே படித்து ரசித்தோம். இதோ 14.06.1998 இதழில் வெளியான அதன் தொடர்ச்சி:
கல்கி : உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா? எப்போதாவது சமைத்திருக்கிறீர்களா? என்ன சமைத்தீர்கள்?
இந்தக் கேள்விக்கு கலைஞர் சட்ட சபையில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பாணியில் பதில் சொன்னார். அவர் சொன்ன பதில் என்ன?
கலைஞர்: சட்டசபையில் சொல்கிற மாதிரி சொல்கிறேன்: முதல் கேள்விக்குப் பதில் தெரியாது; அதைத் தொடர்ந்து வரும் கேள்வி 'அ'வுக்கு' 'இல்லை': 'ஆ'வுக்கு "இந்தக் கேள்வியே எழவில்லை!
கல்கி: 'கொழுக்கட்டை சாப்பிடத் தயார்' என்று சொல்லியிருக்கிறீர்களே, நிஜமாகவே கொழுக்கட்டையின் சுவை உங்களுக்குப் பிடிக்குமா"
கலைஞர்: கொழுக்கட்டை என்றால் வெறும் கொழுக்கட்டை அல்ல, உள்ளே இனிப்பான பூாணம் உள்ள கொழுக்கட்டையின் சுவை உள்ளபடியே எனக்குப் பிடிக்கும். சொல்ல போனால் பலகாரங்களிலேயே எனக்கு ரொம்பப் பிடித்தது. பூரணத்தோடு கூடிய மோதகம் - கொழுக்கட்டைதான்!
கல்கி : அளவுக்கு மீறி ஒரு சிலர் உங்களைப் புகழும்போது நீங்கள் எப்படி உணர்வீர்கள்?
கலைஞர்: நான் ரொம்பவும் வெட்கப் படுவேன். சில நேரங்களில் அவர்களைப் பற்றி சந்தேகப்படுவேன்.
கல்கி : மனம் சோர்வடையும் போது உங்களை நீங்களே எப்படி உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள்?
கலைஞர்: என்னைவிட அதிக கஷ்டப்படுபவர்களை நினைத்து, அவர்கள் எல்லாம் எப்படித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்து, என்னை உற்சாகப் படுத்திக் கொள்வேன்.
கல்கி : நீங்கள் மிகவும் சோர்ந்து போன ஒரு விஷயம் பற்றிச் சொல்லுங்களேன்.
கலைஞர் : எனது அறுபதாண்டு காலப் பொது வாழ்க்கையில் அடிக்கடி சோர்ந்து போகக் கூடிய நிகழ்ச்சிகள் நிறைய இருக்கின்றன. எனவே ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.
கல்கி : பெண்ணுரிமை பற்றி உங்கள் கருத்து என்ன? இன்றைய பெண்கள் எந்த அளவுக்கு உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள்?
கலைஞர்: ஓர் ஆணுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவை அத்தனையும் ஒரு பெண்ணுக்கும் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு இரு வேறு கருத்துக்கள் இல்லை. ஆனால், நம்முடைய பண்பாட்டுக்கு ஏற்ற வகையிலே ஓர் ஆணுக்கு இருக்கின்ற உரிமைகளின் அளவு பெண்களுக்கு இருக்க வேண்டும். அது நமது பண்பாட்டை மீறியதாக ஆகிவிடக் கூடாது. பெண்ணுரிமை என்ற பெயரால் பண்பாடுகளைப் போட்டு மிதிக்கின்ற அளவுக்குத் தீவிர உரிமைகள் பேசுவது எனக்குப் பிடிக்காத ஒன்று.
கல்தி : உங்களுக்கு மிகவும் பிடித்த பாடகர் யார்?
கலைஞர் : ஆண் என்றால் சிதம்பரம் ஜெயராமன். பெண் என்றால் திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி.
கல்கி : நீங்கள் பாடுவீர்களா? மேடையில் இல்லாவிட்டாலும் தனிமையிலாவது பாடுவீர்களா?
கலைஞர்: எனக்குப் பாட்டுக் கேட்பதிலே மிகுந்த ஆர்வம் உண்டு. தனிமையில் யாரும் இல்லாத நோரத்தில் பாடல்கனை முணுமுணுப்பேன். யார் காதிலும் விழும்படி பாடினால், ஒரு வேளை அவர்கள் முணுமுணுப்பார்கள். (சிரிப்பு)
கல்கி : என்ன பாடலை முணுமுணுப்பீர்கள்?
கலைஞர்: இந்தப் பாடல் என்று கிடையாது. எந்தப் பாடலை வேண்டுமானாலும் முணுமுணுப்பேன்.
கல்கி : உங்களுடைய மேடைப் பேச்சு எல்லோரையும் கவர்கிறது. உங்களைக் கவர்ந்த மேடைப் பேச்சாளர் யார்?
கலைஞர் : அறிஞர் அண்ணா. முதறிஞர் ராஜாஜி இருவருமே என்னைக் கவர்ந்தவர்கள்.
கல்கி : ராஜாஜிக்கும் உங்களுக்குமான உறவு பற்றிச் சொல்லுங்களேன்!
கலைஞர் : அண்ணாவுக்கும் ராஜாஜிக்கும் தேர்தல் உறவு ஏற்படுவதற்கு நான் பாலமாக இருந்திருக்கிறேன். சுதந்திர வெள்ளி விழாவின் போது அவருக்குத் தாமிரப் பத்திரம் வந்திருந்தது. அப்போது ராஜாஜி, "எனக்குத் தாமிரப் பத்திரம் வந்திருப்பதாகப் பத்திரிகைகளில் பார்த்தேன. என்னால் வர முடியவில்லை. யாரிடமாவது கொடுத்து அனுப்பி விடுங்கள்!"என்று எனக்கு எழுதினார். அதை நானே எடுத்துக் கொண்டுபோய் அவரிடம் தட்டில் வைத்துக் கொடுத்தேன். அவர் எனக்கு மாலை போட்டு வாங்கிக் கொண்டார்.
62ல், திமுகவுக்கும் சுதந்திரா கட்சிக்கும் தேர்தல் உடன்பாடு வரவில்லை. அப்போது தஞ்சாவூருக்கு வந்து ராஜாஜி தேர்தல் கூட்டத்தில் பேசும்போது அங்கே என்னை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட கரத்தை சண்முக வடிவேலு மேடையிலிருந்த ராஜாஜிக்கு ஒரு மாலையைப் போட்டு ஆசிர்வாதம் கேட்டிருக்கிறார். அப்போது ராஜாஜி, 'என் ஆசிர்வாதம் உமக்கு; ஆதரவு கருணாநிதிக்கு' என்று சொன்னார். அதெல்லாம் மறக்க முடியாத வாசகங்கன்.
கல்கி: உங்களைப் பற்றி உங்களிடமே வெளிப்படையாக விமர்சனம் செய்பவர்கள் இருக்கிறார்களா?
கலைஞர் : இருக்கிறார்கள்.
கல்கி : கட்சியில் இருப்பவர்களா? கட்சிக்கு அப்பாற்பட்டவர்களா?
இந்தக் கேள்விக்குக் கலைஞர் கூறிய பதில் என்ன? அவரைப் பற்றி அவரிடமே வெளிப்படையாக விமர்சனம் செய்பவர்கள் யாராக இருக்கும்?
இதற்கான கலைஞரது பதிலை நாளை காண்போம்.
கல்கி 14.06.1998 இதழிலிருந்து
தொகுப்பு: எஸ். சந்திர மௌலி