கல்கி

கலைஞர் நினைவாற்றலின் ரகசியம் என்ன? | கலைஞர் 100

கலைஞரும் கல்கியும்

கல்கி டெஸ்க்

கலைஞரின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.

கலைஞரது 75வது பிறந்த நாளை ஒட்டி வெளியான 07.06.1998 மற்றும் 14.06.1998 ஆகிய இரு கல்கி இதழ்களில் “கலைஞர் 75” என்ற தலைப்பில் அவரது முற்றிலும் மாறுபட்ட பேட்டி வெளியானது.

கடந்த சில தினங்களாக ஐந்து பகுதிகளாக அந்த சுவாரசியமான பேட்டியை படித்து ரசித்தோம். இதோ அதன் தொடர்ச்சி:

கல்கி: உங்களைப் பற்றி உங்களிடமே வெளிப்படையாக விமர்சனம் செய்பவர்கள் இருக்கிறார்களா?

கலைஞர் : இருக்கிறார்கள்.

கல்கி : கட்சியில் இருப்பவர்களா? கட்சிக்கு அப்பாற்பட்டவர்களா?

கலைஞர்: என்னுடைய அமைச்சர்களாக இருப்பவர்கள் கூட ஒரு சிலர் வெளிப்படையாக விமர்சனம் செய்வார்கள். அதற்காக அவர்களிடத்திலே நான் கோபம் கொள்வதில்லை. முரசொலி மாறனும் செய்வார். பலருடைய விமர்சனங்களையும் சிந்திதது முடிவெடுப்பதற்கு ஏற்ற வகையில் வரவேற்பேனேயல்லாமல் புறக்கணிக்க மாட்டேன்.

தல்கி: ஓய்வு கிடைத்தால் நீங்கள் செல்ல விரும்பும் இடம் எது?"

கலைஞர்: ஓய்வு கிடைககும்போது சொல்லுகிறேன்.

கல்கி: தமிழ் தவிர உங்களுக்கு வேறு எந்த மொழி பிடிக்கும்? இந்திய மொழிகளில் கேட்கிறோம்!

கலைஞர்: சுந்தரத் தெலுங்கு.

கல்கி : உங்கள் நினைவாற்றலின் ரகசியம் என்ன?”

கலைஞர் : ஒவ்வொரு நிகழ்ச்சியும் என் மனதில் பதிந்து போகிற அளவுக்கு அதில் ஆழ்ந்து போய் விடுவேன். அதனால்தான் நபல காலத்துக்குப் பிறகும் நினைவுக்கு வருகிறது. பொதுவாக நினைவாற்றல் என்பது உடற்கூறு சம்மந்தப்பட்ட விஷயம்தான். கூடவே நாம் காட்டுகிற ஈடுபாடு.

கல்கி : தலைவன் – தொண்டன் உங்கள் விளக்கம் என்ன?

கலைஞர் : தலைவன் தன்னைத் தொண்டனாகக் கருதிக் கொண்டு பணியாற்றினால், தலைவனுக்குரிய சிறப்பைப் பெறுகிறான். தொண்டன் இல்லாமல் தலைவன் இல்லை.

கல்கி : இன்றைய சினிமாக்கள், பத்திரிகைகள் எல்லாமே பெரும்பாலும் அரசியல்வாதிகளை மக்கள் விரோதிகளாகத்தான் சித்திரிக்கின்றன. இதில் எந்த அளவுக்கு உண்மையிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

கலைஞர் : தவறானது. எல்லா அரசியல்வாதிகளுமே மக்கள் விரோதிகளாக இருக்க முடியாது. அப்படிச் சித்திரிக்கின்ற சினிமாக்களில் உள்ள கலைஞர்களே கூட எல்வோரும் நல்லவர்கள் என்று ஏற்றுக் கொண்டுவிட முடியாது. எல்லாவற்றிலும் சில களைகள் இருக்கும். களைகளையே பயிர்களாகச் சித்திரிக்கக் கூடாது என்பதுதான் எனது கருத்து.

கல்கி : அக்கால சினிமாக்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. உங்களைப் போன்றவர்களின் பிரவேசத்தால் வசனங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அண்மைக் காலத்தில் நீங்கள் எழுதியபோது கூட வசனங்களுக்கு முக்கியத்துவம் தந்ததாகத் தெரியவில்லையே, ஏன்?

கலைஞர் : வசனங்களுக்கு முக்கியத்துவம் என்பது அந்தந்தக் கதைகளைப் பொறுத்தது. வரலாற்றுக் கதை, மன்னர் கால கதை, வரலாற்றை அடிப்ப டையாகக் கொண்ட கதை, சமூகக்கதை, சமூக நிலைகளை விளக்குகின்ற கதை இப்படிப் பல கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஏற்றவாறுதான் வசனங்கள் எழுதப்பட வேண்டும் என்பது என் கொள்கை. ஒருமுறை வசனங்களைப் பற்றி ஒரு பட்டிமன்றத்துக்கு கலைவாணர் ஏற்பாடு செய்திருந்தார். அதில் நான், எஸ்.டி.சுந்தரம், டி.கே. சண்முகம், எஸ்.வி.சஹஸ்ரநாமம் இன்னும் சில எழுத்தாளர்களுமாகக் கலந்து கொண்டோம்.

அதில் இலக்கண சுத்தமான வசனங்கள் கூடாது என்று ஒரு தரப்பு. நான் பேசும் போது, 'ஒரு சமூகக் கதையில் காலையில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கிற கணவனிடம் மனைவி, காப்பி கொண்டு வந்து கொடுக்கும்போது, 'இந்தாங்க, காப்பி சாப்பிடுங்க" என்றுதான் சொல்லுவாள். அதை விட்டு விட்டு, “அத்தான்! காப்பி சாப்பிடுங்கள்'; 'சரி கண்ணே! கொண்டு வா!” என்று அவர்களுக்கு உரையாடல் எழுதினால் அது பொருத்தமில்லாதது என்று பேசினேன்.

அதே நேரத்தில் அதுவொரு வரலாற்றுப் படமாக இருக்கிற போது, எதிரி கோட்டையை நோக்கி வருகிறான். மன்னன் அந்தப்புரத்தில் மகாராணியோடு உல்லாசமாக இருக்கிறான். அங்கே ஓடி வருகிற காவலன் கதவைத் தட்டி. 'மன்னா" மாற்றான் படையெடுத்து வருகிறான். நமது கோட்டையை நோக்கி வந்து விட்டாாகள்" என்றுதான் சொல்ல வேண்டும்.

அதற்கு மன்னன் சமூகக் கதையில் வருகிற மாதிரி, "அப்படியாடா! தளபதியைக் கூப்பிடுடா!” என்று சொல்ல மாட்டான். 'அப்படியா!' கூப்பிடு தளபதியை! அணி வகுக்கச் சொல் நம் படைகளை!" என்று சொன்னால்தான் கம்பீரமாக இருக்க முடியும். என்னுடைய படங்களை எடுத்துக் கொண்டாலும் பராசக்தி ஒரு மாதிரி இருக்கும். மனோகரா வேறு மாதிரி இருக்கும். மலைக்கள்ளன் வசனம் ஒவ்வொரு வரியில்தான இருக்கும். இருவர் உள்ளம் வசனமும் சின்னச்சின்ன வரிகளில்தான்

இருக்கும் அப்போதுதான கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் பொருந்துமாக வசனங்கள் அமையும். அப்படித்தான் நான் அமைத்திருக்கிறேன்.

கல்கி : நீங்கள் விரும்பிப் படிப்பது எது? கவிதையா, சிறுகதையா? நாவலா?

கலைஞர் : அது எழுதிய எழுத்தாளர்களைப் பொறுத்து இருக்கிறது. பல்வேறு நாவல்களுக்கு மத்தியில் கல்கியின் பொன்னியின் செல்வன் இருந்தால் - இதை நான், ராஜேத்திரன் இங்கே இருக்கிறார் என்பதற்காகச் சொல்லவில்லை – நான் பொன்னியின் செல்வனைத்தான் எடுத்துப் படிப்பேன். அதே போல், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் கவிதைகளைத்தான் எனக்கு முதலில் எடுக்கத் தோன்றும்,

கல்கி 14.06.1998 இதழிலிருந்து

தொகுப்பு: எஸ். சந்திர மௌலி

மூச்சரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT